Thursday, December 8, 2011

மக்கா மஸ்ஜித்: முன்மாதிரியான ஆந்திர மாநில அரசு

meccamasjid
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க ஆந்திர மாநில அரசு முடிவுச்செய்துள்ளது.
சட்டப்பேரவையில் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்த மறு தினமே 70 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்குவதற்கு விடுவிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பயங்கரவாத வழக்கில் அநீதமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைகளையும், சிறைவாசத்தையும் அனுபவித்த நிரபராதிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2007-ஆம் ஆண்டு மே மாதம் 15- ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரபலமான மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடித்ததில் ஒன்பது பேர் பலியானார்கள். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் 80 முஸ்லிம் இளைஞர்கள் ஹுஜி, லஷ்கர், சிமி இயக்க உறுப்பினர்கள் என குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சிறையில் இந்த இளைஞர்கள் அநியாயமான குற்றச்சாட்டுகளின் பெயரால் சிறையில் கொடுமைகளை சந்தித்த வேளையில், அவர்களது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர். அநீதமாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை பின்னர் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்து ஒரு வருடம் நிறைவடைகிறது. இக்காலக்கட்டத்தில் தீவிரவாதி என்ற அபாண்டமான பழியை சுமக்கவேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழலுக்கு அவ்விளைஞர்கள் தள்ளப்பட்டனர். உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்தார்கள் என்ற உண்மை அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மூலமாக தீவிரவாத பழிச் சொல்லிலிருந்து விடுதலை கிடைத்தது. ஆனால், அவர்கள் அனுபவித்த துயரத்திற்கும், சிறையில் கழித்த நாட்களுக்கும் யாரால் ஈடு செய்யமுடியும்? இந்நிலையில் தேசிய சிறுபான்மை கமிஷன் ஆந்திர மாநில அரசுக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அத்தொகையை இக்குற்றத்தை புரிந்த போலீஸ் அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து ஈடு செய்யவும் பரிந்துரை செய்தது.
இவ்வழக்கில் 80 பேர் கைது செய்யப்பட்ட போதிலும் 70 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஒரு வருடம் தாமதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கும் ஆந்திர மாநில அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது ஆகும். முஸ்லிம் இளைஞர்களை குற்றமற்றவர்கள் என கூறி நீதிமன்றம் விடுதலை செய்த வேளையில் அன்று ஆந்திர மாநில முதல்வர் மன்னிப்புக் கோரியிருந்தார். தற்பொழுது பாதிக்கப்பட்ட இளைஞர்களின் மறுவாழ்விற்காக இழப்பீட்டையும் வழங்கி ஆந்திர மாநில அரசு இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாறியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களின் பெயரால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மை தெள்ளத் தெளிவாக புரிந்த பிறகும் நிரபராதிகளை விடுதலைச் செய்யவோ அவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ எந்த மாநில அரசும் முன்வரவில்லை. இச்சூழலில் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை பாராட்டிற்குரியது மட்டுமல்ல துணிச்சலானதுமாகும்.
2006 செப்டம்பர் எட்டாம் தேதி 37 பேர் உயிரிழக்க காரணமான மலேகான் குண்டுவெடிப்பின் பெயரால் அநீதமாக கைது செய்யப்பட்ட9 முஸ்லிம் இளைஞர்களில் 7 பேர் 5 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாஸர் மஃதனி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என விடுதலைச் செய்யப்பட்டார். ஆனால் இவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுகள் தயாரில்லை. அதேவேளையில் அப்துல் நாஸர் மஃதனி மீண்டும் ஒரு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வேளையில், நிரபராதிகளுக்கு சில லட்சங்களை இழப்பீடாக வழங்குவதன் மூலமாக அவர்கள் இழந்தை திருப்பி கொடுக்க இயலாது என்றாலும் ஆந்திர மாநில அரசின் முடிவு அநியாயமாக கைது செய்யப்படும் அப்பாவிகளுக்கு நீதி வழங்குவதற்கான புதிய சட்டத்திருத்தத்திற்கு வழிகோலும் என எதிர்பார்ப்போம்!
அ.செய்யது அலீ.

No comments:

Post a Comment