மொரோக்கோ மன்னர் 6 ஆவது முஹம்மத் இஸ்லாமியவாதியான பிரதமர் அப்துல் இலாஹ் பின் கீரான் தலைமையிலான புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளார். தேர்தல் இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் ‘நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி‘ 107 ஆசனங்களைப் பெற்று முதன்மை நிலையை அடைந்திருந்தது. மொரோக்கோ பாராளுமன்றத்தில் மொத்தம் 395 ஆசனங்கள் உள்ளன. புதிய அரசாங்கம் ஒரு கூட்டரசாங்கமாகவே அமைகிறது.அறபுலகின் மிகவும் பழமைவாய்ந்த மன்னர் ஆட்சியான மொரோக்கோவில் ஜனநாயக சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. சென்றவருடம் ஜூலையில் இடம்பெற்ற பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பின் பிரகாரம், இச்சீர்திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதன் மூலம் மன்னரது அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது.
புதிய அரசாங்கத்தில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி ஆகக் கூடிய அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுள்ளது. நீதி அமைச்சு உள்ளிட்ட 11 அமைச்சுப் பதவிகள் அக்கட்சிக்குக் கிடைத்துள்ளன.
கூட்டணியில் 60 ஆசனங்களை வென்ற இஸ்திக்லால் (சுதந்திர) கட்சி, தாரளவாத வெகுசன இயக்கம் ஆகியனவும் இடம்பெறுகின்றன.
அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பொன்று, பின் கீரான் சிறந்த முறையில் புதிய அரசாங்கத்தை வழிநடாத்துவார் என 80 வீதமான மொரோக்கோ மக்கள் நம்புவதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி மீள்பார்வை
No comments:
Post a Comment