Sunday, December 25, 2011

42 ஆண்டுகளுக்கு பிறகு லிபியாவில் சுதந்திர தின கொண்டாட்டம்

indipendence day
திரிபோலி:சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய லிபியா நாட்டு மக்கள் 42 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இத்தாலி, பிரான்சு மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட லிபியா, மன்னர் இத்ரீஸின் தலைமையில் கடந்த 1951-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.ஆனால், 1969-ஆம் ஆண்டு ரத்த சிந்தாத ராணுவ புரட்சியின் மூலமாக ராணுவ அதிகாரியாக பணியாற்றிய முஅம்மர் கத்தாஃபி சக ராணுவ அதிகாரிகளின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் நாட்டின் ஒரேயொரு கொண்டாட்ட தினமாக கத்தாஃபி ஆட்சியை கைப்பற்றிய தினமே இருந்து வந்தது.
42 வருடங்களுக்கு பிறகு மேற்கத்திய படையினரின் ஆயுத பலத்தில் கத்தாஃபியின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டபொழுது முன்னணியில் இருந்த லிபியா இடைக்கால கவுன்சிலின்(என்.டி.சி) தலைமையில் தற்பொழுது ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபோலியில் என்.டி.சியின் தலைமையில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நகரத்தின் மத்திய பகுதியில் உள்ள இரத்த சாட்சி சதுக்கத்தில் இருந்து தேசிய அருங்காட்சியகத்தை நோக்கி வாத்திய மேளங்களுடன் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கத்தாஃபியின் அரண்மனைதான் தற்பொழுது அருங்காட்சியமாக மாறியுள்ளது. என்.டி.சி தலைவர் முஸ்தஃபா அப்துல்ஜலீல், இடைக்கால பிரதமர் அப்துற்றஹீம் அல்கீப் ஆகிய மூத்த தலைவர்களுடன் ஏராளமான சர்வதேச பிரதிநிதிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
டிசம்பர் 24-ஆம் தேதியின் முக்கியத்தவம் லிபியாவின் புதிய தலைமுறைக்கு தெரியாது என்றும், அவர்களுக்கு வரலாற்றின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகவே இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் என என்.டி.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment