புதுடெல்லி:வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய தவறினால் வரவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக ஹஸாரே அறிவித்துள்ளார்.
இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரைஷியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபொழுது அவர் கூறியதாவது:
ஹஸாரே குழுவினரின் முடிவு ஒழுங்கு முறைகளையும், நெறிமுறைகளையும் குறித்து கேள்வி எழுப்புவதாகும். ஏதேனும் ஒரு கட்சிக்காக மட்டும் பிரச்சாரம் நடத்துவது பிரச்சனையை உருவாக்கும். ஆதலால், ஹஸாரே குழுவினரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். ஜனநாயகத்தில் எவரையும் ஆதரிக்கவும், எதிர்க்கவும் உரிமை உண்டு. ஆனால், இது தேர்தல் நடைமுறைச் சட்டங்களை மீறுவதாக அமையக் கூடாது. சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் துவேசமான பிரச்சாரங்கள் அனுமதிக்கப்படாது. சுதந்திரமும், அமைதியாகவும் நடக்கும் தேர்தலை பாதிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க இயலாது. இவ்வாறு குரைஷி கூறினார்.
முன்பு ஹரியானா மாநிலத்தில் ஹிஸார் மக்களவை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அன்னா ஹஸாரே குழுவினர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. அங்கு ஹஸாரே குழுவினர் துவேசமான பிரச்சாரத்தை நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்திருந்தது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment