Wednesday, March 7, 2012

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உ.பி. மக்களுக்கு அகிலேஷ் உறுதி

 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உத்தரப் பிரதேச மக்களுக்கு சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவரும், முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவ் உறுதி கூறினார்.

\உத்தரப் பிரதேசத்தில் தனிப் பெரும்பானமையுடன் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.  இந்த வெற்றிக்கு, முலாயம் சிங்கின் மகனும், கட்சியின் மாநிலத் தலைவருமான அகிலேஷ்
யாதவின் வியூகம் மிக முக்கிய காரணம் என சமாஜ்வாடி கட்சியினர் தெரிவிக்கின்றனர். 

உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியின் 'மேஜிக்' பலன் தராததும், மாயாவதிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியதும் அகிலேஷால் மட்டுமே சாத்தியமாயிற்று என்பது சமாஜ்வாடியினரின் கருத்து.
 

எனினும், இளம் அரசியல் தலைவரான அகிலேஷ், முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது திட்டவட்டமாக இன்னும் தெரியவில்லை. 


இந்த நிலையில், சமாஜ்வாடிக்கு கிடைத்த வெற்றி குறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் மீதுள்ள நம்பிக்கையில் உத்தரப் பிரதேச மக்கள் வாக்களித்துள்ளனர்.  


நேதாஜி (முலாயம் சிங் யாதவ்) முதல்வராக வேண்டும் என்பதே கட்சியில் உள்ள அனைவரின் விருப்பமாக உள்ளது. 


கட்சியின் நாடாளுமன்றக் குழு நாளை கூடி, முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கும்," என்றார். 


"மக்கள் நலனுக்காக சமாஜ்வாடி கட்சி வீதியில் இறங்கி போராடியதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. சமாஜ்வாடி ஊழலற்ற ஆட்சியை வழங்குவதோடு, மாநிலத்தை சிறந்த முறையில் மாற்றிக் காட்டும். 


சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் பரிந்துரைகள் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்," என்றார் அகிலேஷ். 


சமாஜ்வாடி ஆட்சிகாலத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம் வெகுவாக இருந்தது பற்றி கேட்டதற்கு, "சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர் மீது கட்சி கடும் நடவடிக்கையை எடுக்கும்," என்றார் அவர். 


மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், "உத்தரப் பிரதேசத்தில் மிக அதிக செலவில் மாயாவதி மற்றும் யானை சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலைகள் அகற்றவோ, உடைக்கப்படவோ மாட்டாது," என்றார் அகிலேஷ் யாதவ்.

No comments:

Post a Comment