13 Dec 2011
சமீப ஆண்டுகளில் நமது நாட்டில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. குண்டுவெடிப்பின் சத்தம் அடங்குவதற்கு முன் அதனை செய்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் வேகமாக செய்திகளை வெளியிட்டன. காவல்துறையினரும் அவசர அவசரமாக முஸ்லிம்களை கைது செய்தனர்.
மாநில காவல்துறை, தீவிரவாத எதிர்ப்பு படை, சிபிஐ என வழக்குகள் பல கைகள் மாறி இறுதியாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் அப்பாவிகள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். காவல்துறையில் உள்ள சில நல்லுள்ளங்களின் முயற்சியால் குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள் என்ற உண்மை கண்டறியப்பட்டது.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை தொடர்ந்து ஆந்திர மாநில காவல்துறை ஏறத்தாழ 150 முஸ்லிம் இளைஞர்களை விசாரணைக்காக அழைத்து சென்றது. இதில் ஏறத்தாழ ஐம்பது நபர்கள் சில தினங்களில் விடுவிக்கப்பட்டனர், ஏனையவர்கள் சிறையில் அடைத்து சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். டாக்டர்களாகவும் எஞ்சினியர்களாகவும் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் படித்து கொண்டிருந்த இந்த இளைஞர்களை சிறையில் அடைத்து அவர்களின் வாழ்க்கையை நிர்க்கதி ஆக்கினர்.
நாட்கள் செல்ல செல்ல இவர்களை குற்றவாளிகள் என்று சித்தரிப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் இவர்களை விடுதலை செய்தனர். சிலர் மாதங்களில் விடுதலை செய்யப்பட்டனர், சிலர் வருடங்கள் கழித்து வெளியே வந்தனர்.
சென்ற வாரம் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பதினொரு முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் கோத்ரா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் கழித்து ஜாமீன் வழங்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் விடுதலை சிறிது மன ஆறுதலை தந்தாலும் அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் பதில் அளிக்கப்படாமல் தான் உள்ளன. ஆந்திராவில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் நிவாரணத்திற்கு எழுபது இலட்ச ரூபாயை ஆந்திரா அரசாங்கம் அறிவித்தது. உடனே அனைவரும் ஆந்திரா ஒரு முன்மாதிரி மாநிலம் என்று வாயாற புகழ ஆரம்பித்தனர். இரண்டொரு தினங்களில் அரசாங்கத்தின் உண்மை முகம் வெளியே வந்தது. நிவாரண தொகையை மக்கா மஸ்ஜித் மற்றும் இன்னொரு மஸ்ஜிதின் நிர்வாக செலவில் இருந்து வழங்க வேண்டும் என்பதுதான் அரசாணை. சிறுபான்மை நலத்துறையிடம் நிதி இல்லை என்றும் இந்த மஸ்ஜித்களுக்கு இப்பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அரசாணை தெரிவித்தது. ஆனால் எப்போது என்பதும் சொல்லப்படவில்லை, நிவாரணம் யாருக்கு எவ்வளவு என்பதும் சொல்லப்படவில்லை.
குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும் முஸ்லிம்கள், கைது செய்யப்பட்டதும் முஸ்லிம்கள், தற்போது நிவாரணமும் முஸ்லிம்களின் பணம் என்ற வினோதமான நடைமுறையை ஆந்திர அரசு ஆரம்பித்துள்ளது. பல ஆண்டுகள் வாழ்க்கையை சிறையில் தொலைத்தவர்களுக்கு நிவாரணம் என்பது அவசியம்தான். ஆனால் கொடுக்கப்படும் தொகை கணிசமான அளவில் பிரயோஜனம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக இது அரசாங்க தரப்பில் இருந்து கொடுக்கப்பட வேண்டும். சிறுபான்மை கமிஷன் கூறியது போல் இது தவறிழைத்த காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த நிவாரணங்கள் இழந்த நாட்களை திரும்ப கொடுக்குமா? என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது. இதைதான் பாதிக்கப்பட்டவர்களும் கூறுகிறார்கள். அனைவரின் முதல் கோரிக்கை தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் முறையான தண்டனையை அனுபவிக்க வேண்டும். பதவி உயர்வுகளுக்கும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத விரக்தியிலும் இவர்கள் அப்பாவிகளை குறி வைக்கின்றனர். சிலர் காவிகளுடன் கைகோர்த்து கொண்டு திறமையான அப்பாவிகளை குறிவைத்து அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றனர். பல நாட்கள் கழித்து அப்பாவிகள் விடுதலையாகும் போது, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் குறித்து எவரும் சிந்திப்பதில்லை. அவர்கள் தங்களின் அடுத்த இலக்கிற்காக காத்துகொண்டிருக்கின்றனர் என்பதையும் எவரும் சிந்திப்பதில்லை.
இதனால்தான் எத்தனை முறை தவறுகள் செய்தாலும் மீண்டும் அதே தவறை செய்ய அவர்கள் தவறுவதில்லை. சில நாட்கள் இல்லாமல் இருந்த இந்த அவலம் தற்போது மீண்டும் அரங்கேற ஆரம்பித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு முறையான தண்டைனையை வழங்க வேண்டும். இதுதான் மற்றவர்களை இதே பாதையில் செல்வதில் இருந்து தடுக்கும்.
குஜராத்தில் தொடர்ந்து என்கௌண்டர்கள் நடைபெற்று கொண்டிருந்தன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தற்போது அங்கு என்கௌண்டர்கள் குறைந்துள்ளன, இல்லை என்று கூட சொல்லலாம்.
தீவிரவாதிகள் என்ற பட்டத்துடன் சிறையில் இருந்ததால் இந்த இளைஞர்களுக்கு கல்வி கற்பதும், வேலை தேடுவதும், சொந்தமாக தொழில் செய்வதும் பெரும் சவாலாக உள்ளது. இதனை போக்க அரசாங்கம் தங்களுக்கு நற்சான்றிதழை வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் நியாயமான கோரிக்கை. ஆனால் இவர்கள் காவல்துறையின் தவறான விசாரணையால் சிறையில் இருந்தவர்கள் என்பதையே தன்னுடைய அரசாணையில் குறிப்பிட தயங்கும் அரசாங்கம் இதனை செய்யுமா என்பது கேள்விக்குறிதான்.
நீதியை நிலைநாட்டாமல் நிவாரணத்தை மட்டும் வழங்குவது என்பது தீர்வாக அமையாது. இதில் மக்களும் தங்களின் முழுமையான பங்களிப்பை அளிக்க வேண்டும். எங்கோ நடக்கும் சம்பங்கள்தானே என்று நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. இன்று எந்த ஒரு சாமான்யனையும் தீவிரவாதி என்றோ, நக்ஸல் ஆதரவாளர் அல்லது மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்றோ கூறி என்கௌண்டர் செய்து லாவகமாக தப்பித்தும் விடுகின்றனர். காவல்துறையில் உள்ள இத்தகைய கறுப்பு ஆடுகளுக்கு எதிராக முறையான நடவடிக்கைகள் தேவை. அரசாங்கமும் பொதுமக்களும் இதில் ஒரு சேர கவனத்தை செலுத்த வேண்டும்.
சிந்தனைக்கு
-:ஏர்வை ரியாஸ்:-
-:ஏர்வை ரியாஸ்:-
No comments:
Post a Comment