Monday, January 30, 2012

பலஸ்தீன சபாநாயகர் அஸீஸ் துவைக் கைது


aziz-dweik
பலஸ்தீன சட்டசபையின் சபாநாயகரான ஹமாஸின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி அஸீஸ் துவைக் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குக் கரையில் உள்ள ரமல்லா நகரில் வைத்தே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் ஒன்றே இதற்கான உத்தரவை விடுத்துள்ளது. சிவிலியன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் 6 மாதங்களுக்கு இவர் தடுத்துவைக்கப்படவுள்ளார்.
வழக்கம்போல இவருக்கெதிராகவும் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. இஸ்ரேலிற்கு எதிராக செயற்பட்டார் என்பதே பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகும் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வித சட்டபூர்வமான நியாயமும் இன்றி மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய தடுத்துவைப்பு இது என சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழு உலகும் தனது மௌனத்தைக் கலைத்துவிட்டு அவரையும் இஸ்ரேலிய சிறைச்சாலைகளிலுள்ள ஏனைய எம்.பி.க்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கைது நடவடிக்கையை ஹமாஸும் பலஸ்தீன அதிகார சபையும் கண்டித்துள்ளது. அத்துடன் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவை வேண்டியுள்ளன.
அஸீஸ் துவைக் பலஸ்தீன அரசியல் வட்டாரங்களில் செல்வாக்குமிக்க ஒருவர். 2006 இல், ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிது காலத்தின் பின்னரும், இதேபோன்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்போது தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றில் அங்கம் வகித்தார் என்ற குற்றம் சாட்டப்பட்டு 3 வருடங்கள் அவர் சிறைவாசம் அனுபவித்தார்.
அஸீஸ் துவைக்குடன் சேர்த்து கடந்த ஐந்து நாட்களுள் ஹமாஸ் எம்.பி.க்கள் ஐவர் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment