Saturday, December 24, 2011

ஒ.பி.சி ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: உ.பி.தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்



muslims_voters-350_122411081923
புதுடெல்லி:அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் 27 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான(ஒ.பி.சி) இடஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு உத்தரவை பிறப்பித்துள்ள காங்கிரஸ் அரசு உ.பி சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் தலைவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ராகுல் காந்தி அளித்துள்ள உறுதிமொழி சிறப்பு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானமாக மாறியது.
இதன் மூலம் உ.பி மாநிலத்தில் 100 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியான முஸ்லிம் வாக்கு வங்கியை நம்பியுள்ளது காங்கிரஸ். முஸ்லிம்களின் ஆதரவினால் மட்டுமே வெற்றிபெற வாய்ப்புள்ள 90 சட்டமன்ற தொகுதிகள் உ.பியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி நடத்திய சிறப்பு ஆய்வில் தெரியவந்தது.
பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பின் மூலமாக காங்கிரஸிற்கு ஆதரவை கைவிட்ட முஸ்லிம்கள் கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கையாண்டதால் 21 எம்.பி தொகுதிகளில் காங்கிரஸால் வெற்றிப்பெற முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஒ.பி.சி இடஒதுக்கீட்டில் 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வருகிற 2012 ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும். இதன் மூலம் உ.பி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் முஸ்லிம்களுக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.
தேசிய சிறுபான்மை கமிஷன் சட்டத்தின் படி சி பிரிவில் உள்படும் முஸ்லிம், சீக்கிய, பார்ஸி, கிறிஸ்தவ, பெளத்த மதத்தவர்களுக்கு இடஒதுக்கீட்டின் ஆதாயம் கிடைக்கும். சிறுபான்மையினருக்கு சிறப்பு இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என உ.பி.முதல்வர் மாயாவதியும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவும் முன்னர் வலியுறுத்தியிருந்தனர். இடதுசாரிகளும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளமும் முஸ்லிம்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதில் ஆதரவான கருத்தையே கொண்டுள்ளனர்.
மத-மொழி தேசிய சிறுபான்மை கமிஷனும், சச்சார் கமிட்டியும் சிறுபான்மையினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஒ.பி.சி பிரிவில் தகுதியான நான்கரை சதவீதம் இடஒதுக்கீட்டைக் கூட பெற முஸ்லிம் சமூகத்தால் இயலவில்லை எனவும், அவர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷன் வலியுறுத்தியிருந்தது.
உத்தரபிரதேச மாநிலம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் தலித்துகளை விட மோசமாக உள்ளனர் என சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டியிருந்தது. மத-மொழி தேசிய சிறுபான்மை கமிஷன் சிறுபான்மையினருக்கு 8.4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் எனவும், அதில் 6 சதவீதம் முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என பரிந்துரைச் செய்தது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment