கோழிக்கோடு:போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹானை பற்றி பாலியல் ரீதியாக மோசமான விமர்சனங்களை வெளியிட்ட முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஜாவேத் ஷேக் என்ற பிராணேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாதன் பிள்ளை தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு(NCHRO) சார்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியிருப்பதாவது: கொலை நடந்த வேளையில் அவதூறாக பதிலளித்த ஜி.கே.பிள்ளை மீது வழக்கு பதிவுச்செய்வது குறித்து ஆலோசிப்போம். கடந்த 10 வருடங்களாக நடந்த என்கவுண்டர் படுகொலைகளை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
இஷ்ரத்தும், கெளஸர்பீயும் கொலைச் செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக பிரேதபரிசோதனை அறிக்கை கூறுகிறது. முஸ்லிம் என்பதால் ஜாவேதை கொலைச் செய்தார்கள் என முதலில் கருதினேன். ஆனால் இஷ்ரத்தை தொந்தரவு செய்த போலீஸ்காரர்களை கஸ்டடியில் இருக்கும் வேளையில் தடுத்ததால் ஜாவேதை கொலைச் செய்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.
குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகள் பணியிலிருந்து விலகிய வேளையில் பாகிஸ்தானில் இருந்து மோடியை கொல்ல தீவிரவாதிகளும் வருவதில்லை. என்கவுண்டர்களில் கொலைச் செய்பவர்களின் வழக்குகளை மிகவும் அபூர்வமான வழக்குகளாக கருதி குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிட வேண்டும்.
சாதாரண குடிமக்கள் செய்யும் குற்றத்தை விட பெரியது குற்றத்தை தடுக்கவேண்டிய போலீஸ் குற்றம் செய்வது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. போலி என்கவுண்டருக்கு வழிவகுக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம், பொடா போன்ற கறுப்புச் சட்டங்களை ரத்துச்செய்ய வேண்டும். இவ்வாறு கோபிநாதன் பிள்ளை கூறினார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் NCHRO-வின் கேரள தலைவர் கன்னத்தூர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கெ.பி.ஒ.ரஹ்மத்துல்லாஹ், என்.எம்.சித்தீக் ஆகியோர் பங்கேற்றனர்.
நன்றி http://www.thoothuonline.com
நன்றி http://www.thoothuonline.com
No comments:
Post a Comment