Monday, December 26, 2011

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பரிதாபம்: பழவேற்காடு ஏரியில் மூழ்கி 22 பேர் பலி

AVN_PULILOCALHELP_874401g
சென்னை:கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகில் சென்றபோது, இந்த கோர விபத்து நடந்தது.  இவ்விபத்தில் 22 பேர் பலியாகி  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள இட்டமொழி கிராமத்தைச்  சேர்ந்தவர் சுந்தரபாண்டியன்(68). இவர் கும்மிடிப்பூண்டியில் ஹோட்டல்  நடத்தி வந்தார். இவரது மகன்கள் ஜெயதுரை(45), தங்கராஜ்(33), கனகராஜ்(35), ஆசிர்வாதம்(38) ஆகியோர் கும்மிடிப்பூண்டி பகுதிகளிலும், மகள் பாக்கியமணி தியாகராய நகரிலும் வசித்து வந்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, குடும்பத்தினர் அனைவரும்  ஒன்று கூடி கொண்டாடுவதும், அதையொட்டி ஏதேனும் ஒரு இடத்துக்குச் சுற்றுலா  செல்வதும் வழக்கமாம்.
இந்த ஆண்டும் வழக்கம்போல, கிறிஸ்துமஸ்  கொண்டாடிவிட்டு, பழவேற்காடு  ஏரிக்கு குடும்பத்துடன் வந்தனர். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய அனைவரும், ஏற்கெனவே அங்கு அறிமுகமான படகோட்டி அன்சார் (25) என்பவரது படகு மூலம்  ஏரிக்குள் சென்றனர். அப்போது படகோட்டியின் மனைவி நசீரா பானுவும்(20) உடனிருந்தார்.
மொத்தம் 25 பேர், ஏரியிலிருந்து 10 கி.மீ. தூரம் ஃபைபர் படகில் சென்றனர். பழவேற்காடு ஏரியிலிருந்து முகத்துவாரத்தில் இருக்கும் மணல்  திட்டை நோக்கிப் பயணித்தனர்.
அருகில் உள்ள கடலின் கொந்தளிப்பாலும், காற்றின் வேகத்தாலும், படகு  திசைமாறத் தொடங்கியது. அதிக எடையால் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்தது. அப்போது படகிலிருந்து வெளியே விழுந்த அனைவரும், அதன் பக்கவாட்டுக்  கம்பியைப் பிடித்தபடி தொங்கினார்களாம். இதில், சற்று நேரத்தில் படகு  திடீரென ஏரிக்குள் மூழ்கியது. அதிலிருந்த ஜனகராஜ் (13), பால் தினகர்  (10), பவுன்ராஜ் (12) ஆகியோர் மட்டும் மணல் திட்டை நோக்கி  நீந்தியிருக்கின்றனர்.
அப்போது, கடலுக்குள் மீன் பிடித்துவிட்டு 3 படகுகளில் கரை திரும்பிக்  கொண்டிருந்த மீனவர்கள் மூவரையும் காப்பாற்றினர். மற்றவர்களைக் காப்பாற்ற  முயலும்போது, காற்று பலமாக வீசியதால், படகை நெருங்க முடியவில்லை என்றும், அதற்குள் அனைவரும் நீரில் மூழ்கிவிட்டனர் என்றும் போலீஸாரிடம் அவர்கள்  கூறினர்.
தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்தனர். கரை ஒதுங்கிய 13 சடலங்களை  ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தீயணைப்புத் துறையினர் உதவியோடு போலீஸார்  மீட்டனர். அதில், சுந்தரபாண்டியன், சுதந்திரமேரி, பாக்கியமணி, ஜெயதேவி, ஜூலியட், நசீரா பானு ஆகியோரது அடையாளம் தெரிந்தது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி, வடக்கு மண்டல காவல்துறைத்  தலைவர் சைலேந்திரபாபு, காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா, துணைக்  கண்காணிப்பாளர் குமார், வருவாய்க் கோட்டாட்சியர் கந்தசாமி ஆகியோர்  தலைமையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
சம்பவம் நடந்த பழவேற்காடு முகத்துவாரப் பகுதி, படகு சவாரிக்குத் தடை  செய்யப்பட்ட பகுதியாகும். கடந்த வாரம் இப் பகுதியைப் பார்வையிட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா, இங்கு மீனவர்கள் யாரும் செல்லக் கூடாது
என்றும், எவரையும் சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது என்றும்  அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், அதையும் மீறி, தடை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்றதும், 10 முதல்  15 பேர் வரை பயணிக்கக்கூடிய படகில் 25 பேர் வரை பயணித்ததும் இந்த  விபத்துக்குக் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
படகு விபத்தில் உயிரிழந்த குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம்  ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர்  ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
படகு விபத்தில் உயிர் தப்பிய படகோட்டி அன்சார்  திருப்பாலைவனம் காவல்  நிலையத்தில் சரணடைந்தார் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா  கூறினார்.
விபத்து நடந்து இரண்டு மணிநேரம் வரை காவல்துறையினரோ மீட்புப் பணிக்காக  தீயணைப்பு படையினரோ சம்பவ இடத்துக்கு வந்திருக்கவில்லையென்று உள்ளூர்  மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment