Friday, December 23, 2011

இரத்தம் குடித்து ஓய்ந்தபின் கடைசி அமெரிக்கப் படையும் வெளியேறியது...!


              கடந்த ஒன்பது ஆண்டுகளாக இராக்கில் அந்த நாட்டின் அதிபரின் உயிரைக்  குடித்து, குழந்தைகள் - பெண்கள் உட்பட லட்சக்கணக்கான இராக் மக்களை கொன்று  இரத்தம் குடித்து ஓய்ந்தபின், இராக்கை ஆக்கிரமித்திருந்த அமெரிக்காவின் கடைசி படை சென்ற ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.  
                      தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டப் போவதாகவும், இராக்கில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உயிர்களை கொள்ளும் அணுஆயுதங்களை தேடப்போவதாகவும், இராக்கில் சர்வாதிகாரத்தை ஒழித்து ஜனநாயகத்தை மலரச் செய்யப்போவதாகவும் - பல பொய்யான  காரணங்களை கூறி அமெரிக்க ராணுவம், இஸ்ரேல், இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, போலந்து ஆகிய தன் ராணுவக் கூட்டாளிகளோடு  சென்ற மார்ச் 2003 - லில் இராக்கில் நுழைந்தது  என்பதை நீங்கள் யாரும் மறந்திருக்கமுடியாது.
                அமெரிக்காவிற்கு இராக்கின் எண்ணெய் வளத்தை அள்ளிக்கொடுக்க மறுத்த இராக் அதிபர் சதாம் ஹுசைன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது, மக்கள் உரிமைகளை காக்கும் ஜனநாயக அரசை நிறுவப்போவதாக சொல்லி ஒரு பொம்மை அரசை நிறுவியது, பெண்கள் - குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது, போரில் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளிக்காமல் சாகடித்தது  போன்ற மனிதகுலத்துக்கு எதிரான வேலைகளை தான் இதுவரை அமெரிக்கா அங்கே செய்துவந்தது.  அமெரிக்க நுழைவிற்கு பின் இராக் மக்கள் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை நடத்தமுடியாமல் தவித்தனர். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாடெங்கும் இரத்தவாடைகள் தான் அடித்தன.
               இதற்காக அமெரிக்க அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா...? ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த தொகையை பசியால் வாடும் - பசிப்பிணியால் உயிரைவிடும் சோமாலிய மக்களுக்கு உணவு கொடுத்திருந்தால் அவர்கள் இறக்காமல் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 
              அதுமட்டுமல்ல ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை அமெரிக்கா இழந்திருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்திருக்கிறது. இத்தனை உயிர்களையும் பலிவாங்கிய அமெரிக்கப் படை கொடுத்த விலை என்பது ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஆகும். இதனால் அமெரிக்காவிற்கு கிடைத்த இலாபம் இராக்கின் எண்ணெய் வளம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதேபோல் இந்த எண்ணெய்க்குப் பதில் இராக்கிற்கு கிடைத்த பரிசு... நாட்டின் தலைவனையும் மக்களையும் இழந்ததும், நாட்டின் அமைதி குலைந்ததும், பொருளாதார சீர்கேடும், குழந்தைகளின் கல்வி இழப்பும் தான் என்பது வெளிப்படையானது. 


நன்றி ஆயுத எழுத்து  

No comments:

Post a Comment