எட்டாவது நூற்றாண்டில் சிந்து மாகாணப் பகுதியை முஸ்லிம்கள் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். இருப்பினும் கி.பி.1205 வரை டில்லியைத் தலைநகராகக் கொண்டு வட இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி ஏற்படவில்லை. கி.பி.1206-இல் கோரிமுகம்மதுவின் பிரதிநிதியான குத்புதீன் டில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினார். அவர் துருக்கி நாட்டைச் சார்ந்தவர். இந்தியாவில் முகலாயர் களின் ஆட்சியை 1526-இல் பாபர் நிலைநிறுத் தினார். அவரது சந்ததிகள் 1764 வரை இந்தியாவை ஆண்டனர். பெயரளவிற்கு டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறிய பகுதியில் 1857 வரை முகலா யர்கள் ஆண்டனர். பஹாதூர் ஷா கடைசி மன் னர் ஆவார். சிப்பாய்க்கலகம் என்று வெள்ளையர் களால் குறிப்பிடப்பட்ட முதல் சுதந்திரப்போர் 1858-இல் முடிவுக்கு வந்தபோது பஹாதூர் ஷா கைது செய்யப்பட்டு பர்மா நாட்டில் சிறை வைக்கப்பட்டார்.
மத்திய காலத்தில் அக்பர், ஷாஜஹான் அவுரங்கசீப் போன்ற பிரசித்தி பெற்ற மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். இருப்பினும் நாம் கஜினி முகம்மதுவையும் முகம்மது துக்ளக்கையும் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் - இவர்களைப் பற்றி மக்களிடையே முற்றிலும் தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. கஜினி முகம்மது தோல்விக்கு ஒப்பற்ற உதாரணமாகக் காட்டப்படுகிறார். “அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவை படையெடுத்தார் என்று கூறப்படுகிறது. அதன் உட்பொருள் அவர் முதல் பதினாறு முயற்சிகளில் தோல்வியைத் தழுவினார், பதினேழாவது முயற்சியில் சோம்நாத் நகரைக் கைப்பற்றினார் என்பதாகும். ஒரு திருத்தம் என்னவெனில் அவர் பதினாறாவது படையெடுப்பில் சோம்நாத் நகரைக்கைப் பற்றினார். பதினேழாவது படையெடுப்பில் ஜாட் மன்னர்களைத் தோற்கடித்தார். உண்மை நிலை என்னவெனில் உலக சரித்திரத்தில் தலைசிறந்த மாவீரர்களில் ஒருவராக கஜினி முகம்மது குறிப் பிடப்படுகிறார். அலெக்சாண்டர் சிந்து நதிக்கரை வரை வந்துவிட்டு கிரேக்க நாட்டிற்குத் திரும்பி விட்டார். நெப்போலியன் ரஷ்யர்களாலும் ஆங் கிலேயர்களாலும் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் கஜினி முகம்மது ஒருவர்தான் எல்லாப் போர்களிலும் வாகை சூடித் தோல்வியை ஒரு போதும் காணாத மாவீரர்!
அப்படி என்றால் இந்தப் பதினேழு படை யெடுப்புகள் ஏன்? ஆம். அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவைகள் போர் தொடுத்தார் என்பது சரித்திர அடிப்படையிலான உண்மைதான். அவரது ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஒரு நகர் அல்லது ஒரு பகுதியைக் கைப்பற்றினார். இந்தியாவின் எல்லை நகரங்கள் - கைபர் கணவாயை ஒட்டிய பகுதி - கி.பி.1000, 2. பெஷாவர் மற்றும் வால்ஹிந்த் கி.பி.1001, 3. பீரா (பாட்டியா) 1004, 4. மூல்டான் 1006, 5. நவாஸா 1007, 6. நாகர்க்கோட் 1008, 7. நாராயண் 1009, 8. மூல்டான் 1010, 9. நிந்துனா 1013, 10. தாணேசர் 1014, 11.லோஹ் கோட் 1015, 12. மதுரா மற்றும் கன்னோஜி 1018, 13. ராஹிப் 1021, 14. கிராட் லோஹ்கோட் மற்றும் லாஹோர் 1022, 15. க்வாலியர் மற்றும் காளிஞ்ஜார் 1023, 16. சோம்நாத் 1025, 17. ஜாட் மன்னர்கள் 1026.
கஜினி முகம்மதுவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் நாம் முன்பே குறிப்பிட்டபடி - நாடு பிளவுபட்டு மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடுபட்டதுதான். சிந்து நதிக்கரையில் காந்தாரப் பகுதியைப் பிராமண மன்னர்கள் ஆண்டு வந்தனர். டில்லி கன்னோஜி பகுதிகள் கல்தோமரர்கள் வசம் இருந்தது. புத்த மதத்தைத் தழுவிய பாலர்கள் கங்கை நதிப்பகுதியில் மகத நாட்டை ஆண்டு வந்தனர். குப்தப் பேரரசின் சந்ததியினர் மால்வா பகுதியை ஆண்டனர். நர்மதைப் பகுதி காலாச்சூரிகள் வசம் இருந்தது. இவர்கள் மட்டும் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கஜினி முகம்மது நிஜமாகவே தோற்று ஓடி இருப்பார். ஆனால் இவர்களது ஒற்றுமை இன்மையும் பரஸ்பரப் பூசல்களும் இந்தியாவின் மீது படை எடுப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.
கஜினி நகரில் முகம்மதுவின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது. பேரறிஞர்களையும் புலவர் களையும் அவர் ஆதரித்தார். பாரசீக மொழியின் மிகப் பிரசித்தி வாய்ந்த கவிஞர் ஃபிர்தௌசி கஜினியின் தர்பாரில்தான் இருந்தார். அதேபோல் புகழ்பெற்ற வானியல் மற்றும் வர லாற்றுப் பேரறிஞர் அல்பெரூனி கஜினியின் சபையை அலங்கரித்தார். கஜினி ஒரு அழகிய நகரமாகத் திகழ்ந்தது. அவரது ராஜ்ஜியம் கஜினி நகருக்கு மேற்குத் திசையில் மத்திய ஆசியா வரை பரவி இருந்தது. அவரைத் தோல்விக்கு உதாரணமாக நாம் கொண்டுள்ள கணிப்பு தவறு என்று சுட்டிக் காட்டுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். அவருக்கு நாங்கள் மன்னிப்பு வழங்கவில்லை.
முகம்மது துக்ளக்
இப்போது துக்ளக் பற்றிய தகவல்கள்:
டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இவர் இந்திய நாட்டில் 1321 முதல் 1388 வரை 67 ஆண்டு களுக்கு ஆட்சி செலுத்தினார். 1340ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் தலைநகரைத் தென்னிந்தியப் பகுதியில் உள்ள தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரி தௌலத்தாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் அரசாங்கப் பணியாளர்கள் இந்த மாற்றத்தை விரும்ப வில்லை என்பதாலும் அந்த ஆண்டில் அங்குக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதாலும் தலைநகர் மீண்டும் டெல்லிக்கு மாற்றப்பட்டது. அவரது இந்த ஒரு செயலை வைத்து அவருக்குக் கோமாளி என்று பட்டம் சூட்டிப் பலரும் மகிழ்கின்றனர்.
உண்மையில் துக்ளக் கோமாளி அல்ல பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டான்லீலேன் பூல் அவர்களது வார்த்தைகளில் அவரது எண் ணங்களும் செயல்களும் முன்னோடித் தன்மை கொண்டவை. அவர் புத்திக் கூர்மை படைத்தவர் மற்றும் சிந்தனையாளர். அவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் அவர் வல்லுநராகத் திகழ்ந் தார். இந்தியக் கல்வியில் இலத்தினாகக் கருதப் பட்ட பாரசீக மொழியில் அவர் கவிதை எழுதி வந்தார். அவரது உரைநடையும் ஒப்பற்றது. மேடைப்பேச்சிலும் வல்லவர். தத்துவஞானி - குறிப்பாக கிரேக்க தத்துவ ஞானத்தை நன்கு கற்றிருந்தார். கூடவே தர்க்க இயலும் (லாஜிக்) கணிதம் மற்றும் அறிவியல் துறைகளிலும் ஞானம் உள்ளவர். சமகாலத்துப் பேரறிஞர்கள் அவரிடம் பேசுவதற்கு அச்சப்பட்டனர். அக்காலத்தில் பிர பலமாகி இருந்த கையெழுத்துக் (குர்ஆன் போன்ற நூல்களை அழகிய எழுத்துக்களில் நகல் எடுப்பது) கலையிலும் வல்லவர். அவரது அழகுணர்வு அவரது முத்திரையுடன் வெளியிடப்பட்ட நாண யங்களின் வாயிலாகப் புலனாகிறது.
சுருக்கமாகச் சொல்வதானால் அக்காலத்திய கலாசாரத்தின் சிறப்பு அம்சங்களை அவரிடம் காணமுடிந்தது. அவரது மேதா விலாசத்துடன் அவரது நினைவாற்றலும் போற்றக்கூடியதே. அதே போல் அவரது நெஞ்சுறுதி - தளராத அயராத உறுதிபடைத்த உள்ளம் அவருக்கு இருந்தது. தலைநகரை மாற்றியது, நாணயப் புழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தது - எல்லாமே நல்ல திட்டங்கள்தான். மத்திய கால இந்திய வரலாற்றில் ஏனைய நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பிய விஷயத்தில் அவர் ஒரு முன்னோடி. அவரது ஆப்பிரிக்க நாட்டின் (மொராக்கோ) தூதரான பிரசித்தி பெற்ற இபன்பட்டூட்டா துக்ளக்கின் சபையை அலங்கரித் தார்.
தலைநகரை மாற்றியது பற்றிச் சில வார்த்தைகள் துக்ளக்கின் சாம்ராஜ்யம் வட திசையில் இமயமலையிலிருந்து தென் திசையில் மதுரை வரையிலும், மேற்குத் திசையில் பெஷாவரிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் பரவி இருந்தது. ரயில்வேக்களும் தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலம் அது. மாட்டு வண்டிகளும் குதிரைகளும்தான் பயணச் சாதனங்கள். அத்தகைய சூழலில் புவியியல் அடிப்படையில் நாட் டுக்கு மையமான ஒரு இடத்தைத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது அவரது புத்திக் கூர்மைக்கும் ராஜதந்திரத்திற்கும் ஒரு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும். இதில் கோமாளித்தனம் என்ன இருக்கிறது?
அந்த மகாமேதை 1388ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்.
No comments:
Post a Comment