Tuesday, December 20, 2011

எகிப்து:விடுதலையை எதிர்நோக்கி கருந்தேள் சிறைவாசிகள்



lock-up-deaths
கெய்ரோ:கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் அரபு வசந்தத்தின் புரட்சி பூக்கள் விரிந்த வேளையில், இவையெல்லாம் அறியாமல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அல் அஃஹ்ரப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புரட்சியின் அமளி துமளியில் இந்த அப்பாவிகளை ஆட்சியாளர்கள் மறந்து விடுவார்களோ என்ற கலக்கம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அல் அஃஹ்ரப் என்றால் கருந்தேள் எனபொருள். கெய்ரோவில் பிரசித்திப்பெற்ற லிமன்துரா சிறை கட்டிடத்திற்கு உள்ளே அமைந்துள்ள இன்னொரு தனிச்சிறைதான் அல் அஃஹ்ரப். முன்பு பரோவா மன்னர் பரம்பரையைச் சார்ந்த அரசன் தங்கக் குவியலை புதைத்து வைத்த அதே பாலைவனத்தின் மீதுதான் எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் லிமன் துரா சிறையை கட்டினார். தற்பொழுது இச்சிறையில் பயங்கர ரகசியங்கள் நிறைந்துள்ளது.
லிமன் துரா சிறைக்குள்ளே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அல் அஃஹ்ராப் சிறை அமைந்துள்ளது. அமெரிக்காவின் சித்திரவதை கூடமான கியூபாவில்அமைந்துள்ள குவாண்டனாமோ சிறை மாதிரியில் அல் அஃஹ்ராப் கட்டப்பட்டுள்ளது.
ஹுஸ்னி முபாரக்கின் மகன்கள் லிமன் துரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் ராணுவத்தின் கருணையினால் ஓரளவு வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன. முபாரக் அரசை எதிர்ப்பவர்களுக்கு பரிசுதான் அல் அஃஹ்ராப் சிறை. அங்கே விசாரணை கைதிகளே உள்ளனர். ஆனால் விசாரணை நடைபெறாது. ஏழு மீட்டர் உயரம் கொண்ட சுவரும், இரும்பாலான கேட்டும் அமைந்துள்ள இச்சிறையின் உள்ளே நுழைய பார்வையாளர்களுக்கு சிரமமான காரியமாகும். அமெரிக்காவின் எஃப்.பி.ஐயின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள்தாம் அல்அஃஹ்ராப் சிறையை உருவாக்கியதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைமை கூறுகிறது.
1993-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இச்சிறையில் ஒரு பொத்தானை அழுத்தினாலே போதும் சிறை வார்டன்களுக்கு எந்த அறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கும், மின்சாரத்தையும், தண்ணீரையும் தடைச் செய்யலாம். அல் அஃஹ்ராப் சிறையின் அமைப்புதான் குவாண்டானாமோவிலும் காணப்படுகிறது என முஅஸ்ஸம் பேக் கூறுகிறார். இவர் குவாண்டாமோவில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த பிரிட்டனை சார்ந்தவர் ஆவார்.
விசாரணையோ,குற்றப்பத்திரிகையோ இன்றி ஒருகாலத்தில் 20 ஆயிரம் சிறைக்கைதிகள் லிமன் துராவில் அடைக்கப்பட்டிருந்தனர். அல் அஃஹ்ராபிலோ பெரும்பாலான சிறைவாசிகள் இஸ்லாமியாவதிகள் ஆவர். தலாஉல் ஃபதஹ், ஜிஹாத், ஜமாஅ வல் இஸ்லாமியா ஆகிய இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்கள்தாம் அவர்களில் பெரும்பாலோர். அவர்களில் பலரும் சித்திரவதையை தாங்க முடியாமல் செய்யாத தவறுகளை ஒப்புக்கொண்டு, ஆயுத போராட்டத்தை கண்டிக்கவும் செய்தனர். ஆனாலும் அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. அல் அஃஹ்ராபில் அடைக்கப்பட்டவர்களில் 15 சதவீதம் பேராவது சித்திரவதையால் கொல்லப்பட்டுள்ளார்கள் என கருதப்படுகிறது.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைமையிலான அரசு எகிப்தில் ஆட்சியில் அமரும் வேளையில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்புகிறார்கள் அல் அஃஹ்ரப்(கருந்தேள்)சிறைவாசிகள்.
நன்றி தூது ஆன்லைன்

No comments:

Post a Comment