Tuesday, January 24, 2012

கலாநிதி ஸஅத் கதாதினி எகிப்திய சபாநாயகராகத் தெரிவு



  • PDF
Saad-katatni1
இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் கட்சியான ‘சுதந்திரத்திற்கும் நீதிக்குமான‘ கட்சியைச் சேர்ந்த கலாநிதி ஸஅத் கதாதினி எகிப்தின் புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 399 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வப்த் கட்சியைச் சேர்ந்த இஸாம் சுல்தான் 87 வாக்குகளையும் யூஸுப் அல் பத்ரி 10 வாக்குகளையும் பெற்றனர்.
இதேவேளை வப்த் கட்சியைச் சேர்ந்த அப்துல் அலீம் தாவூத், ஸலபி அந்நூர் கட்சியைச் சேர்ந்த அஷ்ரப் ஸாபித் ஸஅத் ஆகிய இருவரும் பிரதி சபாநாயகர்களாக தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்றத்தின் முதல் அமர்விற்கு முன்னரே இது பற்றிய உடன்பாடு ஒன்று ஏற்பட்டிருந்தது.
‘‘புரட்சியின்போது ஷஹீதானவர்களையும் காயமடைந்தவர்களையும் கௌரவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திரம், முன்னேற்றம், சுபீட்சம் போன்ற எகிப்திய மக்களது அபிலாஷைகளை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட எல்லாத் தியாகங்களையும் நாம் மதிக்கிறோம்.‘‘ என சபையில் உரையாற்றிய அவர் தெரிவித்தார்.
‘‘இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் பல தசாப்தங்களாக எகிப்து காத்திருந்த புதிய எதிர்பார்ப்புகளுக்கான விடியலையே நாம் நாடுகிறோம். எகிப்து மக்களுக்கு மகிழ்ச்சியையும் நன்மையையும் கொண்டு வருவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.‘‘ என அவர் மேலும் தெரிவித்தார்.
59 வயதான தாவரவியல் பேராசிரியரான கதாதினி 2005 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்டார். 2010 இல் இடம்பெற்ற தேர்தலில் முபாரக்கின் ஊழலால் இவர் தெரிவு செய்யப்படவில்லை.
சபாநாயகராகச் செயற்படுவதாயின் தீவிரமான கட்சி செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என்பதால், சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து கலாநிதி ஸஅத் கதாதினி ராஜினாமாச் செய்துள்ளார். இதை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment