21 Jan 2012
காபூல்:நான்கு பிரான்சு நாட்டு பயிற்சியாளர்களை ஆஃப்கான் ராணுவ வீரன் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து ராணுவ பயிற்சியை நிறுத்தி வைக்க பிரான்சு நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸி அறிவித்துள்ளார்.
ஆப்கான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பிரான்சு நாட்டு ராணுவ பயிற்சியாளர்கள்தாம் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்ட ஆப்கான் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார் என கருதப்படுகிறது.
துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் தாலிபான் ஆதரவாளர் என கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆப்கானில் பயிற்சியை நிறுத்திவைக்க பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி உத்தரவிட்டுள்ளார். ஆப்கான் ராணுவ வீரர் வெளிநாட்டு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டத்தை அங்கீகரிக்க இயலாது என சர்கோஸி தெரிவித்துள்ளார். நிலைமைகளை குறித்து ஆராய பிரான்சு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெரால்ட் லோங்கெட்டை சர்கோஸி ஆப்கானிற்கு அனுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என சர்கோஸி கூறினார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பிரான்சு நாட்டு படையினர் ஆப்கானில் தொடர்வது குறித்து முடிவுச்செய்யப்படும்.
தாலிபான் போராளிகளிடம் இருந்து வலுவான தாக்குதல்களை எதிர்க்கொண்டு வரும் நேட்டோ படையினருக்கு, நேற்றைய சம்பவமும், தொடர்ந்து பிரான்சு நாட்டுப் படையினர் பயிற்சி அளிப்பதில் இருந்து வாபஸ் பெற்றதும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 3,600 பிரான்சு நாட்டு ராணுவ வீரர்கள் ஆப்கானில் உள்ளனர். பிரான்சு ராணுவ தலைமையகம் அமைந்திருக்கும் கபிஸா மாகாணத்தில் கடந்தவாரம் நடந்த தாக்குதலில் 2 பிரான்சு நாட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கான் ராணுவ வீரரின் வேடமிட்டு வந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டார். தாக்குதலுக்கான பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டது.
2008-ஆம் ஆண்டு கிழக்கு காபூலில் நேட்டோ மீது நடத்தப்பட்ட தாலிபான் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு ஆப்கானில் பிரான்சு நாட்டு ராணுவத்திற்கு கிடைத்துள்ள பலத்த அடியாக இச்சம்பவம் கருதப்படுகிறது.
2001-ஆம் ஆண்டு ஆப்கானை அமெரிக்கா தலைமையில் நேட்டோ படையினர் ஆக்கிரமித்த பிறகு 82 பிரஞ்சு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment