தரையில் இருந்து கடலில் உள்ள போர்க் கப்பலைத் தாக்கும் இரு ஏவுகணைகளை, நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் தொடர் பரிசோதனை வெற்றிகளை அடுத்து, மேற்குலக நாடுகளின் பதட்டம் அதிகரித்துள்ளது.அணுசக்தியை அணு ஆயுதங்கள் செய்வதற்காக ஈரான் பயன்படுத்தி வருவதாக, அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அவை விதித்துள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஒன்று, ஈரானால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனை, பெர்ஷிய வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் நீரிணையில் நடந்து வரும் ஈரானின் கடற்படைப் பயிற்சியின் போது நடந்தது.
தொடர்ந்து, அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் கம்பிகளையும், உள்நாட்டுத் தொழில்நுட்பம் மூலம் தயாரித்து விட்டதாக நேற்று ஈரான் அறிவித்தது. இந்த இரு அறிவிப்புகளும் அமெரிக்காவையும், மேற்குலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.முன்னதாக, ஹோர்முசில் நடந்து வரும் ஈரான் கடற்படைப் பயிற்சியால் கிலியடைந்த அமெரிக்கா, அந்நாட்டின் மத்திய வங்கி உடனான அமெரிக்க வங்கிகளின் வர்த்தக உறவுகளுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், தரையில் இருந்து கடலில் உள்ள போர்க் கப்பலை குறிதவறாமல் தாக்கும் மேலும் இரு ஏவுகணைகளை, ஈரான் வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.இதுகுறித்து கடற்படைத் தளபதி மகமூத் மவுசாவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"காதர் மற்றும் நாசர் என்ற இந்த இரு ஏவுகணைகள் தமது இலக்கை மிகச் சரியாக தாக்கி அழித்துள்ளன.
இவை ராடாரின் கண்காணிப்பில் சிக்காது' எனத் தெரிவித்தார். பொதுவாக காதர் ஏவுகணை 200 கி.மீ., தூரம் வரை செல்லக் கூடியது. நாசர் ஏவுகணை 35 கி.மீ., தூரம் வரை செல்லக் கூடியது. நூர் என்ற மற்றொரு ஏவுகணையும் நேற்று பரிசோதிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தான் உலகின், 20 சதவீத எண்ணெய்க் கப்பல்கள் சென்று வருகின்றன. அதனால் அங்கு போர்ப் பயிற்சி நடத்துவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை மூடப் போவதாக ஈரான் மிரட்டியது என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி http://ithayapoomi.org
No comments:
Post a Comment