Wednesday, January 4, 2012

‘‘பாதுகாப்பு ரீதியாக நாம் இலங்கையைச் சார்ந்துள்ளோம்" - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்


M.S.Krishna
‘‘பாதுகாப்பு ரீதியாக நாம் இலங்கையைச் சார்ந்துள்ளோம். இந்து சமுத்திரத்தில் இரண்டு நாடுகளையுமே பாதிக்கின்ற பல பாரிய பாதுகாப்புக் கரிசணைகள் உள்ளன. இலங்கையுடன் சரியான விதத்தில் எமது உறவுகளை தொடர்ந்தும் பேணுவதையே நாம் விரும்புகின்றோம்" என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா பிஸ்னஸ் ஸ்டேன்டட் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

எமக்கிடையிலான உறவுகள் முன்னேற்றகரமானதாகவே உள்ளது. பிரபாகரன் இருந்தபோதும்கூட இந்த உறவு நல்ல நிலையிலேயே இருந்தது. இலங்கையுடனான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு இந்திய அரசு யாருக்கும் ஒருபோதும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ உதவிகளை வழங்கியது கிடையாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ள உதவிகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள திரு. கிருஷ்ணா இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் நாம் இலங்கைக்கு உதவி வருகின்றோம். இம்மாதம் 16 ஆம் திகதி நான் இலங்கைக்குச் செல்லவுள்ளேன். இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதே எனது இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சீன உறவுகளில் அண்மைக்‌காலமாக ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து கேற்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த திரு. கிருஷ்ணா எமது அயலவர்களுடனான உறவில் நாம் கரிசணையாகவுள்ளோம். மூன்றாவது நாடுகளுடனான அவர்களது உறவுகள் கரிசணைக்குரியதாயினும் எமது விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க முடியாது. அடுத்த நாடுகளுடனான அவர்களது மனப்பாங்கினை நாம் மதிக்கின்றோம். நல்லெண்ணம், அயல் உறவுகள் என்ற அடிப்படையிலேயே எமது உறவுகளை நாம் வைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விவகாரங்களுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள், பிராந்திய கூட்டுறவு,பாதுகாப்பு மற்றும் அயல் நாடுகளுடனான இந்திய உறவுகள் குறித்த விரிவான விடயங்களை மேற்படி நேர்காணல் உள்ளடக்கியுள்ளது.
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment