Saturday, December 24, 2011

எகிப்தின் இரண்டாம் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் இமாலய வெற்றி


கெய்ரோ : எகிப்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் 65 சதவிகதம் ஓட்டுகள் பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளதாக எகிப்தின் தேர்தல் கமிட்டி கூறியுள்ளது.
ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு எகிப்தில் முதன் முறையாக சுதந்திரமான வகையில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. எகிப்தின் தேர்தல் முறை இந்தியாவுடன் ஒப்பிடும் போது சற்று கடினமானது. நாடாளுமன்றத்தின் மொத்த இருக்கைகளில் மூன்றில் இரண்டு பங்குக்கு கட்சிகளுக்கும் மீதமுள்ள பகுதிக்கு வேட்பாளர்களுக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பர்.

எகிப்தில் தேர்தலும் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் எகிப்தின் பலம் வாய்ந்த இக்வானுல் முஸ்லீமினின் அரசியல் பிரிவான சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி அதிக இடங்களை வென்றது. அதை தொடர்ந்து எகிப்து தேர்தல் களத்துக்கு புதிய கட்சியான சவூதியை போன்ற ஆட்சி முறையை கொண்டு வர துடிக்கும் அல்-நூர் கட்சியும் வெற்றி பெற்றது.

இரண்டாம் கட்ட தேர்தலிலும் இக்வானுல் முஸ்லீமின் அரசியல் பிரிவு 37% ஓட்டுகளையும் அல்-நூர் கட்சி 29 % ஓட்டுகளையும் பெற்றுள்ளது. ஆனால் இஸ்லாமிய கட்சிகளின் போட்டியாளர்களான அல்-வப்த் கட்சி 9.6% ஓட்டுகளையும் எகிப்திய ப்ளாக் 7% ஓட்டுகளையும் பெற்றுள்ளது.

மூன்றாம் கட்ட தேர்தல் வரும் ஜனவரி 3 அன்று நடக்க உள்ள நிலையில் இக்வானுல் முஸ்லீமின் அடுத்த அரசை அமைப்பதற்கான உரிமையை கோருவோம் என்று கூறியுள்ளது. ஆனால் இடைக்கால அரசை நடத்தும் ராணுவமோ பாராளுமன்றம் மந்திரிசபையை அமைக்க முடியாது என்று கூறி வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி இந்நேரம்.காம்

No comments:

Post a Comment