புதுடெல்லி:கூடங்குளம்
அணு உலை எதிர்ப்பாளர்கள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறிய
கருத்துக்களுக்கு இந்தியாவின் முக்கிய அறிவு ஜீவிகள் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்,
முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி ஜே.எம். லிங்டோ, அணுசக்தி கட்டுப்பாட்டு
வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 17 பேர் தங்களது
கடும் எதிர்ப்பை தெரிவித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பது:
‘கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில்
வெளிநாட்டு நிதி உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குப் பங்கு
உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதேபோல மரபணு மாற்றம் செய்யப்பட்ட
பயிர்கள் குறித்து தெரிவித்த கருத்துகளும் தவறானவை. இத்தகைய தூண்டுதலில்
ஈடுபடும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தாதது ஏன் என்று
அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நீங்கள் கூறிய கருத்துகள் மிகவும்
முரண்பாடானவை, கொஞ்சமும் உண்மை இல்லாதவை. இதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு
பங்கு உள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. அரசே இத்தகைய பிரச்னையை உருவாக்கி
அதை வெளிப்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அணு உலை எதிர்ப்பாளர்கள்
அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
அரசின் அனைத்து கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள் நல்லவர்கள் என்றும்,
கொள்கைகளை நியாயமான காரணங்களுக்காக எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு
விரோதமானவர்கள் என்று விமர்சிக்கப்படுகின்றனர்.
இரு மிக முக்கியமான பிரச்னையில் அமெரிக்க
சக்திகளின் செயல்பாடு உள்ளது. ஆனால் அது குறித்து அரசு விசாரணை நடத்தத்
தயாராக இல்லை. ஆனால் நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்களை எதிர்ப்பாளர்களாக
சித்தரிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment