ஒரு பக்கம் கண்டனம்… இன்னொரு பக்கம் ஆதாரமில்லை என அறிக்கை: மோடி விவகாரத்தில் முரண்படும் நீதித்துறை
ஆமதாபாத்: குஜராத் கலவரத்தை அடக்க நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, அலட்சியம் காட்டியது என்று மாநில உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என உச்சநீதி மன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்த முரண்பட்ட நிலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் கலவரத்தை வேண்டுமென்றே நரேந்திர மோடி அரசு தடுக்கத் தவறிவிட்டது என குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும் சேதம் அடைந்த 500-க்கும் மேற்பட்ட மதவழிபாட்டு தலங்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுக்கு எதிராக ஒரு உயர்நீதிமன்றம் இத்தனை கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது இதுவே முதல்முறை. எனவே இது மோடிக்கு ஒரு ‘கறுப்பு புதன்கிழமை’ என வர்ணித்தனர் அரசியல் பார்வையாளர்கள்.
மோடி அரசுக்கு கண்டனம்
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இதில் உயிரிழந்தனர்.
இந்த கலவரத்தில் சேதம் அடைந்த மத வழிபாட்டு தலங்களுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குஜராத் இஸ்லாமிய நிவாரண குழு சார்பில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி (பொறுப்பு) பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறினார்கள். நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசு, கோத்ரா ரெயில் எரிப்புக்குப்பின் நடைபெற்ற கலவரத்தை தடுக்க தவறிவிட்டதாக, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அந்தத் தீர்ப்பில், “கலவரத்தை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் மாநில அரசு செயல்பட்டதால் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் மத வழிபாட்டு தலங்களுக்கு சேதம் ஏற்பட்டது.
அவற்றை பழுதுபார்த்து தேவையான நஷ்டஈடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும். கலவரத்தின்போது சேதம் அடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் வழிபாட்டு தலங்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள 26 முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் மாவட்டங்களில் இருந்து இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று நஷ்ட ஈட்டுத் தொகை பற்றி முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து 6 மாதங்களுக்குள் உயர்நீதிமன்றத்துக்கு அவர்கள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
முன்னதாக, மாநில அரசு சார்பில் வாதாடிய வக்கீல், கலவரத்தின்போது அழிக்கப்பட்ட அல்லது சேதம் அடைந்த வழிபாட்டு தலங்களை பழுது பார்த்து சீரமைப்பதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என்றும், இந்த மனு அரசியல் சட்ட 27-வது பிரிவுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார். இந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஹக்கிம், “வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருக்கும் இந்த தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறி வரவேற்றுள்ளார்.
“குஜராத் கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததற்கு மாநில அரசே பொறுப்பு என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப்பதும் இதுவே முதன் முறையாக இருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.
மோடிக்கு எதிராக ஆதாரமில்லை- சிறப்பு புலனாய்வு குழு
இதற்கிடையே, இந்தக் கலவரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் “கலவரத்தை தடுக்க முதல்வர் நரேந்திரமோடி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை” என்று கூறியுள்ளது.
குஜராத் கலவரத்தை அடக்க மோடி அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பாரா மோடி… அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவுப் படி நிரபராதி எனக் கூறிக் கொண்டு அந்தத் தீர்ப்பை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவாரா? பார்க்கலாம்!
-என்வழி செய்திகள்
No comments:
Post a Comment