11 Jan 2012
புதுடெல்லி:வலுவான ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசை ஆட்டம் காணவைத்த அன்னா ஹஸாரே டீம் திசைத் தெரியாமல் தடுமாறி வருகிறது. மக்கள் ஆதரவு திடீரென குறைந்தது, லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் அந்தரத்தில் தொங்குவது ஆகிய நிகழ்வுகளை தொடர்ந்து எதிர்கால திட்டங்களை குறித்து விவாதிக்க திங்கள்கிழமை ஹஸாரேவின் ஆப்செண்டுடன் அவரது குழுவினர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
தொடர்ந்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தெரியாமல் தற்பொழுது ஹஸாரே குழுவினர் இருட்டில் துளாவுகின்றனர்.
டெல்லிக்கு அருகில் உள்ள காசியாபாத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து இக்கூட்டம் நடைபெற்றது. வழக்கத்திற்கு மாறாக, தொடர் நடவடிக்கைகள் குறித்து கருத்துக்கள் பேசப்படவில்லை. கெஜ்ரிவால், கிரன்பேடி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நீண்ட தூரம் பயணத்தை தவிர்த்து ஒரு மாதம் முழுமையான ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியதை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்காமல் ஹஸாரே ரலேகான் சித்தியில் தங்கியுள்ளார் என அவரது நம்பிக்கைக்குரியவர்கள் தெரிவித்தனர். ஆனால், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஹஸாரேயிடமும் குழப்பம் நிலவுவதாக கருதப்படுகிறது.
போராட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நிலைமை தற்போதைய சூழலில் இயலாமல் உள்ளது. இனிவரும் காலங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தாதீர்கள் என ஹஸாரேக்கு மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். நீண்ட தூரபயணமும் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தை ஹஸாரே ரத்துச்செய்ய இதுதான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால், முக்கிய காரணம் மும்பையில் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதாகும். இதன் காரணமாக சிறைநிரப்பும் போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.
ஊழல் எதிர்ப்பு போராட்ட இயக்கம் இக்கட்டான நிலையை சந்திப்பதாக நேற்று முன்தினம் அரவிந்த் கேஜ்ரிவால் எழுதிய கட்டுரையில் ஒப்புக்கொண்டுள்ளார். ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் நடத்துவதற்கு எதிராக நேற்று நடந்த கூட்டத்தில் மேதா பட்கர் நான்கு பக்க அறிக்கையை அளித்திருந்தார். ஹிஸாரில் நடந்ததற்கு மாற்றமாக இனிவரும் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸிற்கு எதிராக மட்டும் பிரச்சாரம் நடத்தவேண்டியதில்லை என கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் ஹஸாரே இறுதி முடிவை மேற்கொள்வார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment