Wednesday, January 4, 2012

அமெரிக்க போர் கப்பல் மீண்டும் வந்தால் கடுமையான பதிலடி – ஈரான் எச்சரிக்கை


டெஹ்ரான்:ஈரான் கடற்படையின் போர் ஒத்திகையை தொடர்ந்து ஒமான் சமுத்திரத்தை நோக்கி பின்வாங்கிய அமெரிக்க போர்கப்பல் மீண்டும் பாரசீக ஆழ்கடலுக்கு திரும்பினால் கடுமையான பதிலடியை கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை மீண்டும் விடுக்கமாட்டோம் என ஈரானின் கடற்படை தளபதி அதாவுல்லாஹ் ஸாலிஹி கூறியதாக தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், எவ்வகையிலான பதிலடி என்பது குறித்து ஸாலிஹி விளக்கவில்லை. பிராந்தியத்தில் 10 தினங்களாக நடந்து வந்த போர் ஒத்திகையை திங்கள்கிழமை ஈரான் கடற்படை பூர்த்திச் செய்தது.
போர் ஒத்திகையின் போது மத்தியதூர மற்றும் நீண்டதூர ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது. ஈரான் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக சர்வதேச அளவிலான நிர்பந்தம் அதிகரித்து வரும் வேளையில் தான் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது சர்வதேச அளவிலான தடைகளை திணித்தால் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என அந்நாடு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அணுகுண்டு தயாரிப்பதாக மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், அணுசக்தி மின்சார தேவைகளுக்காகவே அணுசக்தியை உபயோகிப்பதாக கூறியுள்ளது. இதற்கிடையே ஈரான் மீதான தடையை பலப்படுத்த பிரான்ஸ் ஐரோப்பிய யூனியனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் அணுஆயுத உபகரணங்களை தயாரிப்பதாக பிரான்ஸ் குற்றம் சாட்டுகிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, பொருளாதார நிறுவனங்கள் மீது தடை ஏற்படுத்த ஐரோப்பிய யூனியனுக்கு பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கோரிக்கை விடுத்துள்ளார் என்றும், இதற்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாகவும் பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலன்ஜுப்பெ பிரஞ்சு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment