12 Dec 2011
மதீனாவில் முஸ்லிம்களின் சிறையிலிருந்து விடுதலையான ஒரு படைவீரன் சிரியா திரும்பினான். மதீனா குறித்த செய்திகளை அறிந்திட மக்கள் அவனைச் சூழ்ந்தனர். புதிய ஆட்சியைக் குறித்து தான் கண்டறிந்தவைகளை அவன் மக்களிடம் எடுத்துக் கூற ஆரம்பித்தான்.
“முஸ்லிம்களுக்கு புரோகிதர்களோ, ராஜாக்களோ இல்லை. அவர்களின் ஆட்சியாளர்களோ எளிமையின் வடிவமாகத் திகழ்பவர்கள். மக்களிடம் கருணை காட்டுபவர்கள். சத்தியத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். நீதியை நிலைநாட்டுவதில் கருத்தாக இருப்பவர்கள். சட்டத்தை அமுல்படுத்துவதில் யாரைக் கண்டும் அஞ்சாதவர்கள்.”
இந்தச் செய்திகள் கூடியிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. படைவீரன் மீண்டும் தொடர்ந்தான்:
“ஒருநாள் அங்கே அவர்களின் இறையில்லத்தின் வாசலருகே வெளியே நான் நின்றிருந்தபோது, உள்ளிருந்து வந்த ஓர் உரையாடலைக் கேட்டேன்: “உமரே, தாங்கள் செய்தது தவறு.”
இறையில்லத்தில் கூடியிருந்த மக்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார் ஆட்சியாளர் உமர். அப்போது ஒரு கிராமத்தவர் உரக்கச் சொன்ன வார்த்தைதான் இது. சபையில் இருந்த இன்னொரு ஆளுக்கு கலீஃபாவை நோக்கி அந்தக் கிராமத்தவர் சொன்ன விதம் பிடிக்கவில்லை. அவரைக் கண்டித்தார். ஆனால் கலீஃபா அப்படிக் கண்டித்தவரைக் கடிந்தார்கள். “பேசாதீர்கள். அவர் சொல்லட்டும். என்னுடைய குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டட்டும். என்னிடமிருக்கும் தவறுகளையும், குறைகளையும் எனக்கு நீங்கள் நினைவூட்ட வேண்டும். அப்போதுதான் நான் திருத்தப்படுவேன்.”
ஆட்சி பீடமும், புரோகிதர்களும் ஒன்று சேர்ந்து செய்த சுரண்டலில் குட்டிச் சுவராகிப்போன சிரியாவின் சாதாரண மக்களுக்கு இஸ்லாத்தின் வரவு தென்றலாக இருந்தது. இஸ்லாம் அவர்களுக்கு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தது.
ஆம்! புதிய இஸ்லாமிய ஆட்சி அநீதியுடைய கரும் நிழலை அவர்களிடமிருந்து அகற்றி விட்டது. ஒரு புதிய ஆட்சி முறையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
உயர்ந்த கோபுரங்கள், பாதுகாப்பான கோட்டைகள், ஆயுதமேந்திய காவல்காரர்கள், ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட ராஜ்ய சபைகள், தங்க நூலிழை மின்னும் பட்டாடைகள், பஞ்சு மெத்தைகள், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் சேவகர்கள், அரைகுறை ஆடையுடன் அந்தப்புர அழகிகள், கம்பீரமான சிம்மாசனம், இரத்தினம் பதித்த கிரீடங்கள், நாடு முழுவதும் உளவாளிகள், மக்களைச் சுரண்டி, உறிஞ்சி கொழுத்து வாழும் அதிகாரவர்க்கம், தாங்கமுடியாத வரிச்சுமை, கடுமையான தண்டனைகள், ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசும் புரோகிதர்களும், பண்டிதர்களும்,…- அதிகார மையங்கள் குறித்து சாதாரண மக்களின் மனநிலை இதுதான்.
சிரியாவிலும், பைத்துல் முகத்தஸிலும், கான்ஸ்டாண்டினோபிளிலும் இஸ்லாம் காலடி எடுத்து வைத்தபோது தகர்ந்தது சாம்ராஜ்யங்கள் மட்டுமல்ல, அவர்களின் அநீதியான கலாச்சாரமும்தான். சாதாரண மக்கள் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். புரோகிதத்தில் புரையோடிப் போயிருந்த புரோகிதர்களால் கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தின் பால் ஓடோடி வருவதை தடுக்க முடியவில்லை.
தங்கள் மதம் தகர்கின்றது என்ற கவலை புரோகிதர்களுக்கு மட்டுமே இருந்தது. சாதாரண மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுகளையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்? இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்). இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்). அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம். ஆகவே, அவர்களுக்காக வானமும், பூமியும் அழவுமில்லை. (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை. (அல்குர்ஆன் 44:25-29)
No comments:
Post a Comment