தலிபான் தலைவர் முல்லா ஓமர் பெயரை, அமெரிக்கப் புலனாய்வுத் துறையான, எப்.பி.ஐ., தனது பட்டியலில் இருந்து சத்தமில்லாமல் நீக்கியுள்ளது. இத்தகவல் வெளியானதும், அவர் தனது பட்டியலில் சேர்க்கப்படவேயில்லை என, எப்.பி.ஐ., மழுப்பலான விளக்கமும் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடந்த போது, அதன் தலைவராக இருந்தவர், முல்லா ஓமர். அமெரிக்கா, ஆப்கன் மீது படையெடுத்து, தலிபான்களின் ஆட்சியைக் கவிழ்த்தப் பின், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் "நீதிக்கான விருது' (ஆர்.ஜே.எப்.,) என்ற பட்டியலில், முல்லா ஓமர் தேடப்படும் பயங்கரவாதியாகச் சேர்க்கப்பட்டார். அவரது தலைக்கு, 10 மில்லியன் டாலர் விலையை வெளியுறவு அமைச்சகம் நிர்ணயித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து வெளிவரும், "தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' பத்திரிகை, வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில், எப்.பி.ஐ.,யின் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து, முல்லா ஓமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றும், இத்தகவலை எப்.பி.ஐ.,யின் இணையதளத்தில் இருந்தே எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த, எப்.பி.ஐ., செய்தித் தொடர்பாளர், "முல்லா ஓமர் ஒரு காலத்திலும், எப்.பி.ஐ., பட்டியலில் சேர்க்கப்பட்டதில்லை. ஆனால், வெளியுறவு அமைச்சகப் பட்டியலில் உள்ளார். அதனால், அவர் எப்.பி.ஐ., பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாரா என்ற கேள்விக்கே இடமில்லை' என தெரிவித்தார்.
ஆப்கனில் கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்துவதாகக் கூறி வரும் அமெரிக்கா, தோல்வியையே தழுவியுள்ளது. 2014ல் ஆப்கனில் இருந்து வெளியேறும் போது, தனக்கு சாதகமாக ஏதாவது நடக்க வேண்டும் என்பதற்காக, தலிபான்களுடன் திரைமறைவு பேச்சிலும் ஈடுபட்டு வருகிறது.
அந்தப் பேச்சு மேலும் தொடரும் வகையில், எப்.பி.ஐ., பட்டியலில் இருந்து, ஓமரின் பெயர் நீக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
நன்றி யாழ்.முஸ்லிம்
No comments:
Post a Comment