சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011 21:38 வாசிப்புக்கள்: 225 பகுதி: செய்திகள் - உலக செய்திகள்
இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்களை அழிக்கவேண்டும் என்றும்,தமது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாத இந்திய முஸ்லிம்களுக்கு வாக்குரிமையளிக்கப்படக்கூடாது என்றும் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய முன்னாள் மத்திய அமைச்சரும் ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணியம் சுவாமி, கற்பித்துவந்த இரண்டு பாடநெறிகளை நீக்கிவிட ஹாவார்ட் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
ஹாவார்டில் கோடைகால அமர்வின்போது பொருளியல்துறை, இந்திய, கிழக்காசியப் பொருளாதார அபிவிருத்தி ஆகிய இரு பாடநெறிகளை சுவாமி கற்பித்துவந்தார். இந்த இரு பாடநெறிகளையும் தற்போது பாடநெறிப் பட்டியலிலிருந்து நீக்கிவிட பல்கலைக்கழக நிருவாகம் முடிவுசெய்துள்ளது.
கடந்த ஜூலையில் இந்திய நாளிதழ் ஒன்றுக்கு கட்டுரை ஒன்றை எழுதியிருந்த சுவாமி, இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான மஸ்ஜித்களை அழிக்கவேண்டும் என்றும், தமது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாத இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு வாக்களிக்க அனுமதியளிக்கக் கூடாது என்றும் பகிரங்கமாகப் பரிந்துரைத்திருந்தார்.
சுவாமியின் இந்த கருத்துக்கள் முழு மத சமூகத்தையும் கொடியவர்களாக சித்தரிப்பதாகவும், அவர்களின் புனிதஸ்தலங்களுக்கு எதிராக வன்முறைக்கு அழைப்புவிடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு, அவரது பாடநெறிகள் பல்கலைக்கழகப் பாடநெறிப் பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என்ற முன்மொழிவை மத ஒப்பீட்டுத்துறை பேராசிரியர் டயானா எக் முன்வைத்திருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பீட உறுப்பினர்கள் கூட்டத்தின்போது சுவாமியின் இந்த இரு பாடநெறிகளையும் அகற்றிவிடுவதற்கு ஹாவார்டின் கலை, விஞ்ஞான பீட உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நன்றி http://meelparvai.net
No comments:
Post a Comment