Thursday, December 29, 2011

செய்தியாளர்களின் கேள்விகளால் திணறிய ஹஸாரே

19864_L_anna-hazare
மும்பை:வலுவான லோக்பால் மசோதாவிற்காக மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹஸாரே மக்கள் ஆதரவு குறைவு மற்றும் உடல்நிலை சீர்குலைவு ஆகிய காரணங்களால் 3 நாட்கள் உண்ணாவிரதத்தை 2 நாளில் கைவிட்டார்.
இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஹஸாரேவை நோக்கி செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பித் திணறடித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மிகக் குறைவாக மக்கள் வந்திருப்பது குறித்து ஒரு நிருபர் கேட்டதற்கு, “என்னிடம் அதிகாரமில்லை, பணமுமில்லை. ஆனாலும் மக்கள் வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்களிடம் ஏற்பட இருக்கும் எழுச்சியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று பதிலளித்தார் ஹஸாரே.
காங்கிரஸை எதிர்ப்பது ஏன்? உங்களுடைய லோக்பால் மசோதாவுக்கு பல கட்சிகள் ஆதரவளிக்கவில்லை. அப்படியிருக்கும் போது காங்கிரஸை மட்டுமே ஏன் வில்லனாகப்
பார்க்கிறீர்கள்? சோனியாவையும், ராகுல் காந்தியையும் ஏன் குறிவைத்துத் தாக்குகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த ஹஸாரே, “காங்கிரஸ்தான் இந்த நாட்டைச் சீரழித்தது. கடந்த 5 மாதங்களில் காங்கிரஸ் கட்சி எங்களை வஞ்சித்து விட்டது. பிற கட்சிகளை எதிர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்றார்.
மக்களவையில் ஹஸாரேவின் போராட்டத்துக்கு எதிராக பாஜக நடந்து கொண்டதை ஒரு செய்தியாளர் சுட்டிக் காட்டினார். பாஜகவின் துரோகத்தை எதிர்த்து பிரசாரம் செய்வீர்களா என்றும் கேட்டார்.
இந்தக் கேள்வியால் அதிருப்தியடைந்த ஹஸாரே, “காங்கிரஸ்தான் எங்களுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்தது” என்று கூறிவிட்டு மேடையை விட்டு சட்டென இறங்கிச் சென்றுவிட்டார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது.
இதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அரவிந்த் கேஜரிவாலும், மணீஷ் சிசோடியாவும் பதிலளித்தனர்.
வருங்காலத் செயல் திட்டம் பற்றி விளக்கிய கேஜ்ரிவால், “லோக்பால் மசோதாவில் இன்னும் சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசுக்கு நெருக்கடி தருவோம்.
போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்றார்.
லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் அரசின் மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “அரசியல் சாசன அந்தஸ்து அளிப்பதால், லோக்பால் அமைப்பின் அதிகாரம் கூடவோ குறையவோ போவதில்லை” என்றார் கேஜரிவால்.
உண்ணாவிரத மைதானத்தில் கூட்டத்தைத் திரட்டுவதற்காக ரயில் நிலையங்களுக்கு பஸ்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றியும் நிருபர்கள் கேட்டனர். ஆனால் இந்த பஸ்களுக்கு தாங்கள் பணம் தரவில்லை என ஹஸாரே குழுவினர் தெரிவித்தனர்.
நன்றி தூது ஆன்லைன் 

ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படை வெளியேற்றம் - பலூஜாவில் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்


ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியதை அடுத்து ஈராக்கின் பல்வேறு நகரங்களிலும் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அமெரிக்க ஆக்கிரமிப்பு படைக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்த பலூஜா நகர் மக்கள் ஆயிரக் கணக்கில் அணிதிரண்டு தமது வெற்றியைக் கொண்டாடுகின்றனர். 2003 மார்ச் மாதம் ஈராக்கை அமெரிக்கப் படையினர் ஆக்கிரமித்ததோடு முன்னாள் ஆட்சியாளர் சதாம் ஹுஸைன் பதவி கவிழ்க்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
கடந்த 9 ஆண்டுகளாக ஒரு இலட்சத்தி எழுபது ஆயிரம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நிலை கொண்டிருந்தபோது பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவந்தனர்.
சுமார் ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு விஞ்ஞானிகள் மற்றும் புத்திஜீவிகள் பல்லாயிரக் கணக்கானோர் அமெரிக்கப் படையினரால் குறிவைத்து கொல்லப்பட்டனர்.
ஜோர்ஜ் புஷ்ஷினால் மேற்கொள்ளப்பட்ட ஈராக் மீதான ஆக்கிரமிப்புக்கு முன்னாள் பிரிட்டன் பிரமர் டொனி பிளேயர் ஆதரவளித்திருந்தார்.
2004 இல் ஈராக் மீதான போரை பிரச்சார மேடைகளில் ஈடுமையாக விமர்சித்து வந்த ஒபாமா தற்போது ஈராக்கில் இருந்து வெளியேறியுள்ள அமெரிக்க இராணுவத்தை வட கரோலினாவில் உள்ள படை முகாமில் வரவேற்றுள்ளார்.
ஈராக்கின் கீழ் கட்டுமானத்தை முற்றாகவே தாக்கி அழித்த அமெரிக்கப் படையினர் பாலியல் வல்லுறவு, சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 9 ஆண்டுகால மெரிக்க ஆக்கிரமிப்பின்போது ஈராக்கின் எண்ணை வளம் தனியார் மயப்படுத்தப்பட்டு அமெரிக்கக் கம்பனிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம் வெளியேறும் இத்தறுவாயில் பிரதமர் நூரி மாலிகி ஜனாதிபதி ஒபாமாவுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படை வெளியேறியமை ஓர் அசாதாரண சாதனை என ஒபாமா தெரிவித்துள்ளார்.
2003 மார்ச்சில் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டபோது நிலவிய பரபரப்பு அமெரிக்கப் படை வெளியேறிய போது ஏற்படவில்லை.
சுமார் 5000 அமெரிக்கப் படையினர் இதில் கொல்லப்பட்டுள்ளனர் என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டாலும் கொலையுன்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஈராக் ஆக்கிரமிப்பில் தோற்றுப்போன நிலையிலேயே அமெரிக்கப்படை வெளியேறியுள்ளது. படை இழப்பு மட்டுமன்றி வகை தொகையற்ற நிதியையும் அமெரிக்கா இந்த யுத்தத்தின் மூலம் இழந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நிதி நெருக்கடியின் எதிரொலியே இப்படை வெளியேற்றம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையில் கோலாலம்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஈராக் யுத்தத்தின் இரு முக்கிய சூத்திரதாரிகளான ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் ஆகியோரை போர்க் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
இவர்கள் இருவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தூக்கில் இடப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
நன்றி மீள்பார்வை 

நாம் இஹ்வான்களுக்கே வாக்களித்தோம், அவர்களே மிகுந்த புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையுமுடையவர்கள் - பாதிரியார் மகார் பௌசி


Father Maher Fowzi
எகிப்தின் அலக்ஸாந்திரியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இஹ்வான்களின் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் வேற்பாளர்களுக்கே வாக்களித்தனர். அவர்களை நாங்கள் புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் மிக்கவர்களாகவே காண்கின்றோம் என அலக்ஸாந்திரியா கிறிஸ்தவ ஆலயத்தின் ஆயர் பாதிரியார் மகார் பௌசி தெரிவித்துள்ளார்.

ஒரு சில விடயங்களில் நாம் அவர்களுடன் உடன்படாத போதும் நிறைய விடயங்களில் நாங்கள் அவர்களுடன் உடன்படுகின்றோம். பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் இயலுமை அவர்களுக்கே உள்ளது என்பதால் நாம் அவர்களுக்கே வாக்களித்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள் என்றவகையில் இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு சாதாரணமானது எனத் தெரிவித்திருக்கும் அவர் கிறிஸ்தவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் முஸ்லிம்களுடன் நல்லிணக்கமாக இருத்தல் அல்லது அவர்களுடன் வாழ்தல் என்பது புதிய ஒரு விடயமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவிர இஸ்லாமிய கருத்துப் போக்குக் கொண்டவர்களை மிதவாத இஸ்லாமியவாதிகளால் சமாளிக்கமுடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கிறிஸ்தவர்களின் பிரச்சினைகளுக்காக மக்கள் சபையில் கிறிஸ்தவர்களைப் பார்க்கிலும் முஸ்லிம்களே பலமாக ஆதரித்துப் பேசக்கூடியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி மீள்பார்வை 

அரபு வசந்தம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரானது – கொமேனி


டெஹ்ரான்:ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஈரானின் தூதர்கள் மத்தியில் கடந்த புதனன்று உரையாற்றிய ஈரானின் முன்னால் அதிபரும் முதுபெரும் தலைவரான ஆயத்துல்லா கொமேனி; தற்போது அரபு நாடுகளில் இஸ்லாமிய கட்சிகள் வெற்றி எண்ணிக்கைகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடுவது பிராந்தியத்தில் இஸ்லாமிய போராட்டங்களை வலுவை காட்டுகிறது.

பிராந்தியத்திலும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் பெரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் அதை நாம் உற்று நோக்குவது முக்கியமானது என்றும் குறிபிட்டுள்ளார். மேலும் அரபு நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்கா இருந்து செயல் படுவதாக கருதுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை எனவும் 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சியையும் இதுபோல் தான் கூறினர். ஆனால்  மேலும் தற்போதைய நிகழ்வுகளுக்கும் முன்னர் நடந்த போராட்டங்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே அமெரிக்காவின் பங்கும் எதிர்ப்பும்தான் என்று ஆயத்துல்லா கொமேனி தெரிவித்துள்ளார்.
மேலும் அரபு நாடுகளில் நடுக்கும் மாற்றத்தையும் மற்றும் உலகத்தில் நடக்கும் மாற்றங்களையும் உற்று கவனிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த போராட்டங்கள் அவர்களின் விழிப்புணர்வை காட்டுகிறது என்றும் இந்த விழுப்புணர்வு இஸ்லாமிய ரீதியானது, அரபு நாடுகளில் ஏற்படும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரானது என்றும் கூறினார்.
நன்றி தூது ஆன்லைன் 

ஈராக்:நாட்டைவிட்டு வெளியேறாத 8000 அமெரிக்க ராணுவத்தினர்


பாக்தாத்:ஈராக்கில் இருந்து அமெரிக்க படையினர் முற்றிலும் வாபஸ் பெற்றதாக வாஷிங்டன் கூறிய பொழுதிலும் 8 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் போருக்கான தயாரிப்புகளுடன் வடக்கு ஈராக்கில் குர்திஸ்தான் பகுதியில் முகாமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.14 போர் விமானங்கள், 125 ஹெலிகாப்டர்கள், 28 ட்ரோன்கள்(ஆளில்லா விமானங்கள்) ஆகியன அமெரிக்க ராணுவத்துடன் ஈராக்கில் தற்பொழுதும் உள்ளதாக ப்ரஸ் டி.வி கூறுகிறது.

ஈராக்கில் இருந்து வாபஸ் பெற்ற ராணுவத்தை பாரசீக வளைகுடாவில் பல்வேறு நாடுகளுக்கும், குவைத்திற்கும் அனுப்பிய பிறகும் வடக்கு ஈராக்கில் 8 ஆயிரம் ராணுவ வீரர்கள் உள்ளனர்.இம்மாதம் 16-ஆம் தேதி ஈராக் ராணுவத்திடம் ராணுவ தளத்தை அமெரிக்க ராணுவம் ஒப்படைத்தபோதிலும் ஈரானில் இருந்து உருவாகும் அச்சுறுத்தலை தடுப்பதன் பேரில் குர்திஸ்தானில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக குர்திஸ்தான் தலைநகரான அர்பிலில் அமெரிக்க தூதரக அதிகாரி ஈரான் எதிர்ப்பு குர்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன் 

முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது எஃப்.பி.ஐ?

imagesCAQAPC56
வாஷிங்டன்:தாலிபான் தலைவர் முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ நீக்கியுள்ளது.பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் எக்ஸ்ப்ரஸ் ட்ரிப்யூன் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
தாலிபான் போராளிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ள வேளையில் இச்செய்தி வெளியாகி உள்ளது.தாலிபானுடன் நல்லிணக்கம் ஏற்படுத்த முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியதாக அச்செய்தி கூறுகிறது.2001 ஆம் ஆண்டு செப்.11 தாக்குதலை காரணம் காட்டி அமெரிக்கா ஆப்கானிஸ்தானை அநியாயமாக ஆக்கிரமித்த வேளையில் முல்லா உமர்தான் ஆப்கானின் ஆட்சியை தலைமையேற்று நடத்தி வந்தார். 2001-ஆம் ஆண்டு உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது தாக்குதல் நடத்திய முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவராக முல்லா உமரையும் அமெரிக்கா குறிப்பிட்டது.அமெரிக்க ஆக்கிரமிப்பின் துவக்கத்தில் தலைமறைவான முல்லா உமர் பின்னர் பொது அரங்கில் தென்படவில்லை.
ஆனால், முல்லா உமர் எஃப்.பி.ஐயின் தீவிரவாத பட்டியலில் இடம்பெறவில்லை என்றும், ஆனால் வெளியுறவுத்துறை அவரை பிடித்து தந்தால் பரிசு அறிவித்தது என எஃப்.பி.ஐயின் செய்தித்தொடர்பாளர் பால் ப்ரஸனை மேற்கோள்காட்டி அமெரிக்க மாத இதழான அட்லாண்டிக் கூறுகிறது.இச்செய்தி சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து பாக்.பத்திரிகையான எக்ஸ்ப்ரஸ் ட்ரிப்யூன் இச்செய்தியை தமது இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டது.
நன்றி தூது ஆன்லைன் 

தடை ஏற்படுத்தினால் ஹோர்முஸ் கடல் வழியை மூடுவோம்-ஈரான் எச்சரிக்கை


hormuz

டெஹ்ரான்:அணுசக்தி திட்டத்தின் பெயரால் மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது தடைகளை திணித்தால் வளைகுடா நாடுகளின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி வழியான ஹோர்முஸ் கடல் பகுதியை மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் துணை அதிபர் அலி ராஹிமி இந்த எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு விடுத்துள்ளார்.இச்செய்தியை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான இர்னா வெளியிட்டுள்ளது.
கடல்வழியை மூடுவது எளிதானது என ஈரான் கடற்படை தலைமைத்தளபதி அட்மிரல் ஹபீபுல்லாஹ் ஸயரி கூறினார்.ஹோர்முஸ் கடல் வழி அருகே ஈரான் கடற்படை போர் ஒத்திகை நடத்தியபிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா பகுதியில் எண்ணெய் உற்பத்திச்செய்யும் நாடுகளான பஹ்ரைன், குவைத், சவூதி அரேபியா, யு.ஏ.இ, கத்தர் ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹோர்முஸ் கடல் வழியை நாடுகின்றன.உலகிலேயே கடல் வழியிலான எண்ணெய் வர்த்தகத்தின் 40 சதவீதமும் ஹோர்முஸ் வழியாகத்தான் நடைபெறுகிறது.ஆகையால் இப்பாதையை மூடினால் பெரும் எண்ணெய் நெருக்கடி உருவாகும்.
அணுஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ஈரானின் எண்ணெய் துறை மீது தடையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள வேளையில் ஈரானும் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராகியுள்ளது.கடற்படை ஒத்திகை என்பது ஈரான் வழக்கமாக நடத்துவதுதான் என்றாலும், இம்முறை ராணுவத்தின் சக்தியை பிரகடனப்படுத்தும்விதமாக இந்த ஒத்திகை அமைந்தது.
நன்றி தூது ஆன்லைன்