Thursday, January 19, 2012

எகிப்திய பாராளுமன்ற சபாநாயகராக கலாநிதி முஹம்மத் ஸஅத் கதாதினி



Katatny
எகிப்திய பாராளுமன்ற சபாநாயகராக கலாநிதி முஹம்மத் ஸஅத் கதாதினியை நியமிப்பதென சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி தீர்மானித்துள்ளது. இவர் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். பாராளுமன்றத்தில் சமநிலையான அணுகுமுறையைப் பின்பற்றியமைக்காக இவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.

சென்ற வருடம் ஜனவரி 28 இல் எகிப்திய புரட்சியின்போதுமுபாரக்கின் படையினரால் கட்சியின் முக்கிய தலைவர்களான முஹம்மத் முர்ஸிஇஸாம் அல் இர்யான் ஆகியோருடன் இவரும் தடுத்து வைக்கப்பட்டார்.
மினியா பிரதேசத்திலிருந்து இம்முறை இவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தன்னுடைய நிர்வாகத் திறமை காரணமாக கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றதில் இவருக்கு பெரும் பங்கு உள்ளது.
1952 ஏப்ரல் மூன்றாம் திகதி பிறந்த இவர், 1974 இல் விஞ்ஞானத் துறையில் இளமாணி பட்டம் பெற்றார். 1984 இல் அதே துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றார். மினியா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையான நுண்ணுயிரியலில் (Micro Biology) இவர் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.1994-1998 வரை அங்கு அத்துறையின் தலைவராக இருந்தார்.
2000 ஆம் ஆண்டில் கலைத் துறையில் இஸ்லாமிய கற்கைகளை பிரதான பாடமாகக் கொண்டு இன்னொரு இளமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 1990 தொடக்கம் 2006 வரை மினியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் குழுவின் பொதுச் செயலாளராக தொடர்ச்சியாக தெரிவுசெய்யப்பட்டு வந்தார்.
தாவரவியல் துறையில் முதுமாணிகலாநிதிப் பட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட 21ஆய்வுகளை இவர் மேற்பார்வை செய்துள்ளார். அத்துடன் தாவர நோய்கள் மற்றும் நுண்ணுயிரியல் தொடர்பான 36 ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
தாவரவியல் தொடர்பான எகிப்தின் முக்கிய அமைப்புகள் பலவற்றில் இவர் அங்கத்தவராகவும் உள்ளார். 1984 முதல் 1993 வரை விஞ்ஞானிகளது சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றினார்.
இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்புடன் இணைந்த பின்னரே அரசியல் துறையில் ஆர்வம் காட்டினார். மினியா பிரதேசத்தில் இஹ்வான்களது நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்தார். அதன் பின்னர் இஹ்வான்களது பாராளுமன்றக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் ஊழலுக்கு எதிரான அறபு பாராளுமன்ற உறுப்பினர்களது அமைப்பின் இணை ஸ்தாபகராகவும் உள்ளார்.
இயக்கத்தின் அதியுயர் நிர்வாக சபையான வழிகாட்டல் சபையின் (மக்தபுல் இர்ஷாத்) அங்கத்தவராகத் தெரிவானார். பின்னர் இயக்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளராகவும் இருந்தார்.

No comments:

Post a Comment