Sunday, January 22, 2012

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல்: 13 போலீஸார் பலி

The road to Bargarh village in Garwha is left with a huge crater after a landmine blast on Saturday
ராஞ்சி:ஜார்கண்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 13 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக டி.ஜி.பி ஜி.எஸ்.ரத் கூறினார்.
இதுக்குறித்து அவர் கூறியது:கர்வா மாவட்டத்தில் உள்ள பாரிகன்வா வனப் பகுதியில் போலீஸார் தங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காத்துக்கொண்டிருந்த 50 மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்தனர். இதில் போலீஸார் சென்ற வாகனம் வெடித்துச் சிதறியது; வாகனத்தில் பயணம் செய்த 13 போலீஸார் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 2 போலீஸார் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் காலை 11 மணியளவில் நடந்தது.
இந்தச் சம்பவத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவ் பிரசாத் நூலிழையில் உயிர் தப்பினார். அவரது வாகனம் கடந்த சில வினாடிகளில் கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறின.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பாதையில் சென்ற 2 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களும் அவர்களது பாதுகாவலர்களும் காணாமல் போய்விட்டனர். அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கூடுதல் போலீஸார் வனப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு 22 கி.மீ. தொலைவில் சுகாதார மையம் ஒன்று கட்டப்படவிருந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பார்கர் எனும் கிராமத்தின் தலைவர் சனிக்கிழமை கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, வனப் பகுதியில் உள்ள கிராமத்தினரை சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தி கடையடைப்பைக் கைவிடுமாறு செய்ய வட்டார வளர்ச்சி அலுவலரும் போலீஸாரும் தனித்தனி வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் மூலம் மீண்டும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளனர் என்றார் காவல்துறை தலைவர் ராத்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment