20 Dec 2011
டமாஸ்கஸ்:சிரியாவில் நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அரபு லீக் பரிந்துரைத்த அமைதி ஒப்பந்தத்தை அமுலாக்குவது குறித்து பரிசோதிப்பதற்கான கண்காணிப்பு குழுவிற்கு சிரியா அரசு அனுமதி அளித்துள்ளது.
கெய்ரோவில் அரபு லீக்கின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் இதுத்தொடர்பான ஒப்பந்தத்தில் சிரியாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைஸல் மிக்தாத் கையெழுத்திட்டார்.
கண்காணிப்பாளர்களை அனுமதிப்பதற்கு சிரியா பரிந்துரைத்த திருத்தங்களை அரபு லீக் அங்கீகரித்ததாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாலித் அல் முஅல்லிம் டமாஸ்கஸில் தெரிவித்தார்.
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட சிரியாவுக்கு புதன்கிழமை வரை அரபு லீக் கால அவகாசம் அளித்திருந்தது. முன்னர் அரபு லீக்கில் இருந்து சிரியா இடைநீக்கம் செய்யப்பட்டு பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தது. அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட பல முறை சிரியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த அரபு லீக் இறுதியாக, இனியும் கையெழுத்திட முடியாது என்றால் வலுவான நடவடிக்கை மேற்கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சிபாரிசு செய்யப் போவதாக அறிவித்தது.
பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு நேற்று முன்தினம் அண்டை நாடான ஈராக்கின் வெளியுறவுத்துறை அமைச்சரும், தேசிய பாதுகாப்பு பிரிவு தலைவரும் டமாஸ்கஸிற்கு சென்றனர். ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட்டதை தொடர்ந்து எட்டு மாதமாக பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக நடக்கும் போராட்டம் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சிரியாவில் பஸ்ஸாருல் ஆஸாத் அரசின் அடக்குமுறை மற்றும் மோதலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்ததாக ஐ.நா
புள்ளிவிபரம் கூறுகிறது.
புள்ளிவிபரம் கூறுகிறது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment