Thursday, March 8, 2012

சமாஜ்வாதி கட்சியின் வெற்றியின் பின்னணி முஸ்லிம்கள்- மாயாவதி!


Swing of Muslim votes did us in - Mayawati

லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தின் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு(எஸ்.பி) கிடைத்தததுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி கூறியுள்ளார்.


உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் மாயாவதி நேற்று ஆளுநர் ஜோஷியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு மாயாவதி அளித்த பேட்டியில் கூறியது:

சட்டப்பேரவை தேர்தலின் மத்திய கட்டத்தில் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி எழுப்பியது. இதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதன் மூலம் உயர்ஜாதி மற்றும் பிற்பட்ட வகுப்பினரின் வாக்குகளை கவர பா.ஜ.க முயன்றது. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிடுமோ என்ற பயம் எழுந்தது. காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருந்ததால் முஸ்லிம் வாக்குகள் சமாஜ்வாதிக்கு சென்றுள்ளன. மேலும் உயர்ஜாதியினரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று கருதியதால் முலாயம்சிங்கிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது தவிர உயர்ஜாதியினரின் வாக்குகள் பல கட்சிகளுக்கு சிதறி விழுந்துள்ளன. இதன் காரணமாக முலாயம் சிங்கின் கட்சிக்கு ஆதாயம் கிடைத்துள்ளது.

ஆனால் தலித் வாக்குகள் சிதறாமல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்துள்ளன. இதனால் எங்கள் கட்சி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இல்லையெனில் மேலும் பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்போம். சமாஜ்வாதி கட்சி நாங்கள் கொண்டுவந்த நல்ல திட்டங்களை எல்லாம் கிடப்பில் போடும். அப்பொழுது எங்களின் நல்லாட்சி குறித்து மக்கள் நினைப்பார்கள். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment