லவ புராண ஒளியில் முசுலீமின் எதிர்வினையாய் ஆர்.எஸ்.எஸ் விசுவரூப தரிசனம்!

லாகூர் ராமனின் மகன் என்று நம்பப்படும் – வால்மீகி முனிவருக்குப் பிறந்ததாக சொல்லப்படும் – லவனால் நிர்மாணிக்கப்பட்டது என்கிற மாபெரும் வரலாற்றுக் கண்டுபிடிப்பிலிருந்து ஆரம்பிக்கிறார் பா.ரா. இராமரால் கட்டப்பட்ட மண்பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டத்தை கட்டக்கூடாது என்று அவாள் கூறும் ஒரு பச்சையான புரட்டிற்கு ஒப்பான இந்த லவ லாகூர் கதையின் அவசியம் என்ன? இப்பேற்ப்பட்ட லாகூரிலிருந்தான் முசுலீம் லீகின் கொடூரமான பிரிவினை ஆரம்பிக்கிறது என்று சென்டிமெண்டாக போட்டு தாக்குவதுதான் பா.ராவின் நோக்கம்.
“ஒரு முடிவோடு இருந்தார் ஜின்னா. ஒரு முடிவோடு பிரசாரம் செய்தார்கள் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்கள். இது பஞ்சாபில் பல முஸ்லிம்களுக்கே பிடிக்கவில்லை. திடீரென்று இத்தனை அழுத்தமாக மதவாதம் பேச என்ன அவசியம்? இது சிக்கல் தரும். நிச்சயமாகப் பிரச்சினை வரும். மக்களின் அன்றாட அமைதி குலையப்போகிறது. சந்தேகமில்லை” – பக்.10
பேய்க்கதை மன்னன் பி.டி.சாமியின் மொழியில் பா.ரா சொல்வதன் பொருள் என்ன? லவன் விளையாடிய புண்ணிய பூமியில் இப்படி முசுலீம் லீக் அநீதியாக பிரிவினையை பேசியதன் காரணமாகவே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் வண்ணம் ஆர்.எஸ்.எஸ் கிருஷ்ண பரமாத்மாவாக களமிறங்கியது என்று புரியவைக்கிறார் பா.ரா. எனில் முசுலீம் லீகின் பிரிவினை வாதம்தான் ஆர்.எஸ்.எஸ் பகவானது விசுவரூபத்திற்கு காரணம் என்பது உண்மையா?
அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் தோன்றியதற்கு பா.ரா கொடுக்கும் தத்துவப் புரணக்கதையைப் பார்ப்போம்

ஒத்துழையாமை இயக்கமும் இந்துத்தவ ‘போராளி’களும்!

1919ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த காந்தி, பின்னர் 1922இல் சௌரி சௌராவில் நடந்த ‘வன்முறை’ சம்பவத்தை அடுத்து அந்த போராட்டத்தை திரும்ப பெறுகிறார்.  இதைக் கண்டதுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னோடியான சாவர்க்கர் மனம் கொதித்து ஹிந்து மகாசபையில் இணைந்து கொண்டார் என்கிறார் பா.ரா. இதைப் படிக்கும் வாசகர் சாவர்கர் என்ற அந்த தலைவர் வெள்ளையனை எதிர்த்து பயங்கரமாக போராடிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். உண்மை என்ன?
1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறைவைக்கப்படும் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்த வந்த இந்த மன்னிப்பு படையெடுப்பால் மனம் குளிர்ந்த வெள்ளையர்கள், சாவர்க்கரை மராத்திய மாநிலத்தில் உள்ள ரத்தினகிரிக்கு 1922ஆம் ஆண்டு அனுப்புகின்றனர். “இந்த மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது, வெள்ளையர்களை எதிர்க்கும் எந்த அரசியல் போராட்டத்திலும் பங்கேற்கக்கூடாது” என்று ஆங்கிலேயர் உத்தரவிட்டதை அவர் ஏற்றுக் கொண்டதால் சிறை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
1910களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு, வெள்ளையர்களின் மறைமுக ஆதரவுடன் அதாவது அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் சாவர்க்கர் அதில் சேர்கிறார். வெள்ளையனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக்கூடாது, ஒரு சொல் கூட பேசக்கூடாது என்பதற்காக விடுதலை பெற்ற சாவர்க்கர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை. மேலும் அந்த இயக்கத்தை அவர் எதிர்த்திருக்கிறார். ஏனெனில் கிலாபத் இயக்கத்தின் தொடர்ச்சியாக வந்த ஒத்துழையாமை இயக்கம் என்பது முசுலீம்களுக்கு ஆதரவானது என்பதே அவர் கருத்து. உண்மை இதுவாக இருக்க நம்ம அஜினோமோட்டோ பா.ரா படிக்கிறவெனெல்லாம் அடி முட்டாள்கள் என்று துணிந்து சாவர்கரை ஆங்கிலேய எதிர்ப்பு வீரராக அறிமுகம் செய்கிறார்.
இனி பா.ராவின் அடுத்த புளுகைப் பார்ப்போம். இதே ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தியதை கண்டு கொதித்த கேசவ பலிராம் ஹெட்கேவார் எனும் மராத்தியப் சித்பவனப் பார்ப்பனர் 1925இல் ஆர்.எஸ்.எஸ் ஐ ஆரம்பித்தாராம். இவர் ஏற்கனவே திலகர் தலைமையில் காங்கிரசு கட்சியில் இருந்தார், சில அடையாளப் போராட்டங்களில் ஆபத்தில்லாமல் கலந்து கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் அரை உண்மைதான். உண்மையில் இவர் காங்கிரசில் அப்படி பட்டும் படாமலும் இருந்ததற்கு காரணம் ஆங்கிலேய எதிர்ப்பா, இந்துத்வ மீட்சியா என்பதுதான் கேள்வி. அதற்கு நாம் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தை அதன் வரலாற்றுப் பொருளை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ளவேண்டும்.

காந்தியை எதிர்த்தது பகத்சிங்கா, ஆர்.எஸ்.எஸ்ஸா?

அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை பார்த்து விடுவோம். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் அருமை பெருமைகளை அடித்துவிடும் பா.ரா, பின்னர் காந்தி அதை நிறுத்தியவுடன் காங்கிரசில் இருந்த தேசபக்த தீவிரவாத சிங்கங்கள் அதிருப்தியுற்று தனிப்பாதையில் பயணித்தனர் என்கிறார். இந்த தீவிரவாதப் பெருமையைத்தான் வெள்ளைக்காரனை எதிர்த்து வாயே திறக்காத சாவர்க்கருக்கும், ஹெட்கேவாருக்கும் அளிக்கிறார். கூடவே அவர்கள் காந்தியின் முசுலீம் ஆதரவை ஏற்கவில்லை என்று ஒரு விளக்கம் அளிக்கிறார். அதிலும் அந்தக் காலகட்டத்தில் முசுலீம்களுக்கென்று தனிநாடு கோரிக்கையை எழுப்பியே இராத முசுலீம் லீகை பிரிவினை பேசினார்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார். காரணம் இப்போது உள்ள முசுலீம் மீதான வெறுப்புணர்வு கொண்ட இந்து பொதுப்புத்தி இதை கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கைதான்.
ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு காந்தி இழைத்த துரோகத்தை கண்டு சினமுற்றவர்கள் சாவர்க்கர், ஹெட்கேவார் முதலான தொடை நடுங்கிகள் அல்லர். அவர்கள் சந்திரசேகர ஆசாத், பகத்சிங் முதலான தோழர்கள். அவர்கள் ஆரம்பித்த அந்த புரட்சிப்பணிதான் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய வானில் மையமாக இருந்தது. 1931ஆம் ஆண்டு ஒரு சிங்கம் போல பகத்சிங் தூக்குமேடையில் நின்று கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் கோழைகள் வெள்ளைக்காரனது ஸ்பான்சரோடு மைதானத்தில் கபடி ஆடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நம்ம அக்மார்க் அம்பியான பா.ராகவன் கம்யூட்டரின் கீ போர்டே கதறி அழுமளவுக்கு பகத்சிங் தோழர்களின் வீர அத்தியாத்தை மறைத்துவிட்டு அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளை திருட்டுத்தனமாய் திணித்து விடுகிறார். இப்படித்தான் கோழைகள் பா.ரா கையால் குட்டுப்பட்டு போராளிகளாய் ஆபாசத்தோடு உருவாக்கப்படுகிறார்கள்.

ஹெட்கேவாரின் பார்ப்பனியக் கவலைகள்!

உண்மையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஹெட்கேவார் ஆரம்பிக்க என்ன காரணம்? அதை அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்
“மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக நாட்டில் (தேசியத்திற்கான) உற்சாகம் குறைந்து வருகிறது. அந்த இயக்கம் தோற்றுவித்த தீமைகள் சமுதாயத்தில் அச்சமூட்டும் வகையில் தலைதூக்கியுள்ளன. தேசியப் போராட்ட அலை தணிந்து வந்த போது ஒருவருக்கொருவரிடையே உள்ள குரோதங்களும் பொறாமைகளும் வெளிப்படத் தொடங்கின. எங்கு பார்த்தாலும் தனிப்பட்டவர்களிடையே சச்சரவுகள். பல்வேறு சமூகங்களுக்கிடையே மோதல்கள் தொடங்கியிருந்தன. பிராமணருக்கும் பிராமணரல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடு அப்பட்டமாகவே தெரியத் தொடங்கியது. எந்த ஒரு அமைப்பிலும் ஒருமைப்பாடோ ஒற்றுமையோ இருக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் பாலைப் பருகி வளர்ந்த யவனப் பாம்புகள் நஞ்சைக் கக்கிப் படமெடுத்தபடி தேசத்தில் கலவரங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தன” (The brotherhood in saffron: The RSS and Hindu revivalism. Anderson and Damle- எஸ்.வி.ராஜதுரையின் இந்து இந்தியா நூலிலிருந்து)
இந்த விளக்கத்தை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாமல் மேலோட்டமாக பார்த்தாலே, ஒத்துழையாமை இயக்கம் குறித்த போதாமைகளை அதாவது காந்தியின் மிதவாதத்தை ஹெட்கேவார் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது புரியும். இங்கே அவரது கவலை என்ன?
சமூகங்களுக்கிடையே உள்ள மோதல், மக்களிடையே ஏற்பட்டு வரும் பிளவு அதாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், பார்ப்பனரல்லாதோர் முதலான சமூகங்கள் அம்பேத்கார், பெரியார், திராவிட இயக்கம் போன்றவர்களின் முயற்சியில் ஆதிக்க சாதிகளை எதிர்க்க துவங்கிவிட்டனர். குறிப்பாக அந்த வரலாற்று காலத்தை வைத்துப் பார்த்தால் 1922 ஒத்துழையாமை இயக்கத்திற்கு பிறகு பார்ப்பன ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் போக்கு, இயக்கங்கள் முன்னிலைக்கு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் அவதரித்த மராட்டிய மண்ணில் அம்பேத்கரின் தாழ்த்தப்பட்டோருக்கான சம உரிமை போராட்டங்கள் சூல் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒத்துழையாமை இயக்கத்தின் உதவியால் யவனர்கள் அதாவது முசுலீம்கள் தங்களது சம உரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இவைதான் ஹெட்கேவாரின் இதயத்தை குடைந்தெடுத்த கவலைகள். இந்த கவலை அவரிடத்தில் வந்ததற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் இன் தோற்றம் பார்ப்பனிய மீட்சிக்காகவே!

வெள்ளையர்கள் ஆதிக்கம் வரும் முன்பு 18ஆம் நூற்றாண்டில் மராட்டியத்தின் அரசியல், சமூக அதிகாரத்தில் இருந்தவர்கள் பேஷ்வாக்கள். சித்பவன் எனும் பார்ப்பன பிரிவைச் சேர்ந்த இவர்களது ஆட்சிக் காலம்தான் பார்ப்பனர்களின் பொற்காலம். அதாவது சூத்திரர்களும் பஞ்சமர்களும் அடிமைகளாக அவதிப்பட்ட இருண்டகாலம். இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தனது சாம்ராஜ்ஜியத்தில் இணைத்த வெள்ளையர்கள் மராட்டியத்தையும் கைப்பற்றினார்கள். தங்களது இருண்ட காலத்தில் இருந்து விடுதலை பெற விரும்பிய சூத்திரர்கள் – குறிப்பாக மகர்கள் எனப்படும் தலித் மக்கள், வெள்ளையர்களின் இராணுவத்தில் சேர்ந்து உணர்வுப்பூர்வமாக போரிட்டு சித்பவன பேஷ்வாக்களை வீழ்த்துவதற்கு காரணமாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது பார்ப்பனக் கொடுங்கோன்மையிலிருந்து விடுவித்த சொந்தப் போர்.
இந்த முரண்பாட்டை வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும் இப்படி தமது சமூக அதிகாரத்தை இழந்த சித்பவன பார்ப்பனர்கள் வெள்ளையர்களின் மீது ஆத்திரம் கொண்டனர் என்பதும்தான் வரலாற்று உண்மை. ஆகவே மராட்டியத்தைப் பொறுத்தவரை அங்கே சித்பவன பார்ப்பனர்களிடேயே தோன்றிய ஆங்கிலேய எதிர்ப்பு என்பது காலனிய எதிர்ப்பு உணர்வல்ல. அது வாழ்ந்து கெட்ட ஒரு பண்ணையாரின் கசப்புணர்வு.
அதைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் ஜோதிர்ராவ் பூலே வருகிறார். வேதத்தை மறுத்து, பார்ப்பனர்களின் மேலாண்மையை எதிர்த்து, சூத்திர பஞ்சமர்களின் சம உரிமைக்காக அயராது பாடுபடுகிறார். இதுவும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் எற்கனவே ஆட்சியிழந்த பார்ப்பனர்கள் மேலும் வயிறெறிந்து போகிறார்கள்.
இப்படித்தான் மராட்டியத்தில் திலகர் உள்ளிட்ட சித்பவன பார்ப்பனர்கள் காங்கிரசில் சேர்ந்து வெள்ளையனை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பின் உள்ளடக்கமாக இழந்துவிட்ட வருண சாதி ஆதிக்கத்தை மீட்டெடுப்பதே இருந்தது. விதவை மறுமண எதிர்ப்பு, பாலிய விவாகத் தடை எதிர்ப்பு போன்றவற்றில் திலகர் தீவிரமாக ஈடுபட்டார். பிளேக் நோயை பரப்பும் எலிகளை ஒழிப்பதற்காக எடுக்கபட்ட நடவடிக்கைகளை எதிர்க்கிறார்; அதற்காக விநாயகர் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறார். ஆக மொத்தம் இந்த நடவடிக்கைகளில் இருப்பது வெள்ளையர் எதிர்ப்பா, இல்லை பார்ப்பன மீட்பா?
இதே காலத்தில் தென்னிந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாதோர் இயக்கம் திராவிடர் இயக்கமாக வளர்கிறது. இந்த இயக்கத்தில் தமது சமூக ஆதிக்கத்தை இழக்க விரும்பாத பார்ப்பனர்கள் வெள்ளையர்களது அரசில் சேர்ந்து கொண்டும், காங்கிரசில் இருந்து கொண்டும் தந்திரமாக வேலை செய்கின்றனர். அன்று காங்கிரசு தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் தேவதாசி தடை சட்டத்தை கடுமையாக எதிர்த்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மேற்கு வங்கத்தில் முசுலீம் நவாப்புகளை வீழ்த்திய வெள்ளையர்களை அங்கிருந்த பார்ப்பன ‘மேல்’சாதியினர் வரவேற்றனர். அதன் மூலம் இழந்து விட்ட தமது சமூக ஆதிக்கத்தை பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. இப்படி இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் வெள்ளையர் எதிர்ப்பு அல்லது ஆதரவு இரண்டுமே பார்ப்பனிய சாதி ஆதிக்கத்தின் மீட்போடு தொடர்புடையது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்ட காலகட்டத்தில்தான் அம்பேத்கரும் தனது செயல்பாடுகளை துவங்குகிறார். 1920கள் மற்றும் 1930களில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து பொதுக்குளத்தில் நீரெடுக்கும் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் முதலானவற்றை நடத்துகிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் இத்தகைய சோதனைகளால் இந்துக்களுக்கு அதாவது பார்ப்பனர்களுக்கு நேர்ந்துவிட்ட அபாயத்தை பற்றி கவலைப்படுகிறார்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பதை வாசகர்கள்  புரிந்து கொள்ள முடியும். இந்த வரலாற்றை மறுத்து நூலாசிரியர் பா.ரா உருவாக்கும் மோசடியையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ் இன் புரவலர்கள் யார்?

1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் எப்படி பரவியது? யார் உதவினார்கள்?
சுதந்திரப் போராட்டம் தங்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதில் தீர்மானகரமாய் இருந்த ஆர்.எஸ்.எஸ்ஐ குண்டாந் தடிகளுடன் இராணுவ பயிற்சி செய்வதற்கு வெள்ளையர்கள் அனுமதித்தார்கள்.
அந்த விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் நிறைய சந்தர்பங்களில் நாம் காணலாம். உதாரணத்திற்கு ஒன்று -
“We should remember that in our pledge we have talked of freedom of the country through defending religion and culture. There is no mention of departure of British in that.” (Shri Guruji Samgra Darshan, Vol 4, p. 2)”
இது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் “குருஜி” என்று ஏற்றிப் போற்றும் அவர்களது இரண்டாவது தலைவர் கோல்வால்கர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.
இப்படித்தான் ஆங்கிலேயர்கள் ஆசிர்வாதத்துடனும், மேல்மட்ட பார்ப்பனிய சனாதனிகளின் உதவயுடனும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பரவியது.
வட இந்தியாவில் குமாஸ்தக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்விமுறையின் பரவலால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரிருவர் முன்னேறியதைப் பார்த்து தமது அஸ்திவாரத்தில் லேசான ஆட்டம் கண்டு போயிருந்த வருணாசிரம இந்து தரும ஆதிக்கத்தைக் காப்பாற்றவும், சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் நோக்கத்திற்காகவும் ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்களிடம் நன்கொடை திரட்டி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்தார் காங்கிரஸ்காரரும் இந்து மகாசபையை தோற்றுவித்தவர்களுள் ஒருவருமான மதன் மோகன் மாளவியா. இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு என்று தனியாக கட்டிடமே கட்டிக் கொடுதிருந்தார். இத்தகைய புரவலர்களால்தான் ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் பரவியது.
ஆனால் பா. ராவோ, பத்துப் பதினைந்து வயது சிறுவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய ஹெட்கேவார் “மெல்லியக் குரலில்” சித்தாந்தப் பயிற்சியளித்ததாகவும் அதிலிருந்து தேறியவர்கள் வடநாடு முழுக்கப் பரவி பத்தே ஆண்டுகளில் நாற்பதாயிரம் பேராகப் பெருகியதாக அதிசயக்கிறார்.

பிரிவினையை முதலில் பேசியது முசுலீம் லீகா, இந்து மகா சபையா?

அடுத்து புத்தகத்தின் துவக்கத்திலேயே முசுலீம் லீக் கட்சியினர் தனி நாடு கோரி பிரிவினை பேசினார்கள் என்றும் அதன் காரணமாக நடந்த கலவரங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் தரப்பில் களமிறங்கியதாலேயே அது பரவலான வெளிச்சத்துக்கு வந்தது என்றும் சொல்கிறார் பா.ரா.
ஆனால், உண்மையில் முசுலீம் லீக்கின் தனிநாடு கோரிக்கை வெளிப்பட்ட  பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு 1923ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதி வெளியிட்ட “ஹிந்துத்துவம்: யார் ஹிந்துக்கள்?” எனும் நூலில் தான் முதன் முறையாக இசுலாமியர்கள் இந்த நாட்டில் இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது எனும் பிரிவினை வாதம் பேசப்பட்டது. ஹெட்கேவார் அப்புத்தகம் கையெழுத்துப் பிரதியாக இருக்கும் போதே வாசித்தவர்.
அப்புத்தகம் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஆரம்பத்தில் ஒரு தத்துவ அடிப்படையை வழங்குவதாக இருந்தது. மிகத் தெளிவாக பார்ப்பனிய இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வோரைத் தவிர்த்து வேறு எவருக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை அப்புத்தகத்தில் தெளிவாக சாவர்க்கர் அறிவிக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் வெகு காலம் முன்னதாகவே இந்துத்துவம் என்பது பேச்சளவிலும் செயல் அளவிலும் காங்கிரசில் இருந்த புகழ் பெற்ற பார்ப்பனப் பெருச்சாளிகளின் செயல்பாட்டில் இருந்தது.

இந்துத்வக் காங்கிரசில் முசுலீம்கள் இணைய முடியுமா?

மேலும் இந்திய அரசியலில் மதத்தை கலந்து அரசியல் செய்த முதல் கட்சியே காங்கிரசுதான். ஏற்கனவே அதன் தடங்களை திலகரது வரலாற்றில் பார்த்து விட்டோம். பின்னர் காந்தியின் காலத்திலும் அதுவே நடந்தது. இந்துக் கடவுளர்களின் உருவகமாக நாட்டை சித்தரித்து பாடும் வந்தே மாதரம் முசுலீம்களின் எதிர்ப்புக் கிடையிலும் காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காங்கிரசின் தலைவர்கள் பலர் இந்துத்வத்தின் பொற்காலத்தை மீட்டெடுக்கும் கனவினை கொண்டிருந்தவர்கள்தான். அதற்காக முசுலீம்களை அவர்களது சம உரிமைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.
சாவர்க்கர், ஹெட்கேவார் கும்பலுக்கும் முன்பாகவே காங்கிரஸில் விபின் சந்திர பால் போன்ற மிதவாத இந்துத்துவவாதிகளும் லாலா லஜபதிராய், திலகர், மதன் மோகன் மாளவியா போன்ற தீவிர இந்துத்துவவாதிகளும் நிறைந்திருந்தனர். காங்கிரஸில் உறுப்பினர்களாக இருக்கும் போதே லாலா லஜபதிராய் ஆரிய சமாஜத்தில் இயங்கி வந்துள்ளார். மாளவியா உத்திரபிரதேசத்தில் “பாரத தர்ம மகாமண்டலம்” என்கிற அமைப்பை நிறுவியவர் – தான் இறக்குவரை காங்கிரஸில் இணைந்திருந்தவர். பின்னாளில் இவர்கள் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் தான் ஹிந்து மகாசபா.  இதற்காக காங்கிரசு இவர்களைக் கண்டித்து வெளியேற்றவில்லை.
அந்தக் காலகட்டத்தில் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களின் உறுப்பினர்களும் தலைவர்களும் காங்கிரசிலும் இருந்துள்ளனர். இவர்கள் தீவிரமான ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் காங்கிரசை ஒரு தீவிரமான இந்துத்வா போக்கில் மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். 1937ஆம் ஆண்டு தான் வேறு இயக்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசிலும் உறுப்பினர்களாக இருப்பதைத் தடை செய்து ஒரு விதியைக் கொண்டு வருகிறது. இங்கே புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் காங்கிரசை அனைத்து பார்ப்பனியவாதிகளும் இது நம்ம ஆளு கட்சி என்றுதான் கருதினார்கள். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட இந்து காங்கிரசுக் கட்சியில் முசுலீம்கள் எப்படி சேர்ந்து பணியாற்ற முடியும்?
இப்படி இந்துத்துவவாதிகளின் கூடாரமாய் காங்கிரசு சீரழிந்து கிடந்த நிலையில் அதற்கான எதிர்வினையாக வேறுவழியின்றி தோன்றியது தான் முசுலீம் லீக். ஆங்கிலேயர்களும் இந்த முரண்பாட்டை திறமையாக பயன்படுத்தி முற்றவைத்தார்கள். முசுலீம் லீக் அதன் துவக்க காலத்தில் தேசப் பிரிவினையை செயல் திட்டமாகக் கொண்டிருக்கவில்லை. முசுலீம்களைக் கல்வியறிவு பெறச்செய்வது, மாகாண அரசுகளில் போதிய பிரநிதித்துவத்தைக் கோரிப் பெறுவது போன்றவைகளையே அதன் தலைவர்கள் முன்வைத்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தோடு சமரசமாகச் சென்று சில சில்லரைக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வது எனும் அளவில் காங்கிரஸின் இசுலாமிய பிரதி தான் முசுலீம் லீக்.
முதல் இந்திய சுதந்திரப் போரில் இந்து, முசுலீம் என மதவேறுபாடு இல்லாமல் மக்கள் ஒருங்கிணைந்து போராடியதைக் கண்டு உணர்ந்த ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறார்கள். இந்த சூழ்ச்சியை முறியடித்து மதசார்பற்ற தேசிய இயக்கத்தை கட்டுவதற்கு பதில் இந்துத்தவ வழியில் காங்கிரசு கட்சியைக் கட்டினார்கள் அதன் பிதாமகர்கள்.
இந்த வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு இதை அப்படியே புரட்டிபோட்டு முசுலீம்கள்தான் ஆர்.எஸ்.எஸ் ஐ துவங்குவதற்கு காரணம் என்று பா.ரா ஒரு பொய்யை விரல் கூசாமல் எழுதுகிறார்.

எமர்ஜென்சியில் ஆர்.எஸ்.எஸ்: கோழைகள் சூரர்களான அதிசயம்!

“மிசாவில் கைதாகி சிறை சென்றவர்களுள், முழு எமர்ஜென்சி காலமும் சிறைப்பட்டிருந்தவர்கள் அநேகமாக ஆர். எஸ். எஸ் காரர்கள்தாம்.” என்கிறார் பா.ரா. தேசமெங்கும் அவசர நிலையை எதிர்த்து போராடுமாறு தனது தொண்டர்களை அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் அழைப்பு விடுத்தாராம். அதை ஏற்று “மாறு வேடங்களில் வீடுவீடாகச் சென்று இந்திரா அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்துச் சொல்வது, பத்திரிகையாளர்களை ரகசியமாகச் சந்தித்து, சிறையில் இருக்கும் இயக்கத்தின் உறுப்பினர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை விவரிப்பது” போன்ற வேலைகளை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செய்தார்களாம்.
நரியைப் பரியென்று காட்டும் பேராசை பா. ராகவையங்காருக்கு வந்ததில் தப்பில்லை – ஒரு ‘நூலின்’ துயரம் இன்னொரு ‘நூலு’க்குத்தானே புரியும்? அதற்காக தெளிவாய் நாடே பார்த்துக் கொண்டிருந்த போது பகிரங்கமாய் இந்திராவின் காலை நக்கியாவது சிறையிலிருந்து வெளியே வரத் தயாராக இருந்த ஆர்.எஸ்.எஸ் கோழைகளை வீரர்களாகக் காட்டுவது, போட்டுக் கொண்டிருக்கும் ‘நடுநிலை’ முகமூடிக்கு சற்றும் பொருந்தாமல் அசிங்கமாய் பல்லிளிப்பதை பா.ரா உணராமல் இல்லை. இதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம், அரசியல் இயக்கம் இல்லையாம். அதனால் அதன் தலைவர் அப்படித்தான் அணுகுவாராம்.
முதலில் இவர்கள் சொல்வது போல் இந்திரா காந்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் விரோதியல்ல. அன்றைக்கு இந்தியாவிலிருந்த அமெரிக்க சார்பு முதலாளிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்து நின்ற ரசிய சார்பினருக்குமான முரண்பாடுகளின் பின்னணியில் தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த இந்திரா காந்தியால் எமர்ஜென்சி அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு நிலையிலிருந்ததாலேயே ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை ஆர்.எஸ்.எஸ் அதன் செயல்பாடுகளால் வரவழைத்துக் கொண்ட ஒன்றல்ல. மாறாக இந்திராவின் அரசியல் கணக்குகளுக்காக அதன்மேல் திணிக்கப்பட்டது.
அதேபோல ரசிய சார்பு கொண்ட வலது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்படாமல் இருந்ததற்கும், ரசிய சார்பற்ற இடது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதற்கும் இந்திராவின் ரசிய சார்புதான் காரணம். இதே அவசர நிலை காலத்தில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் கொலை செய்யப்பட்டும், பலர் சிறைபட்டதற்கும் கூட அவர்கள் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்கள் என்பதோடு உள்நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு தலைவலியாக செயல்பட்டார்கள் என்பதே.
மற்றபடி ஆர்.எஸ்.எஸ் வெளியிலிருந்தால் என்ன செய்திருக்குமோ அதை  எந்தக் குறையுமில்லாமல் இந்திராவே நிறைவேற்றினார். தில்லி குடிசை வாழ் மக்களை அகற்றுவது, கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு போன்றவைகளை எதிர்த்துப் போராடிய ஏழை முசுலீம்களை ஆயுதம் கொண்டு காட்டுமிராண்டித்தனமாய் ஒடுக்கியது இந்திராவின் அரசாங்கம். இதனால் இன்றைக்கும் சஞ்செய் காந்தி எனும் சர்வாதிகார இளவலை ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பாராட்டித் திரிகிறது. மேனகா காந்தியும், வருண் காந்தியும் இன்று பா.ஜ.கவில் இருந்து கொண்டு இந்துவெறி பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்றால் அது அவர்களது மரபிலேயே இருக்கிறது என்பதுதான்.

அன்னை இந்திராவின் அடிமைகளாக ஆர்.எஸ்.எஸ் கும்பல்!

எமர்ஜென்சிக்கு முன்பே இந்திரா காந்தி வெளிப்படையாக விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் மேல் போடப் பட்ட தடையே ஒரு அடையாளத்திற்காகத் தானேயொழிய இவர்கள் அன்றைக்கு சிறையிலிருந்த கம்யூனிஸ்டு புரட்சியாளர்களைப் போல எமர்ஜென்சி கொடுமைகள் எதையும் அனுபவித்ததில்லை. இருந்த போதும் கைதான மறு நொடியிலிருந்தே இந்திராவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் எப்படி?
சிறையிலிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் கடிதம் மேல் கடிதமாய் இந்திராவுக்கு எழுதித் தள்ளுகிறார். அவற்றில் இந்திராவை தைரியலட்சுமி, வீரலட்சுமி என்றெல்லாம் புகழ்ந்து விட்டு, இந்திராவின் சுதந்திர தின உரையைப் பாராட்டி விட்டு, தேர்தல் வழக்கின் மேல் முறையீட்டில் அவர் வென்றதற்கு வாழ்த்து சொல்லி விட்டு – தங்கள் மேலான தடையை விலக்குமாறும், தங்கள் இயக்கத்திற்கும் நெருக்கடி நிலை எதிர்ப்பியக்கத்திற்கும் தொடர்பிலை என்றும், தடையை நீக்கினால் அரசுக்கு விசுவாசமாக இயங்குவதாகவும் குறிப்பிடுகிறார்.
கருணாநிதியாவது எமர்ஜென்சிக் கொடுமைகளை அனுபவித்து முடித்த பின் தான் ‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று சரண்டரானார். அடி வாங்கிய பின் தான் தி.மு.க அழுதது – இவர்களோ இந்திரா செல்லமாக கம்பை ஓங்கியதுமே தம் காலோடு மூத்திரம் பெய்து கண்ணீர் விட்டுக் கதறிய கோழைகள்.
எனினும் நூலாசிரியர் பா.ரா கூச்ச நாச்சமின்றி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு அவசர நிலையை எதிர்த்த வீரர்கள் என்ற பட்டத்தை அவர்களே  வெட்கப்படுமளவுக்கு மனம் குளிர வழங்குகிறார். இன்று தேவரஸ் உயிரோடு இருந்திருந்தால் பா.ராவிற்கு “சங்கம் காத்த சிங்கம்” என்று பட்டமே வழங்கியிருப்பார்.

அயோத்தி – ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆலோசனை வழங்கும் பா.ரா

கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக இந்து வெறியர்கள் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு, சாமானிய மக்களிடையே மதவெறி நஞ்சைக் கலந்து மக்களிடையே கண்ணுக்குப் புலப்படாத ஒரு பெரும் தடைச் சுவரையே ஏற்படுத்தி, பல கலவரங்கள் நடத்தி பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று குவிப்பதற்கு காரணமான பாபர்மசூதி எனும் அயோத்தி விவகாரத்தை வரலாற்றறிஞர் பா. ரா வெறும் ஒன்றரை பக்கத்திலேயே முடித்துக் கொள்கிறார். இதை விரித்து எழுதியிருந்தால் அவரே விரும்பினாலும் ஆர்.எஸ்.எஸ்இன் கொலைபாதகத்தை மறைக்க முடியாது என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
அயோத்தி விவகாரத்தை மூலதனமாக்கி, நாட்டு மக்களை ஒரு ரத்தக் குளியலில் மூழ்கவைத்து ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு இந்து மதவெறி பாசிஸ்டுகள் தலையெடுத்த அந்த நிகழ்வுக்கு பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. இந்த நாட்டின் அரசு, அரசியல், நீதி, நிர்வாக, ஊடக அமைப்புகள் அனைத்தும் இந்துமதவெறி பாசிசத்தின் தூண்களாக அம்பலப்பட்டதன் பின்னணி குறித்து அவருக்கு அக்கறை ஏதும் இல்லை. ஏனெனில் அவரும் கூட இந்த தூண்களில் ஒருவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதனால்தான் அயோத்தி விவகாரத்தை வேறு விதமாக சுமூகமாகத் தீர்த்திருக்க முடியும் என்கிறார் – அதற்கு உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் விவேகானந்தர் நினைவாலயம் நிறுவியதை ‘சாதுர்யமாகச்’ சாதித்துக் கொண்டதாக எடுத்துக் காட்டுகிறார்.

விவேகானந்த கேந்திரத்தின் வரலாறும், தமிழகத்தில் இந்துமதவெறியும்!

“விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் யாருக்குக் கருத்து வேறுபாடு இருக்க முடியும்?எனவே எந்தத் தடையுமின்றிப் பரபரவென்று ஆலோசனைகள் நடைபெறத் தொடங்கின.”
“சிக்கல், கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் வடிவில் வந்தது. பாறையில் விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை ஏற்க முடியாது. நூறு வருடங்களுக்கு முன்னால் புனித  சேவியர் இங்கு வந்த போது அவர் அமர்ந்து ஜபம் செய்த பாறை அது. கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானது” – பக்கம் 123.
இதன்படி பா.ரா கூறுவது என்ன?
நினைவுச்சின்னம் அமைக்க ஏக்நாத் ரானடே எனும் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்திய பொதுச் செயலாளரை அதன் தலைவர் கோல்வால்கர் அனுப்புகிறார். வந்தவர் கையெழுத்து இயக்கம் எடுத்தது, தி.மு.க தலைவர் அண்ணாதுரையை நினைவுச் சின்ன கமிட்டிக்குள் இழுத்தது, உச்சகட்டமாக ஜோதிபாசு எனும் கம்யூனிஸ்ட் தலைவரிடமே விவேகானந்தர் வங்கத்துகாரர் என்று நன்கொடை கேட்டது, இப்படியே மத்திய மாநில அரசுகளை நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து நாசூக்காக காரியத்தை சாதித்ததாக பா.ரா சொல்கிறார்.
ஆனால் உண்மை என்ன?
தமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தினால் வளரமுடியாமல் தேங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு, பார்ப்பனரல்லாத இந்து மதப் பிரச்சாரகர் விவேகானந்தருக்குப் பொதுவில் இருந்த இரசிகர் பட்டாளம் நம்பிக்கையளித்தது. பார்ப்பனரல்லாதோரையும் உள்ளிழுக்கும் வகையில் வருண சாதி அமைப்புக்கு பங்கம் வராமல் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர் விவேகானந்தர். காங்கிரசு மட்டுமல்ல  போலி கம்யூனிஸ்டுகள் கூட விவேகானந்தரை ஏற்றுக் கொள்பவர்கள் தான்.
பொதுவாக ஆர்.எஸ்.எஸ் தனது வளர்ச்சிக்கு மக்களிடம் இயல்பாக இருக்கும் நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் கவர்ந்து கொண்டும், அவற்றுள் ஊடுருவிக் கைப்பற்றியும் அவற்றின் உள்ளடக்கத்தை தமக்கேற்றவாரு மறுசீரமைத்து மதவெறியூட்டுவதையும் தமது செயல் தந்திரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. சாமானியர்கள் வழிபடும் வினாயகரைக் கைப்பற்றியதும், கிராமக் கோயில் பூசாரிகள் சங்கம் எனும் பெயரில் சிறு தெய்வங்களை சமஸ்கிருதமயமாக்குவதும் இதற்கான உதாரணங்கள்.
இப்படித்தான் விவேகானந்தரை வைத்து தமிழகத்தில் ஊடுறுவுவதற்கு ஆர்.எஸ்.எஸ் முயன்றது. காலம் காலமாக குமரி மாவட்ட கரையோர மீனவர்கள் கடலாடி வந்து உணவருந்தி ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காய வைக்கவும், ஆண்டுக்கொரு முறை சிலுவை வைத்து ‘குரூஸ்’ எனும் வழிபாடு நடத்தப் பயன்படுத்தி வந்த பாறையை ஆர்.எஸ்.எஸ் இதற்காக குறிவைக்கிறது.
நாட்டில் பெயர் பெற்ற பண்டாரம் பரதேசிகள் மூத்திரம் பெய்த, வெளிக்கு போன இடங்களையெல்லாம் கண்டுபிடித்து நினைவாலயம் அமைக்க வேண்டுமென்றால் இந்த நாட்டில் மக்கள் வசிக்கவே இடம் காணாது. விவேகானந்தரோ நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் தங்கி தியானம் செய்திருக்கிறார் – சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். இவர்கள் குறிப்பாக அந்தப் பாறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அதைப் பயன்படுத்தி வந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததும் – அம்மாவட்ட மக்கள் தொகையில் அவர்கள் கணிசமான அளவில் இருந்ததும் தான். மேலும் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை, புறக்கணிப்பு காரணமாக மதம் மாறியவர்கள் அந்த மக்கள். அதே போல நாடார்களில் கணிசாமானோரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். மிச்சமிருக்கும் இந்து நாடார்களையும் ஏனைய சாதி இந்துக்களையும் திரட்டுவதற்கு இந்த விவேகானந்தர் நினைவு சின்னம் வழி அமைத்துக்கொடுக்கிறது.
மேலும் இந்தியா முழுவதிலும் இருந்துவரும் மக்களுக்கு இந்த நினைவுச் சின்னம் ஒரு இந்துத்வ சுற்றுலாவாக இருக்கும் நன்மையையும் ஆர்.எஸ்.எஸ் கணித்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்த்ததைப் போலவே நினைவாலயம் அமைக்கப்பட்டால் தமது வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மீனவர்கள், அந்நடவடிக்கைகளை தம்மால் இயன்ற அளவில் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏழை மீனவர்களின் இந்த பிரச்சினையை இந்துக்களுக்கு வந்த சோதனையாக பிரச்சாரம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மீனவர்களுக்கு அந்தப் பாறை மேல் இருந்த பாரம்பரிய உரிமையை மூடி மறைத்து, அவர்களிடம் இருந்து அதைத் தட்டிப் பறித்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மத்தியில் ஆட்சியிலிருந்த சாஸ்திரியும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பக்தவத்சலமும் பக்கபலமாய் இருந்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகத் துணை நின்றார். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் தனக்கு பலமில்லாத காரணத்தால், கேரளாவில் இருந்து இரகசியப் படகுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும், தமிழக போலீசையும் வைத்து மீனவர்களை அடித்து விரட்டி விட்டு தான் இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாகச் செய்தனர்.
இறுதியில் 1970ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவாலயம் திறக்கப்படுகிறது. கூடவே கன்யாகுமாரியில் ஆர்.எஸ்.எஸ்இன் நச்சுப்பணிக்கான தளவேலையும் ஆரம்பிக்கப்படுகிறது.
இயல்பாகவே ஆளும் அதிகார வர்க்கத்தினிடையே நிலவும் இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு அதிகாரத்தையும், குண்டர்படையையும் துணைக்கு வைத்துக் கொண்டு எதிர்ப்புகள் நசுக்கப்பட்டதாலேயே விவேகானந்தர் பாறை நினைவாலயம் சாத்தியமானது. இந்த ‘அமைதி’ வழியைத் தான் பா.ரா அயோத்தி விஷயத்திற்கும் பரிந்துரைக்கிறார்.
அதாவது, இவர்கள் ஏன் அவசரப்பட்டு கலவரம் செய்து, முசுலீம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து, கைகளை இரத்தச் சகதியில் முக்கியெடுத்து, மசூதியை இடித்து இத்தனை கெட்ட பெயரை வாங்க வேண்டும்? கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால், நீதி மன்றத்தின் மூலமே ‘முறையான’ தீர்ப்பைப் பெற்று, இராணுவத்தைக் கொண்டே மசூதியை இடித்து கோயிலைக் கட்டியிருக்கலாமே என்பது தான் பா.ராவின் அங்கலாய்ப்பு. இப்போது அலகாபாத் உயர்நீதி மன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பின் பின்னணியில் பா.ராவின் அங்கலாய்ப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அயோத்தயில் இந்து கோவிலை இடித்துத்தான பாபர் மசூதியைக் கட்டினார் என்று ஆர்.எஸ்.எஸ் கூறும் அபாண்டத்தை பா.ராவும் வழிமொழிகிறார். கருத்து வேறுபாடு எதில் என்றால் இந்த விவகாரத்தை சாணக்கிய குள்ளநரித் தந்திரத்தின் மூலம் சிரமமின்றி சாதித்திருக்கலாம் என்பதே.

குஜராத் இனப்படுகொலையை ஆர்.எஸ்.எஸ் செய்யவில்லையாம்!

இதையே தான் குஜராத் கலவரங்கள் பற்றிய விவரணைகளின் பின்னும் சொல்கிறார்.
“அடிப்படை இது தான். குஜராத்தின் இன்றைய வளர்ச்சி, சுதந்திரம் அடைந்த நாளாக அந்த மாநிலம் காணாதது. மிகவும் பிரம்மாண்டமானது. மக்களுக்கு வளர்ச்சி தான் முக்கியம். வசதிகளே முக்கியம். குஜராத் என்றல்ல. உலகெங்கும்  இது தான். இது மட்டும் தான். ” பக்கம் – 138
ஆயிரக்கணக்கான முசுலீம்களை இனப்படுகொலை செய்து, பெண்களைக் கற்பழித்து, முசுலீம் பெண்களின் கருப்பையைக் கிழித்து கண்களைக் கூடத் திறக்காத பிஞ்சுகளை வீசியெறிந்து வாள் முனையில் சொருகிக் கொன்று ரத்த வெறியாட்டம் ஆடிய பின்னும் மோடி வென்றதற்கு மிக முக்கிய காரணம் அவர் குஜராத்திற்குக் காட்டிய வளர்ச்சிப் பாதை தான் என்றும் – வளர்ச்சியொன்றே முக்கியமென்றும் சொல்கிறார் பா.ரா.
யூதர்களை கொன்று பின்னர் ஜெர்மனியர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டு அவர்களது செல்வாக்கை அணிதிரட்டிய ஹிட்லரின் வெற்றியும் அப்படித்தான். நவீன இந்தியா கண்ட மிகக் கொடூரமான முசுலீம் மக்கள்  இனப்படுகொலைதான் 2002 கலவரங்கள். அது முடிந்து எட்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் அதெல்லாம் ஒரு பொருட்டல்ல, இனி வளர்ச்சிதான் மோடியின் தாரகமந்திரம் என்று பாவமன்னிப்பு வழங்குகிறார். இதன்படி இந்துமதவெறியர்கள் கலவரத்தின் மூலம் சிறுபான்மை மக்களைக் கொன்றுவிட்ட கையோடு ஏதாவது கார் தொழிற்சாலை, வளர்ச்சி என்று செட்டிலாகிவிட்டால் அது பிரச்சினையில்லை.
அடுத்து குஜராத் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ் திட்டமிடவில்லையாம். அதற்கு ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய மத உணர்வு கொண்டவர்கள் தான் காரணமாம். அதாவது, கொலைகளையும் கற்பழிப்புகளையும் குண்டு வீசியதும் ஆர்.எஸ்.எஸ்ஸால் மத உணர்வு ஊட்டப்பட்டவர்கள் தான் – அதற்கு ஆர்.எஸ்.எஸ் காரணமில்லை என்று பச்சையாய் புளுகுகிறார். இதே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தான் தெகல்கா வீடியோ முன் அப்பட்டமாக நின்று எப்படித் திட்டமிட்டோம், எப்படிக் கொன்றோம் என்று குற்றவுணர்ச்சியே இல்லாமல் விவரித்தார்கள். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் என்ற அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தேசபக்தர்களை கொலைகாரர்களாக பார்ப்பதற்கு பா.ரா தயாரில்லை. அதனால்தான் அந்த கொலைகாரர்களது சித்தாந்தத்தை நெஞ்சிலேந்தி விடம் கக்கும் அரவிந்த நீலகண்டன் போன்ற பாம்புகளெல்லாம் பா.ராகவனது தமிழ் பேப்பரில் படம் எடுத்து ஆடுகின்றன. நல்ல பாம்பு படமெடுப்பதை இரசிக்கும் பா.ரா போன்ற கண்ணியவான்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
பனியாக்களின் பின்புலத்தோடு குஜராத்தில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக அங்கே வேலை செய்திருக்கிறது. கலவரத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே குஜராத்தைப் பற்றிய ஒரு முழுமையான சர்வேயை வி.எச்.பி எடுத்துள்ளது. அதில் முசுலீம்கள் மக்கள் தொகை, முசுலீம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருக்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முசுலீம் சமுதாயத்திற்கு எதிராய் அணிதிரட்டியிருக்கிறார்கள்.
இது ராகவன் சொல்வது போல ஏதோ “உணர்வால் உந்தப்பட்டு” சட்டென்று நிகழ்ந்த ஒன்றல்ல; பல்லாண்டுகளாகத் திட்டமிட்டு படிப்படியாக ஊடுருவி ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களையே பாசிசமயமாக்கியிருக்கிறார்கள். இத்தனை விமரிசையாக அம்பலப்பட்ட பின்னும் மோடியின் தேர்தல் வெற்றி சாத்தியமாகி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இது தான். நாஜிக் கட்சியினர் எப்படி ஜெர்மானியர்களின் மனங்களை பாசிசமயமாக்கி யூதர்களுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை அமைதியாக வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கும் வெறும் பார்வையாளர்களாக ஆக்கினார்களோ அதே வழிமுறையைத் தான் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் குஜராத்தில் பின்பற்றியது – தேசமெங்கும் அதையே விரித்துச் செல்லும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதனால்தான் குஜராத் இந்துத்வத்தின் சோதனைச் சாலையாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எனும் பாசிச இயக்கத்தை பாராட்டும் பா.ரா!

1948ஆம் ஆண்டு காந்தி கொலை செய்யப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. மராத்திய சித்பவன பார்ப்பனனும், இந்து மகா சபையின் தீவிரவாதியுமான நாதுராம் கோட்சேதான் காந்தியைக் கொல்கிறார். சாவர்க்கரின் தலைமையிலான ஒரு தீவிர இந்துத்தவ கும்பலே இதை திட்டமிட்டு செய்கிறது. கோட்சே ஒரு ஸ்வயம் சேவகரும் கூட. ஆனால் அவர் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ்காரர்தான், காந்தி கொலையின் போது அவர் அந்த இயக்கத்தில் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாம். இதை டெக்னிக்கலாக சொல்லி ஆர்.எஸ்.எஸ் பங்கை விடுவிக்கிறார், பா.ரா.
சரி, ஒரு ஸ்வயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்கு ஏதாவது சாட்சியங்கள் இருக்கிறதா? இல்லை. உலகத்தில் உள்ள எல்லா கட்சிகளும், அமைப்புகளும் அவ்வளவு ஏன் நமது சிலம்பரசனது ரசிகர் மன்றத்தில் கூட உறுப்பினர்கள் என்றால் ஒரு அடையாள அட்டை கொடுப்பார்கள். அந்தந்த அமைப்புகளின் ஆவணங்களில் உறுப்பினர்களது பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் இப்படி ஒரு ஜனநாயக நடைமுறை ஆர்.எஸ்.எஸ் இல் அறவே கிடையாது. யாரெல்லாம் அதன் ஷாகாக்களுக்கு வருகை தருகிறார்களோ அவர்களெல்லாம் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறுவார்கள். ஒரு வேளை அவர்கள் ஷாகாக்களுக்கு வருகை தருவதை நிறுத்தி விட்டால் அவர்களை முன்னாள் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறமாட்டார்கள். கேட்டால் வாழ்க்கையில் ஓரிரு நாட்கள் வந்தால் கூட அவர்கள் என்றுமே ஸ்வயம் சேகவர்கள்தான், இதில் முன்னாள், பின்னாள் என்று பாகுபாடெல்லாம் கிடையாது என்பார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் இந்த லாஜிக்படி கோட்சே ஒரு ஸ்வயம் சேவக்தான்.
ஆர்.எஸ்.எஸ்இல் இப்படி உறுப்பினர் பதிவேடுகள், இல்லாமல் இருப்பதற்கு காரணம் அது ஜனநாயகமற்ற பாசிச அமைப்பு என்பதுதான். ஆர்.எஸ்.எஸ்இல் ஒரு உறுப்பினருக்கு இன்னென்ன உரிமைகள், கடமைகள், அவருக்கு அதன் தலைவர்களை தெரிவு செய்யும் வாக்குரிமை என்று எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ்இன் பல்வேறு கீழ்மட்டத் தலைவர்களெல்லாம் மையத்திலிருந்து நியமனம் செய்யப்படுபவர்கள்தான். சான்றாக ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் தனக்கு பிறகு கோல்வால்கரை தெரிவு செய்கிறார். கோல்வால்கர் தனக்கு பிறகு தேவரசை தலைவராக தெரிவு செய்து உயில் எழுதிவிட்டு சாகிறார். அதே போல தேவரஸ்ஸுக்கு பிறகு ராஜேந்தர் சிங், அவருக்கு பிறகு சுதர்சன், சுதர்சனுக்கு பிறகு மோகன் பகவத் என்று சங்கராச்சாரிகளின் சங்கரமடம் போல ஆர்.எஸ்.எஸ்இன் பாரம்பரியம் தொடர்கிறது.
இதுதான் இந்த பாசிச அமைப்பின் இயங்கு முறை. ஆனால்
” ஜனநாயகத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் விவாத, விமரிசன கேலிக்கூத்துகள் அறவே தவிர்க்கப்பட்டன. இவர் தலைவர், இது முடிவு. தீர்ந்தது விசயம் ” பக்.57
என்று இதற்கு ஒளிவட்டம் போடுகிறார் பா.ரா. ஆர்.எஸ்.எஸ் இல் மருந்துக்குக் கூட ஜனநாயகம் இல்லை என்பதை பா.ரா விவரிக்கவில்லை என்பதும் அதையே போற்றுகிறார் என்றால் அது அவருடைய கருத்து மட்டுமல்ல. அவருடைய நூலை வாங்கி படிக்கும் ‘இந்துத்வ’ நடுத்தர வர்க்கத்திடம் கேட்டால் கூட ” இந்தியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சி வந்தால்தான் நாடு உருப்படும்” என்று சொல்வார்கள்.
காந்தி கொலைக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அடுத்த ஆண்டே மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இந்த சலுகை அந்த இயக்கத்திற்கு எப்படி கிடைக்கிறது?

அமெரிக்க கைக்கூலியாய் கம்யூனிசத்தை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்!

அப்போது தமது இயக்கத்தின் மேலான தடையை விலக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ்இன் தலைவர் கோல்வால்கர், நேருவுக்கு எழுதிய கடிதங்களில் உலகெங்கும் கம்யூனிச அபாயம் பரவுவதாகவும் இந்தியாவிலும் அது வேகமாகப் பரவிவருவதாகவும் இதை எதிர்த்த போராட்டத்தில் அரசுக்கு விசுவாசமான அடியாள் படையாக ஆர்.எஸ்.எஸ் இருக்கும் என்கிற உறுதி மொழியைக் கொடுத்துள்ளார். அன்றைய சூழ்நிலையில் உலகளவில் கம்யூனிஸ்டுகளைக் கண்டு அஞ்சியது அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்தியளவில் நிலபிரபுக்களும், தரகு முதலாளிகளும் தான். இதிலிருந்தே இவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கிறது என்பது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
அந்த காலகட்டத்தில் தெலுங்கானாவில் நிலவுடைமை பண்ணையார்களை தூக்கி எறிந்துவிட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலத்தை சொந்தமாக்கி ஆயுதந் தாங்கிய போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வந்தார்கள். இந்த செயல் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்றால் அதற்கு பரிகாரம் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ் துடித்திருக்கிறது. மேலும் உலக அளவில் கிழக்கு ஐரோப்பாவிலும், கொரியா, வியட்நாமிலும் கம்யூனிஸ்ட்டுகள் வென்று வரும் நேரத்தில் அமெரிக்கா அலறித் துடிக்கிறது. அந்த அமெரிக்காவின் கையை பலப்படுத்தி இந்தியாவில் கம்யூனிச அபாயத்தை வீழ்த்துவதற்கு தங்கள் மீதான தடையை விலக்க வேண்டுமென்று கோல்வால்கர் கூறுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?
ஆம். ஆர்.எஸ்.எஸ் என்பது இந்தியாவின் எதிர்ப்புரட்சி கும்பல் என்பதே. அதனால்தான் அந்த இயக்கத்தின் மீதான தடை நேரு அரசாங்கத்தால் நீக்கப்படுகிறது. இந்த வரலாற்று உண்மை பா.ரா என்ற ‘நூல்’ ஆசிரியரின் அக்கறைக்குரியதாக இல்லை. ஜமீன்தார்கள், மிட்டா மிராசுதாரர்கள், பண்ணையார்களது அதிகாரம், நில உடமை பறி போவதை பார்த்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பதறுகிறது என்றால் இந்த கட்சியின் யோக்கியதை குறித்து வாசகர் முடிவு செய்து கொள்ளலாம்.

மக்களுக்குகாக போராடாத ஆர்.எஸ்.எஸ்இன் பரிவார அமைப்புகள்!

இதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் பல்வேறு பரிவார இயக்கங்களைப் பற்றி பிரம்மிப்பூட்டும் வகையில் விவரிக்கிறார் பா.ரா. இவை ஆரம்பிப்பதற்கு என்ன காரணம்? காந்தி கொலையின் போது அந்த இயக்கத்தின் சார்பில் பொது அரங்கில் பேசுவதற்கு யாருமில்லை என்று கோல்வால்கர் கவலைப்பட்டு இத்தகைய கிளைகளை ஆரம்பிக்கிறாராம். பா.ரா இதில் பார்க்கத் தவறிய உண்மை ஒன்று இருக்கிறது. என்னதான் தடை நீக்கபட்டாலும், பட்டேல் போன்ற தீவிர இந்துத்வவாதிகள் காங்கிரசில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்இன் கொள்கையை நேரடியாக பேசுவதற்கும், செயல்படுத்துவதற்குமான ஒரு அரசியல் கட்சி இல்லை என்பதும், அரசியல் அதிகாரத்தில் நாமே நேரடியாக குதிக்க வேண்டும் என்ற அவாவே ஆர்.எஸ்.எஸ் பல்வேறு பரிவார இயக்கங்களை ஆரம்பிப்பதற்கு காரணமாகும். அந்த வகையில் ஜனசங்கம் என்ற முன்னாள் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.
இன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பிக்கு ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பி.எம்.எஸ் எனப்படும் பாரதிய தொழிற்சங்கம் இருக்கிறதாம். இன்னும் தேசமெங்கும் செல்வாக்கான மடங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றில் ஊடுருவி வேலை செய்யும் பலமான வி.எச்.பி, வடநாட்டில் அநேகமாக எல்லா மலைவாசி கிராமத்திலும் கிளைகள் கொண்ட வனவாசி கல்யாண் ஆஷ்ரம் என்று அவர்களது பலமான வலைப்பின்னலை ஒரு வியப்புடன் வாசகனுக்கு விவரிக்கிறார் பா.ரா.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் இருப்பதாகத் தோன்றும். இது தமிழ்நாட்டின் ஆதிக்க சாதி சங்கங்கள் அடித்துவிடும் பிரம்மாண்டமான உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஒப்பானதாகும். மேலும் பொட்டு வைத்தவெனெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரன் என்ற பொதுப்புத்திக்கு முரண்படாத வாதமும் ஆகும்.
இருக்கட்டும். இப்படி ஒவ்வொரு அரங்கத்திற்கும் தனித்தனியான அமைப்புகளைப் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ், அந்தப் பிரிவு மக்களின் எத்தனை கோரிக்கைகளுக்குப் போராடியுள்ளது என்கிற செய்தியை மட்டும் பா.ரா சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் அபிமானத்திற்குரிய வாசர்களான மயிலாப்பூர் பார்த்தசாரதிகளுக்கு வேண்டுமானால் அது தேவைப்படாத தகவலாய் இருக்கலாம்; ஆனால் வினவு வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
தி.மு.க, அ.தி.மு.க போன்ற ஆளும் வர்க்க கட்சிகளிலும் மாணவர் பிரிவு, தொழிலாளர் பிரிவு, விவசாயிகள் பிரிவு என்று வைத்திருக்கிறார்கள். இவர்களாவது அந்தந்த வர்க்கப் பிரிவினரின் கோரிக்கைக்காக ஒரு சந்தர்ப்பவாதமாகவாவது போராடியிருக்கிறார்கள். இன்றைக்கு கல்வியே வியாபாரமாகப் போய்  விட்ட சூழலில், படித்த எத்தனையோ இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலையில், எத்தனையோ அரசுக் கல்லூரிகள் அரசால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், ஏ.பி.வி.பி ஆரம்பிக்கப் பட்ட இத்தனை வருடங்களில் எத்தனை முறை போராடியிருக்கிறார்கள்?
மாணவர் சமுதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி நடத்திய இயக்கங்கள் எத்தனை? சொல்லிக் கொள்ளுமளவு ஒன்றுமில்லை என்பதே உண்மை. அப்படியிருக்க ஏ.பி.வி.பி ஏன் ஆரம்பிக்கப் பட்டது? யாருடைய நலனுக்காக இயங்குகிறது?
இதற்கு நாம் பதில் சொல்ல வேண்டாம். பா.ராவே பதில் சொல்கிறார் – மாணவர்களை மொழிப் போராட்டம், சாதி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் தடுத்து அவர்களை அரசியல் விலக்கம் செய்வது தான் நோக்கமாம். ஏ.பி.வி.பியில் இணையும் மாணவனை ஷாகாக்களுக்கு வரவழைத்து இந்துத்வத்தை ‘உணர்வாகவும் உணவாகவும்’ ஊட்டுவார்களாம் (பக்கம் 44). மொழி உரிமைப் போராட்டம் என்று பா.ரா குறிப்பிடுவது தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தான். அதாவது, தமது பார்ப்பன சனாதன தருமத்தின் பரவலுக்கு மாணவர் பிரிவினரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்து விடாமல் தடுத்து அவர்களை மடை மாற்றி மதவெறி ஊட்டி பாசிஸ்ட்டுகளாக வார்த்தெடுப்பது தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்.
அதே போல் உலகிலேயே முதலாளிகளைக் கேள்வியே கேட்காமல் உழைக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு கருங்காலி தொழிற்சங்கம் தான் பி.எம்.எஸ். அந்த வகையில் முதலாளிகள் இந்த சங்கத்தை ஸ்பான்சர் செய்து வளர்த்தார்கள். முதலாளிகளும், தொழிலாளிகளும் முரண்படாமல் ஒருங்கிணைந்து பாரதத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பதுதான் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கொள்கை முழக்கம். மே தினத்திற்கு பதில் விசவகர்மாவின் ஜன்ம நட்சத்திர தினத்தைத்தான் தொழிலளிகளும், முதலாளிகளும் கொண்டாட வேண்டுமென்பது இந்த சங்கத்தின் சுதேசிக் கொள்கை.

பழங்குடிகள் போராட்டத்தை ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ்!

வடநாட்டில் வனவாசிகள் வாழும் கிராமம் தோறும் கிளைகள் கொண்டிருப்பதாக பா.ராவால் வியந்தோதப்படும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் ஒரிசாவிலும் சட்டீஸ்கரிலும், ஆந்திரத்திலும், பீகாரிலும், மேற்குவங்கத்திலும் வனவாசி மக்கள், பன்னாட்டு நிறவனங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த போது எங்கே போனது? இதன் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் எங்கே மாயமாக மறைந்து போனார்களா?
அயோத்தி புனிதம். மதுரா புனிதம். காசி புனிதம். எனில்  நியாம்கிரி புனிதமில்லையா? கோண்ட் இன மக்களின் வாழ்வாதாரமாய் இருக்கும் அம்மலையை பன்னெடுங்காலமாய் அவர்கள் புனிதத்தாயாக வணங்கி வருகிறார்களே அதை அவர்களிடமிருந்து பறித்து, அம்மண்ணை விட்டும், கோண்ட் தாயை விட்டும் விரட்டியடித்து விட்டு பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க இந்திய இராணுவமே களத்தில் இறங்கியிருக்கும் போது, குண்டாந்தடிப் பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களின் வழிபாட்டு உரிமையை காப்பாற்றப் போகிறோம் என்று புறப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா?
ஆனால் செய்ததென்ன? பாரதிய ஜனதா மூலமும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் மூலமும் திரட்டப்பட்ட சில கைக்கூலி பழங்குடியினரை வைத்து சல்வாஜூடும் என்கிற குண்டர் படையை ஆரம்பித்து, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து லட்சக்கணக்கான பழங்குடியினர் மேல் ஏவி விட்டுள்ளனர். போஸ்கோ, மிட்டல் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் அடியாள் படையாக அணிதிரட்டி நிறுத்தியிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்இன் சங்க பரிவார அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கையை கோடிகளில் காட்டும் கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரும், ‘மாபெரும் அறிஞரு’மான பா.ராவுக்கு இந்த உண்மைகள் மறந்தும் கூட தெரியாமல் போனது என்?

பெண்கள் சேரமுடியாத ஆர்.எஸ்.எஸ்ஸும் அல்கைதாவும்!

பெண்களுக்காகத் ‘தனியே’ ஒரு இயக்கம் ஆரம்பித்தது இவர்களுடன் பெண்கள் நிறைய சேர ஒரு காரணம் என்று பா.ரா ஆச்சரியமாய்க் குறிப்பிடுகிறார். ஆனால், இதில் அவர் குறிப்பிடாமல் மறைத்த இன்னொரு விஷயமும் இருக்கிறது.  தி.மு.கவாகட்டும், அ.தி.மு.கவாகட்டும் இன்னும் உலகில் எந்தவொரு அரசியல் சமூக இயக்கங்களாகட்டும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், உலகிலேயே பெண்களை இயக்கத்தில் சேர்க்காமல் ‘தனியே’ தள்ளி வைத்திருக்கும் இயக்கங்கள் மூன்று தான் – ஒன்று கூ -க்ளக்ஸ் – க்ளான், இரண்டு அல்காயிதா, மூன்று ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்இன் விதிமுறைப்படி அங்கு பெண்களுக்கு இடமில்லை. அதனால்தான் பெண்களுக்கென்று தனியே ராஷ்ட்ரிய சேவிகா சமிதி என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். சங்கபரிவார அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இல் ஒரு பெண் உறுப்பினராக சேரக்கூடாது என்று இன்றும் அதாவது இருப்பத்தியோராவது நூற்றாண்டிலும் ஒரு கூட்டம் இருக்கிறு என்ற பாசிச உண்மையை அதன் பக்தரான பா.ரா ஏறெடுத்தும் பார்க்கவில்லை. என்ன இருந்தாலும் அவரும் அத்தகைய விழுமியங்களை, பச்சையான ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சான்றோர்தானே?
ஆதாரம் வேண்டுவோர் பா.ராவை அணுகி அதுகுறித்து கல்கி பத்திரிகையில் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி என்ன சொல்லியிருக்கிறார், உயிரோடு இருக்கும் ஜெயேந்திரர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்டால் தப்பாமல் சொல்வார். ஏனெனில் அந்த மேற்கோள்களை பக்தி சிரத்தையோடு பிழை திருத்தம் பார்த்த பக்தர் அவர்தான்.

ஆர்.எஸ்.எஸ்இன் ஒழுக்கமும், தேசபக்தியும் உண்மையல்ல!

பா.ரா தனது நூலின் நெடுக ஆங்காங்கே ஆர்.எஸ்.எஸ்ஸைச் செல்லமாகக் கடிந்து கொள்ளவும் செய்கிறார். ஆனால், அதையெல்லாம் மீறி எந்த விமரிசனத்திற்கும் அப்பாற்பட்ட உண்மையாக அவர் கூறுவது, போற்றுவது, வாசகர்களிடம் உருவாக்க நினைப்பது என்ன? ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தேசபக்தர்கள், முக்கியமாக திருமணத்தை தியாகம் செய்த பிரம்மச்சாரிகள் என்றும் புகழ்கிறார். இதை வாசகர்கள் எந்த சந்தேகமின்றியும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று பல இடங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.
நாம் ஒரு வாதத்திற்காக பிரச்சாரக் கோவிந்தாச்சார்யா – உமாபாரதி காதல் கதைகளும், பிரச்சாரக் சஞ்சை ஜோஷியின் காமக் களியாட்டங்கள் சி.டியாக வலம் வந்ததையும், வாஜ்பாயி, இல.கணேசன் போன்ற அக்மார்க் பிரம்மச்சாரிகளின் யோக்கியதை குறித்து குமுதமே கிசுகிசு எழுதி அம்பலமாகி ஊரே நாறி சிரிப்பாய்ச் சிரித்ததை ஒதுக்கி வைத்து விட்டு பா.ரா அளிக்கும் ஒழுக்கவாத சான்றிதழைப் பார்க்கலாம்.
ஒழுக்கம் என்பது என்ன? அதன் அளவு கோள் என்ன?
ஒரு சின்ன உதாரணத்தைப் பார்க்கலாம். ஒருவன் ரொம்ப ஒழுக்கமானவன். புகைப் பழக்கம் இல்லை. மது அருந்தும் பழக்கம் இல்லை. பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன். நெற்றியில் பட்டை – கழுத்தில் கொட்டை; பெரிய பக்திமான். முக்கியமாக அவன் ஒரு பிரம்மச்சாரி. ஆனால், அவன் தொழிலில் மட்டும்  விபச்சாரத் தரகன். இவனின் ஒழுக்கம் பற்றி இப்போது நீங்கள் கொள்ளும் மதிப்பீடு என்ன?
ஆக, ஒழுக்கம் என்பது ஒரு தனிமனிதனின் பழக்க வழக்கங்களிலும் தனிப்பட்ட பண்புகளிலும் மட்டும் சுருங்கிக் கொள்வதல்ல. அது அம்மனிதன்  சமூக உறவில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைக் கொண்டும் தான் உருவெடுக்கிறது. சமூக உறவுகளில் ஒழுக்கமில்லாத ஒருவன் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய ஒழுக்கவானாக இருந்தாலும் அவன் ஒரு அயோக்கியனே. இல்லையென்றால் எந்த கெட்டபழக்கமும் இல்லாமல், கோவில் கொடைகளுக்கு வாரி வழங்கும் பல்வேறு ரவுடிகளையும் நாம் பிரச்சாரக்குகள் போன்று போற்ற வேண்டும். இந்திய இராணுவத்தின் இரகசியங்களை விற்று கைதான தீவிர ஆன்மீக சிவபக்தரான கூமர் நாராயணனையும் நாம் வணங்க வேண்டும்.

வாஜ்பாயி தலைமையில் பா.ஜ.கவின் பாரத மாதா விற்பனை!

பா.ரா தனது நூலின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தேசபக்தியை கேள்விக்கப்பாற்பட்ட இடத்தில் வைத்து போற்றுகிறார். வேறு பெரிய விளக்கங்களை இதற்கு நாம் தேட வேண்டிய அவசியம் எதையும் வைக்காமல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் ஒருவர் போராட்டம் ஒன்றின் போது சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப் பட்ட போது நீதி மன்றத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமே ஆர்.எஸ்.எஸ் கொண்டிருந்த ‘தேசபக்தியை’ தெளிவாக விளக்குகிறது.
“He had given a confessional statement in the court which helped in his release from the jail for his being just the onlooker of the assembly which went on to damage the government property. At that time he was a dedicated and active member of RSS. In his confession he wriggles out of active participation. ‘ I along with my brother followed the crowd, I did not cause any damage. I did not render any assistance in demolishing the government buildings’ ” (<http://www.milligazette.com/Archives/15-12-2000/Art6.htm>)
மேலே உள்ள ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் காட்டியும் கொடுத்த அந்த தேசபக்தி நிறைந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய். தேசவிடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த அந்த தேர்ந்த முன் அனுபவம் தான் பிற்காலத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசத்தையே காட்டிக் கொடுக்க அவருக்குக் கை கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் தனது சுதேசி ஜாக்ரன் மன்ச் எனும் ஒரு காமெடி பீஸு இயக்கத்தை கொண்டு மக்களிடம் சுதேசிப் பொருள்களின் பட்டியலை விநியோகித்துக் கொண்டிருந்த போது இவரோ சுதேசி நிறுவனங்களை விதேசிகளிடம் ‘தேசபக்தியோடு’ விலை பேசிக் கொண்டிருந்தார்.
ஒழுக்கமான, நேர்மையான, பிரம்மச்சாரியான இன்றைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் என்ன செய்கிறார்? அப்பட்டமாய் அம்பலமாகி ஊரே காறித்துப்பிய பொம்பளைப் பொறுக்கி மற்றும் கொலைகாரனான காஞ்சி சங்கராச்சாரியின் காலைக் கழுவிக் குடிக்கிறார். நித்தியானந்தா அம்பலமாகி நின்ற போது ஒரு அடையாளமாகக் கூட எந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும் கண்டிக்க வில்லை. இன்னொரு ஒழுக்கமான பிரம்மச்சாரி பிரச்சாரக்கான வாஜ்பாயி, நம்மிடம் பாரதமாதா படத்தைக் கொடுத்து சூடம் சாம்பிராணி காட்டிக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லி விட்டு – வெளியே பாரதமாதவைப் பன்னாட்டு முதலாளிகளிடம் கூட்டிக் கொடுத்துள்ளார். அதாவது பாரதமாதாவை ஏகாதிபத்தியங்கள் ‘கற்பழிப்பதற்கு’ ரேட்டு பேசினார்.
இந்தத் தேசத்தின் நதிகளெல்லாம் புனிதமென்று ஷாகாவில் பயின்று வந்த பிரச்சாரக்கான வாஜ்பாயி தான் கங்கையை விலை பேசினார். எங்கள் தேசத்தின் புழுதியே சந்தனம் தானென்று தினமும் ஷாகாவில் பஜனை பாடிய பயிற்சி பெற்று வந்த வாஜ்பாயி  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை சுயாட்சிப் பிரதேசங்களாகப் பட்டா போட்டுக் கொடுத்துள்ளார்.
தேசபக்தியென்பது காவிக் கொடியேந்திய லட்சுமி படத்தை பாரத மாதாவென்று சொல்லி சூடம் சாம்பிராணி காட்டி கும்பிடுவது தானா? தேசம் என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமா? இல்லை காவிக் கொடியேந்திய லட்சுமி படமா? இல்லை. ஒரு தேசம் என்பது அதனுள் ரத்தமும் சதையுமாக வாழும் மக்கள். அந்த மக்களின் நலனுக்காக உழைப்பதே உண்மையான தேசபக்தி. இந்தப் பரிவாரங்களெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் எத்தனை மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் போராட்டங்களை, இயக்கங்களை எத்தனை முறை முன்னெடுத்திருக்கிறார்கள்? ஒன்றுமில்லை என்பதே இந்த தேசபக்தர்களது யோக்கியதை.

ஆர்.எஸ்.எஸ்இன் பிரம்மச்சாரி பிரச்சாரக்குகள் தியாகிகளாம்!

அயோத்தி ராமனை இந்த நாட்டின் மாபெரும் இலட்சிய புருஷன் என்று அவாள் கம்பெனிகள் போற்றுவதற்கு என்ன காரணம்? எல்லா  இராமயணங்களும், அதன் உபன்னியாசர்களும் அதற்கு இறுதியில் கூறும் காரணமென்னவென்றால் இராமன் ஒரு ஏகபத்தினி விரதன் என்பதாகும். ஒரு நாட்டில் ஒருவன் ஒரு பெண்டாட்டியை வைத்திருக்கிறான் என்பதற்காகவே அவனை போற்றுகிறார்கள் என்றால் அந்த நாட்டில் மற்றவர்களெல்லாம் பொம்பள பொறுக்கிகள் என்று அர்த்தம்.
அதே போல ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் திருமணம் செய்யவில்லை என்பது தியாகமென்றால் பதிவுலகில் திருமணம் ஆகாத அத்தனை பேரும் தியாகிகள்தான். இந்த தியாகத்தை பல நூற்றாண்டுகளாய் கத்தோலிக்க பாதிரியார்களும் செய்து வருகிறார்கள். என்ன, திருச்சபையில் கொஞ்சம் ஜனநாயகம் இருப்பதால் அந்த தியாகங்கள் சந்தி சிரித்த கதைகள் நிறைய வெளியே வந்துவிட்டன. ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச இயக்கமென்பதால் இந்த தியாகத்தின் உண்மை ரூபம் வெளியே கசிவதில்லை.
ஈழத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிலும், காஷ்மீரத்திலும் குடும்பம், கணவன், மனைவி, குழந்தைகளை இழந்து அனாதைகளாய் கோடிக்கணக்கான மக்கள் வாழும் உலகத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் காமத்தை திருட்டுத்தனமாய் அடக்கினான் என்பதுதான் தியாகமா? பா.ராவின் ஆய்வு இந்த விசயத்தில் ஆபாசமாகவும், அருவெறுப்பாயும் இருக்கிறது.
முடிவுரை:

உலக பாசிச இயக்கங்களின் வரிசையில் ஆர்.எஸ்.எஸ்!

முதல் உலகப் போர் முடிந்து, ரசியாவில் கம்யூனிச எழுச்சி ஏற்பட்ட பிறகு 1920களில் உலகமெங்கும் உள்ள முதலாளிகளில் தீவிர தேசியத்தின் முகமூடியில் இனவெறி பேசிய பாசிச பிரிவினர் தோன்றுகிறார்கள். இனிமேலும் ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்க முடியாது என்று மத,சாதி,இனவெறியின் பேரில் தோன்றிய ஹிட்லரின் நாசிக் கட்சி, முசோலினியின் பாசிசக் கட்சி, ஜப்பானின் தேசியவெறி மன்னராட்சி முதலான சமகால பாசிச இயக்கங்களின் வரிசையில்தான் அதே காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும் தோன்றுகிறது. மற்ற இயக்கங்கள் பாசிசத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து பின்னர் அழிந்து விட்டன என்றால் ஆர்.எஸ்.எஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு பல ஆண்டுகள் ஆனது. இதற்கு காரணம் இந்த நச்சுப் பாம்புகளை, இவர்களது பார்ப்பனியத்தை எதிர்த்து இந்தியாவில் பெரும் போராட்டங்கள் நடந்தன என்பதுதான்.
இன்று தீவிர இந்துத்வம் பேசினால் கடை ஓடாது என்ற நிலையில் அரசியல் ரீதியில் அவர்கள் காலாவதியாகும் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஒரு ஒளிவட்டம் போட்டு வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார் பா.ரா. உலகமயமாக்கத்தின் தயவில் நுகர்வுக் கலச்சாரத்தில் முங்கி எழும் நடுத்தர வர்க்கம் தனது பண்பாட்டு ஏக்க புலம்பலுக்காக ஆன்மீகம், கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று சுயதிருப்தி அடையும் வரிசையில் ஆர்.எஸ்.எஸ்ஸும் வருகிறது. மேலும் பொதுப்புத்தியில் இந்துத்வம் வலுவாக படிந்திருக்கும் நிலையில் அதை விற்று காசாக்கும் நோக்கில்தான் கிழக்கு பதிப்பகத்தின் இந்த நூல் திட்டமிட்டு பொய்களோடும், புனைவுகளோடும் சந்தையில் இறக்கி விடப்பட்டிருக்கிறது.

பா.ராவை ஆதரிப்போரும், விமரிசிப்போரும் ஸ்வயம் சேவக்குகளே!

இதனால் அரவிந்த நீலகண்டன், ஜடாயு, டோண்டு ராகவன், ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் இந்த நூலை வரவேற்பார்கள் என்பதல்ல. அவர்களைப் பொறுத்த வரை பா.ரா வை கொஞ்சம் செல்லமாக கடிந்து விட்டு அவர் இந்துத்வத்தின் தீவிர இலட்சியத்தை இந்த நூலில் முன்வைக்க வில்லை என்று விமரிசிப்பார்கள். இது அசோக் சிங்காலின் குரல் என்றால் அதே ஆர்.எஸ்.எஸ்ஸில் பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, அருண் ஷோரி, இந்தியா டுடே, வாஜ்பேயி, கிழக்குபதிப்பகம், தமிழ் பேப்பர் போன்ற முதலாளித்துவத்தை முதன்மைப்படுத்தும் இந்துத்வவாதிகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள்தான் இந்த நூலை வரவேற்பார்கள். அந்த வகையில் இந்த புத்தகம் தராளமய தாசர்களான இந்துத்வவாதிகளை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

எது வரலாறு?

வரலாறு என்பது எப்போதும் தெளிவான சித்திரத்தை பதிவு செய்து எதிர்காலத்திற்கு வழங்கிவிடும் ஒன்றல்ல. உண்மையில் வரலாறு என்பதே சமூகத்தின் நிகழ்ச்சிப் போக்கான இயக்கத்தை துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஒன்றாகும். இதில் எதை நீங்கள் கண்டு பிடிக்க போகிறீர்கள் என்பது உங்களது வர்க்க நலன் தீர்மானிக்கும். அந்த வகையில் எல்லா வரலாறுகளும் கூட அந்தந்த வர்க்க நலன்களின் விருப்பங்களோடும், தேவைகளோடும்தான் உருவாகிறது. அதனால் வரலாறு என்பது முழுக்க அகநிலை விருப்பங்களால் புனைந்துரைக்கப்படும் புனைவு என்று பொருளல்ல. அது பல்வேறு விசயங்களை பதிவு செய்திருக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் எதை பார்க்க விரும்புகிறீர்கள், எதை முன்னிலைப்படுத்த விரும்புகிறீர்கள், யாருக்காக ஆய்வு செய்கிறீர்கள் என்பதோடு தொடர்புடையது என்கிறோம்.
சாரமாக பெரும்பான்மை மக்கள் நலனிலிருந்து பார்த்தால் வரலாறு என்பது ஒடுக்கப்படும் வர்க்கங்கள் நீதிக்காக ஒடுக்கும் வர்க்கங்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை குறிக்கிறது என்று அறியலாம். அதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் என்பது ஒடுக்கும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப உருவானது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி புரிந்து கொள்ளலாம். கூடவே நூலாசிரியர் பா.ராவின் பச்சையான அயோக்கியத்தனத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
ஆர்.எஸ்.எஸ் குறித்த இந்த நூலுக்கு பா.ரா படித்த புத்தகங்களில் அதிகம் இருப்பது ஆர்.எஸ்.எஸ்இன் வெளியீடுகள்தான். இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு அந்தக் காலத்திலேயே இராமன் குரங்கு கூட்டத்தை வைத்து மண்ணால் பாலம் கட்டினான் என்று வரலாறு எழுதும் இந்த கும்பலிடமிருந்து எதை ஆய்வுக்கு எடுக்க முடியும்? ஒருவேளை எடுத்துக் கொண்டாலும் அவர்களது பிற்போக்கு பாத்திரத்தை நிறுவுவதற்குத்தான் பயன்படவேண்டும். ஆனால் பா.ரா அவர்களது புளுகுகள் பலவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறார். அந்த வகையில் பா.ராவையும் நாம் ஒரு இலட்சியப் பூர்வமான ஸ்வயம் சேவக் என்றுதான் கொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாது தலைவர் கோல்வல்கர் எழுதிய ஞானகங்கை நூலில் அவர் ஹிட்லரையும், இஸ்ரேலையும் வியந்தோதி வழிப்பட்டிருப்பதெல்லாம் கூட பா.ராவின் காமாலைக் கண்ணுக்கு தென்படவில்லை. சிறுபான்மை மக்கள் மீது வன்மத்தையும், துவேசத்தையும் கக்கும் படிமங்களும், வசனங்களும் அந்த நூலில் ஏராளம். இருந்து என்ன பயன்?
கிழக்கு பதிப்பகம் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கலாம். பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினால் கூட அதற்கு கடன் அட்டை வசதி வழங்கும் வெகு நவீனமான நிறுவனமாக இருக்கலாம். ஆனால் பா.ராவின் இந்த நூல் ஒரு காயலான் கடையில் இருக்கும் ராஜேஷ்குமாரின் பழைய பாக்கெட் நாவலின் தரத்தில் கூட அதாவது உள்ளடக்கத்தில் இல்லை. முதலாளித்துவ பதிப்பகங்களிடம் இருக்கும் குறைந்த பட்ச தரமும், நம்பகத்தன்மையும் இந்த நூலில் நிச்சயம் இல்லை. இதையெல்லாம் யார் கேள்வி கேட்பார்கள் என்ற அலட்சியம் கூட இந்த டவுண்லோடு அறிவாளிகளிடம் இருக்கலாம்.
கல்கி பத்திரிகையில் சீனியர் சங்கராச்சாரியின் அருள் வாக்கோடு அறிவைப் பயின்ற இந்த பா.ராகவன் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு பார்ப்பனிய அறிஞர்தான். கூடவே அவர் சுஜாதாவின் ‘சிலிர்ப்பான’ நடையையும் கொஞ்சம் பயின்றிருக்கிறார். இது பதிவுலகின் மொக்கைகள் பலரும் ஆராதிக்கும் விசயமாகும். ஆனால் பா.ராவின் இந்த நடையைப் பார்த்தால் நமக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. எது ஆர்.எஸ்.எஸ்இன் கருத்து, எது பா.ராவின் கருத்து என்று பிரித்தறிய முடியாமல் பேருக்கு ரெண்டு விமரிசனங்களையும் கலந்துவிட்டு ஏதோ மர்ம நாவலைப் போல திடுக்கிடும் கோணங்களில் அவர் எழுதுவதைப் பார்த்தால் காறித் துப்பத் தோன்றுகிறது.

கிழக்கு பதிப்பகத்தை கேள்வி கேளுங்கள்!

கிளியோபாட்ரா தினமும் குளிக்கும் கழுதைப்பாலின் கதை, இந்திய சமஸ்தான ராஜாக்களின் தங்கக் கழிப்பறைகள், தென்னிந்திய தேவதை திரிஷாவின் வாழ்க்கை வரலாறு, கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தின் வெற்றிக் கதை போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளையெல்லாம் ஆயிரக்கணக்கான பக்கங்களில் அழகான தரத்தோடு கிழக்கு பதிப்பகம் நூலாக கொண்டு வந்தால் அதை நாம் ஆட்சேபிக்கப் போவதில்லை.
ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்பது இந்த நாட்டின் உழைக்கும் மக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்து இந்த நாட்டை பல பத்தாண்டுகளில் ரத்த சகதியாக்கியருக்கும் ஒரு பாசிச அமைப்பு. அதன் வாழ்வும், இருப்பும், வரலாறும் இந்த நாட்டின் பிற்போக்குத்தனங்களுக்கு ஒரு அரண். அந்த அரணை இடித்து நொறுக்குவதில்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் விடுதலை அடங்கியிருக்கிறது. எனவே இது நம்மைப் போன்றவர்களுக்கு சமூகக் கடமையாக இருக்கிறது. அத்தகைய கடமையேதும் இல்லாத, சந்தையில் விற்பனை இலாபம் என்ற பச்சையான சுயநலத்தை மட்டும் வைத்திருக்கும் கிழக்கு பதிப்பகம் போன்ற முதலாளிகளுக்கு ஆண்டாண்டு காலமாக இந்துத்துவ கூட்டத்தால் கொல்லப்பட்ட ஒரு முசுலீம் அல்லது ஒரு தலித்தின் அவலக்குரல் கேட்குமா என்ன?
சுரணையுள்ள வாசகர்கள் ஆர்.எஸ்.எஸ்  நூலை வாங்கியிருந்தால் அதை எடுத்துக் கொண்டு எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் அலுவகத்திற்கு சென்று வீசி எறிந்து விட்டு காசை திருப்பி கேளுங்கள்! ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நியாயத்தை கேளுங்கள்! கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரின் நூலே இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்றால் மற்ற கத்துக்குட்டிகளின் புரட்டுக்கள் எப்படி இருக்குமென்பதை அறிந்து கொள்ளுங்கள்!
வரலாறும், அறிவும் மேட்டுக்குடி கோமான்களது பொழுது போக்கல்ல. அவை நமது வாழ்க்கையில் இரத்தமும், சதையுமாய்  கலந்திருக்கும் சக்தி மூலங்கள். அதில் நாம் எந்த சமரசமும் செய்ய முடியாது. பா.ராகவனையும் மன்னிக்க முடியாது.
_______________________________________________________________
பின்குறிப்பு:
  1. எங்களுக்கு நேரம் அமைந்தால் இது குறித்து தனியான அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்து இந்த கட்டுரையில் பேசாத விசயங்கள் அத்தனை குறித்தும் விளக்குகிறோம். முடிந்தால் தனியாக ஒரு நூலையும் கொண்டு வர முயல்கிறோம்.
  2. இந்த ‘நூல்’ ஆசிரியர் காஷ்மீர் குறித்தும் ஒரு வரலாறு எழுதியிருக்கிறார். கூடிய விரைவில் அது குறித்த விமரிசனம் வரும்.
__________________________________________________

விளக்கக் குறிப்புகள்:

ஆர்.எஸ்.எஸ்: ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம். பொருள்: தேசத்தின் தன்னார்வத் தொண்டர்களது இயக்கம்
விநாயக தாமோதர சாவர்கர்: ஆரம்பத்தில் இந்து விழுமியங்களோடு ஆங்கிலேயர்களை எதிர்த்த தேசியவாதியாகவும், பின்னர் காலனிய ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டு தீவிர இந்துத்வவாதியாகவும் மாறிய மராட்டியத்தை சேர்ந்த சித்பவன பார்ப்பனர்.
கேசவ பலிராம் ஹெட்கேவார்: ஆர்.எஸ்.எஸ்ஐ 1925இல் ஆரம்பித்தவர். 1940இல் மரணம் அடைகிறார்.
மாதவ சதாசிவராவ் கோல்வல்கர்: ஹெட்கேவாருக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரானவர்
மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்: கோல்வல்கருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் மூன்றாவது தலைவரானாவர்.
ஷாகா: ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தினசரி உடற்பயிற்சிக்காக சந்திக்கும் கிளை
ஸ்வயம் சேவக்: ஆர்.எஸ்.எஸ் ஷாகக்களுக்கு வருகை தரும் உறுப்பினர்.
பிரச்சாரக்: ஆர்.எஸ்.எஸ்இன் முழுநேர ஊழியர்
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்: ஏ.பி.வி.பி எனப்படும் ஆர்.எஸ்.எஸ்இன் மாணவர் அமைப்பு.
வனவாசி கல்யாண் ஆஷ்ரம்: பழங்கடி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த இயக்கம்.
ராஷ்ட்ரிய சேவிகா சமிதி: ஆர்.எஸ்.எஸ்இன் பெண்கள் அமைப்பு
விசுவ ஹிந்து பரிஷத்: உலக அளவில் இந்துக்களை அணிதிரட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த அமைப்பு
பி.எம்.எஸ்: பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ்இன் தொழிலாளர்(முதலாளிகளும்தான்) பிரிவு
அஜினோ மோட்டோ: நினைத்தாலே நாக்கில் நீர் சுரக்க வைக்கும் சீனத்து உப்பு. அப்படி பா.ராவின் மொழி நடையை நினைத்தால் மொக்கைகளுக்கு கிளர்ச்சி வருமாம்.
ராஜரிஷி: ஷத்திரிய மன்னர்களை இந்து வருண சாதி தர்ம அறத்தின் வழியில் நடத்திய பார்ப்பன சாணக்கிய குருக்கள்
___________________________________________________________
இந்த கட்டுரைக்கான ஆதாரங்கள்,நூல்கள் பல இருக்கின்றன. எனினும் இணையத்தில் உள்ள சுட்டிகளை மட்டும் இங்கு இணைக்கிறோம்.
http://www.countercurrents.org/dalit-george020906.htm – Fascism Versus Indigenous People
http://www.countercurrents.org/desai160510B.htm – Background of Gujarat Riots
http://www.indianexpress.com/storyOld.php?storyId=34620 – GOA – A Liberation from Lies
http://pd.cpim.org/2001/march25/march25_nalini.htm – Savarkar Pledged Loyalty To British Government
மற்றும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்கள், ம.க.இ.க வெளியீடுகள், எஸ்.வி.ராஜதுரையின் நூல்கள்….
__________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
தொடர்புடைய பதிவுகள்: