6 Mar 2012
புதுடெல்லி/கோவை:கூடங்குளம்
அணுமின்நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களுக்கு
கொடுமை இழைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து அணுசக்தி எதிர்ப்பாளர்கள் வருகிற
15-ஆம் தேதி கூடங்குளம் நோக்கி பேரணி நடத்துகின்றனர்.
கூடங்குளம் சலோ பேரணியில் நாட்டின்
பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் பங்கேற்பார்கள் என்று கோயலிசன்
ஃபார் நியூக்ளியர் டிசார்மெண்ட் அண்ட் பீஸ் ஆர்வலர் பி.கே.சுந்தரம்
அறிவித்துள்ளார்.
அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்களின்
பீதியை பேச்சுவார்த்தை மூலம் அகற்றும் வரை அணுமின் நிலையத்தின்
செயல்பாடுகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
போராட்டக்காரர்களுடன் உடனடியாக
பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்கவேண்டும் என்றும், கூடங்குளம்
சுற்றுவட்டார மக்களின் பீதியை களைவதற்கு பதிலாக அவர்களுக்கு ஊறு
விளைவிப்பதற்கான முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களான
அருணா ராய், ஹர்ஷ் மந்தர், அருந்ததி ராய், ராமச்சந்திர குஹா,ரொமீலா தாப்பர்
ஆகியோர் கையெழுத்திட்ட கூட்டறிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு உதவியை பெறும் அரசு சாரா
நிறுவனங்களுக்கு நாட்டின் பிரச்சனைகளில் அக்கறையில்லை என்று பிரதமர் கூறிய
கருத்துக்கள் நகைப்பிற்கிடமானது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
அணுமின் நிலையங்களில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரியாக்டர்களை(உலை)
நிறுவியும், அணுசக்தி பொறுப்பு சட்டத்தில்(nuclear liability act) கலப்படம்
செய்தும் நாட்டின் நலன்களை பலிகொடுத்தது மத்திய அரசு என்று அவர்கள்
குற்றம் சாட்டினர்.
அணுமின்நிலையங்களின் பாதுகாப்பை குறித்து
சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளையும் உட்படுத்தி விரிவான ஆய்வை
நடத்தவேண்டும் என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதனிடையே, மக்கள் நல்வாழ்வில் சிறிதும்
அக்கறையில்லாத பாரதீய ஜனதா கட்சி, வெளிநாட்டு உதவியுடன் கூடங்குளம்
அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கையை
மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment