Monday, February 27, 2012

நதி நீர் இணைப்பு – உச்சநீதிமன்றமும் ஓகே சொல்லிவிட்டது – வேலையை ஆரம்பிங்கப்பா!


நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி – திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்க உத்தரவு 

டெல்லி: நதிகள் இணைப்பு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் வழிகாட்டவும் உயர்நிலைக் குழுவை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன?
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நீர்ப்பாசனம், குடிநீர் பிரச்சினைகள் உள்ளன. நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைத்து விட்டால் நீர்ப்பாசன பிரச்சினைக்கும், குடிநீர் வினியோகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கும் பெரிய அளவில் தீர்வு கண்டு விட முடியும். நாட்டில் வறட்சியால் தவிக்கிற மாநிலங்களுக்கும் நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த முடியும்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் விஷயம்.
ஆனால் முதல் குரல் கொடுத்தது இந்தியர் அல்ல. ஆங்கிலேயர்தான். அந்த கோரிக்கை நிறைவேற்றக் கூடிய ஒன்றுதான் என்பதை செயலிலேயே காட்டிய பெருமகன் கர்னல் ஜான் பென்னி குயிக். இன்றைக்கு தமிழர்கள் வணங்கும் முல்லைப்பெரியாறு அணை மூலம், கேரளாவுக்குள் பாயும் ஆற்றை, தமிழகத்தில் வைகை ஆற்றுடன் இணைத்துக் காட்டினார்.
இதனைப் பார்த்துதான் ‘வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்… மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’ என மகாகவி பாரதி பாடினாரோ!
1950களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா என மத்திய அரசு ஆய்வுகள் மேற்கொண்டது. பின்னர் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
வாஜ்பாய் காலத்தில்…

பின்னர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான், நதி நீர் இணைப்பு குறித்து பெரிதாக பேசப்பட்டது. அந்த நேரம் பார்த்துதான், காவிரி பிரச்சினை பெரிதாக வெடிக்க, அது தொடர்பாக உண்ணாவிரதமிருந்த ரஜினி, நதிநீர் இணைப்புதான் தேசத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்கு சரியான தீர்வு என்று வலியுறுத்தினார்.
நதிநீர் இணைப்புத் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தினால், முதல் ஆளாக ரூ 1 கோடி நன்கொடை தருவதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார். பின்னர், இதுகுறித்து பிரதமர் வாஜ்பாயையும் சந்தித்து நதிநீர் இணைப்பை வலியுறுத்தினார்.
சில மாதங்கள் கழித்து, நதி நீர் இணைப்புக்காக ஆய்வு மேற்கொண்ட நிபுணர் குழு இந்தத் திட்டத்துக்கு ரூ 5 லட்சம் கோடி வரை செலவாகும் என்று அறிக்கை தந்தது. திட்டத்தை செயல்படுத்த வாஜ்பாய் அரசும் ஆயத்தமானபோது, ஆட்சி மாற்றம் வந்தது.
இந்தத் திட்டத்தை மறந்தேபோனார்கள் ஆட்சியாளர்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் சொல்லே வேதம் என்று கருதிய மத்திய அரசு இத்திட்டத்தை தூக்கி குப்பையில் போட்டு விட்டது.
தண்ணீரால் பெரும் கலகங்களே உருவாகும் சூழல் உள்ள இன்றைய நிலையில், நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும்படி உத்தரவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நாட்டில் பாயும் நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட குழு இன்று உத்தரவிட்டது.
குழு அமைக்க வேண்டும்
நதிகள் இணைப்பு தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நதிகள் இணைப்புத் திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதற்கு உயர்நிலைக் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் மத்திய நீர் ஆதாரத் துறை அமைச்சர், அத்துறையின் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், மத்திய நிதி ஆதாரத்துறை, நிதித்துறை, திட்டக்குழு, சுற்றுச்சூழல் துறை ஆகிய துறைகளின் சார்பில் தலா ஒருவர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.
மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் இரண்டு சமூக ஆர்வலர்கள் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆகியோரும் குழுவில் இடம் பெறுவார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக நதிநீர் இணைப்புக்கு குழுவை அமைக்க வேண்டும். அந்த குழு இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து இந்த குழு உருவாக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு 2 முறை இக்குழு சந்திக்க வேண்டும். இதன் பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் மத்திய அமைச்சரவை பரிசீலிக்க வேண்டும்
ஏற்கனவே இந்த திட்டம் தாமதமாகி விட்டதால் திட்ட செலவு அதிகரித்துள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
-என்வழி செய்திகள்

No comments:

Post a Comment