Saturday, March 3, 2012

பெங்களூர்:நீதிமன்ற வளாகத்தில் மோதல்: போலீஸ்காரர் படுகொலை!

Lawyers, law , hands, target , journos, cops , Bangalore court , complex
பெங்களூர்:பெங்களூர் நகர சிவில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் போலீஸ் கான்ஸ்டபிள் கொல்லப்பட்டார். வழக்கறிஞர்களின் தாக்குதலில் நகர துணை போலீஸ் ஆணையர் (மத்திய மண்டலம்) ரமேஷ் படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தில் 15 போலீஸார், 10 பத்திரிகையாளர்கள், 25 வழக்கறிஞர்கள் பலத்த காயமடைந்தனர்.
விவேக் நகர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் மஹா தேவய்யா தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ்காரர் ஆவார். நகரத்தில் தனியார் மருத்துவமனையில் வைத்து அவர் மரணமடைந்தார்.
சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை, சிபிஐ போலீஸார் பெங்களூர் சிட்டி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.
இதுதொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர்.
அப்போது, ஜனார்த்தன ரெட்டியை படம்பிடிக்க தொலைக்காட்சி வீடியோகிராபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் முயன்றனர். அதை அங்கு திரண்டிருந்த வழக்கறிஞர்கள் எதிர்த்தனர்.
மேலும், வழக்கறிஞர்களை குண்டர்கள் என்று ஏற்கெனவே வர்ணித்துள்ள நீங்கள் எதற்காக நீதிமன்றத்தில் நுழைகிறீர்கள் என்று வாதம் செய்தனர். இதில் வழக்குரைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பிறகு, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே சாலையில் நின்றுகொண்டு படம்பிடித்த விடியோகிராபர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது வழக்கறிஞர்கள் கற்களை வீசித் தாக்கினர்.
இதனால் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீஸார் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சிதறி ஓடினர். கலவரத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து கொண்ட வழக்கறிஞர்கள் அங்கிருந்து கற்கள், மேஜைகள், நாற்காலிகள் மற்றும் பாட்டில்களை வீசினர். நீதிமன்ற அறைகள் மூடப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் திணறினர்.
தொலைக்காட்சிகளுக்கு சொந்தமான கார்கள், ஓ.பி. வேன்களை குறிவைத்து வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினர். நீதிமன்ற வளாகத்தை சுற்றி போடப்பட்டிருந்த தடுப்பரண்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து, வழக்குறிஞர்களை நோக்கி போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். காலை 11.40 முதல் மாலை 4 மணி வரை வன்முறை நீடித்தது.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 30 மாவட்டத் தலைநகரங்களிலும் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ஆர்.அசோக், தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத், டிஜிபி சங்கர்பிதரி, பத்திரிகையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்பட பல அரசு உயரதிகாரிகளுடன் முதல்வர் சதானந்த கெளடா ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அசோக்குடன் சிட்டிசிவில் நீதிமன்ற வளாகத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம்ஜித்சென் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். இச்சம்பவம் குறித்து சிட்டிசிவில் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.புதிஹால், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.எல்.மஞ்சுநாத், ஸ்ரீதர்ராவ் உள்ளிட்ட பல நீதிபதிகள் விவாதித்தனர்.
பத்திரிகையாளர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் சதானந்த கெளடா அறிவித்தார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment