Monday, January 9, 2012

பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – பாப்புலர்ஃப்ரண்ட்

Beemapalli Police Firing
கோழிக்கோடு:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி பீமா பள்ளி. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ரெளடி ஒருவர் பணவசூலில் ஈடுபட்டது தொடர்பான பிரச்சனை மோதலாக வெடித்தது. இச்சிறு மோதலை வகுப்பு மோதலாக சித்தரித்து ஆறு முஸ்லிம்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கமிஷன், போலீஸ் அதிகாரிகளில் சிலரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலேயே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என அறிக்கையில் கூறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை முன்மாதிரியாக தண்டிக்க வேண்டும் என கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீத் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பீமா பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திய ராமகிருஷ்ணன் கமிஷன் அறிக்கையை மேற்கோள்காட்டி பத்திரிகையாளர்கள் குறிப்பிடுவது என்னவெனில் போலீஸ் தன்னிச்சையாக துப்பாக்கிச்சூடு நடத்தும் முடிவை எடுத்தது என்பதாகும்.
மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர் ஆகியோர் உள்பட எக்ஸ்க்யூட்டிவ் மாஜிஸ்ட்ரேட்டுகள் எவரும் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கவில்லை என அவர்கள் கமிஷனுக்கு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கொம்பன் ஷிபு என்ற கிரிமினலின் பணவசூலை குறித்து கேள்வி எழுப்பியதால் உருவான சிறிய மோதலை வகுப்புவாத கலவரமாக சித்தரித்து ஆறு முஸ்லிம்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை முழுமையாக வெளிக்கொணர வேண்டும். அன்றைய துணை கமிஷனராக பதவி வகித்த எ.வி.ஜார்ஜின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்த முந்தைய அரசின் உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் தயாராகவில்லை.
வெறும் துறைசார்ந்த விசாரணையில் ஒதுக்க திட்டமிட்ட இவ்வழக்கை நீதிமன்றம் தலையிட்டதால் நான்கு அதிகாரிகள் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்கை பதிவுச் செய்யும் நிர்பந்தம் முந்தைய இடதுசாரி அரசுக்கு ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியது அத்தியாவசியமாக இருந்தது என நியாயப்படுத்திய டி.ஜி.பி.ஜேக்கப் புணூஸ் மீதும் விசாரணை நடத்துவது அவசியமாகும்.
முந்தைய வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி அரசின் ஆட்சியில் காசர்கோட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் போலீஸாரால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட சம்பவமாகும்.
வட இந்திய மாநிலங்களில் மட்டும் நடந்துவரும் போலி என்கவுண்டர் கொலைகளுக்கு சமமானது இச்சம்பவம். போலீசாரின் வெறியாட்டைத்தை கேரளத்தில் அனுமதிக்கக் கூடாது. கொலையாளிகள் போலீசார் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்த இடதுசாரி அரசின் கொள்கையை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு திருத்தவேண்டும்.” இவ்வாறு பி.அப்துல் ஹமீது கூறியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment