Tuesday, January 24, 2012

பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

fakeencounter
புதுடெல்லி:பத்தாண்டுகளுக்கு முன்பு ஜம்மு-கஷ்மீர் மாநிலம் பாத்ரிபலில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கு தரைப்படை ராணுவத்தின் நிலைப்பாடு காரணமாக விசாரணை கட்டத்தை எட்டாததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கஷ்மீரில் ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கும் சட்டமான AFSPA அமுலில் இருப்பதால் முன் அனுமதி இல்லாமல் குற்றஞ்சாட்டப்பட்ட ராணுவ வீரர்கள் மீது வழக்கு தொடர முடியாது என ராணுவம் கூறுகிறது. இதில் அதிருப்தியை தெரிவித்த உச்சநீதிமன்றம் மத்திய உள்துறை, பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது வழக்குப் பதிவுச்செய்ய அனுமதி கோரி சி.பி.ஐ சமர்ப்பித்த மனுவின் மீது விசாரணை நடத்தும் வேளையில் நீதிபதிகளான பி.எஸ்.சவுகான், சுதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அரசின் முன் அனுமதி இல்லாமல் பாத்ரிபல், அஸம் ஆகிய இடங்களில் நடந்த போலி என்கவுண்டர்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்கு தொடர இயலாது என கூடுதல் சோலிசிட்டர் பி.பி.மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளியிட்டது. போலி என்கவுண்டர் படுகொலையை மல்ஹோத்ரா மறுத்தார். அவ்வாறெனில் குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரிகள் மீது ராணுவ நீதிமன்றத்தில்(கோர்ட் மார்ஷல்) நடவடிக்கை எடுக்க தயாரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளிக்க அரசிடமிருந்து உத்தரவை பெற கால அவகாசம் தேவை என மல்ஹோத்ரா கோரினார்.
பாத்ரிபலில் கடந்த 2000 மார்ச் 25-ஆம் தேதி ஏழு அப்பாவிகளை அநியாயமாக சுட்டுக்கொன்ற ராணுவம், பின்னர் லஷ்கர் போராளிகளை சுட்டுக் கொன்றதாக பொய் கூறியது. அதற்கு முன்பு 1996-ஆம் ஆண்டு அஸமில் ஏழு அப்பாவிகளை சுட்டுக் கொன்றுவிட்டு என்கவுண்டர் என ராணுவம் கூறியது. இவ்விரண்டு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராணுவத்தினர் மீது வழக்கு பதிவுச்செய்ய சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ளது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment