பாட்னா: சென்னையில் வியாழக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பீகார் இளைஞர்கள் விவகாரத்தில், தமிழக போலீசார் சொல்லும் தகவல்கள் முரணாக இருப்பதாலும், கொல்லப்பட்டதாக கூறப்படுபவர்கள் பீகாரில் உயிருடன் இருப்பதாலும் முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.
இந்த விசாரணையை பீகார் மாநில டிஜிபி தலைமையிலான போலீசார் மேற்கொள்வார்கள்.
சென்னை வேளச்சேரியில் என்கவுன்டர் செய்யப்பட்ட 5 வங்கிக் கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தமிழக காவல்துறை அறிவித்தது.
மேலும் கொல்லப்பட்ட இளைஞர்கள் பணத்தை பீகாரில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், பீகாருக்கே போய் விசாரணை மேற்கொள்ள தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் பீகார் சட்டசபையிலும் எதிரொலித்தது. பீகார் மாநில கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், “இந்த விவகாரத்தை மாநில அரசு மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு தமிழக் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.
பின்னர் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், “சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ள பட்டியல் தவறானது. தமிழக போலீசார் முன்னுக்குப் பின் முரணாகக் கூறுகிறார்கள். மேலும் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சிலர் பீகாரில் உயிருடன் இருக்கிறார்கள். இந்த என்கவுன்டர் குறித்து தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறோம்.
முறையாக விசாரணை நடத்துமாறு மாநில டிஜிபி அபயானந்துக்கு உத்தரவிட்டுள்ளேன். உள்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கெடுப்பார்கள்,” என்றார்.
போலி அடையாள அட்டை
இன்னொரு பக்கம், சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட சந்திரா ராய் உண்மையில் உயிருடன் இருப்பதாகவும், அவர் படத்துடனிருந்த அடையாள அட்டையை வேறு யாரோ பயன்படுத்தியிருக்கலாம் என்றும் போலீசாரிடையே புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வினோத் குமார், அபய் குமார் மற்றும் வினய் குமார் ஆகியோரின் அடையாள அட்டைகளில் இருந்தவை போலி முகவரி என பீகார் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
‘அந்த வினோத் குமார் வேறு – இந்த வினோத் குமார் வேறு!’
இதற்கிடையே, கொல்லப்பட்ட ‘கொள்ளைக் கும்பல் தலைவன்’ வினோத்குமார் எஸ் ஆர் எம் கல்லூரி மாணவர் என்று வரும் செய்திகள் தவறானவை என எஸ் ஆர் எம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பொன்னவைக்கோ தெரிவித்துள்ளார்.
போலீசார் சுட்டுக் கொன்ற வினோத்குமார் வேறு, எங்கள் ஸ்டூடன்ட் வேறு என்றும் அவர் கூறியுள்ளார்.
-என்வழி செய்திகள்
No comments:
Post a Comment