இஸ்தான்புல்:ஈராக் எல்லையில் துருக்கி ராணுவத்தின் விமானத் தாக்குதலில் 35 குர்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உர்துகான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை ஈராக் எல்லையை ஒட்டிய குர்து கிராமத்தில் நடந்த தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது என்றும், இச்சம்பவத்திற்காக வருந்துவதாகவும் உர்துகான் கூறியுள்ளார். இச்சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்துவதாக அதிபர் அப்துல்லாஹ் குல் கூறியுள்ளார்.
தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த துருக்கி அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அதேவேளையில் இச்சம்பவத்தை கண்டித்து குர்து புரட்சி அமைப்பான குர்திஸ்தான் வர்க்கேர்ஸ் பார்டி(பி.கெ.கெ) துருக்கியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டுப் படுகொலைக்கு பதில் அளிக்கவேண்டும். போராட்டத்தின் மூலம் கணக்கை தீர்க்கவேண்டும் என பி.கே.கேயின் ஆயுதப்பிரிவு கமாண்டர் பஹோஸ் எர்தல் அழைப்பு விடுத்துள்ளார்.
முக்கிய குர்து ஆதரவு கட்சியான பீஸ் அண்ட் டெமோக்ரேடிக் கட்சி(பி.டி.பி) இத்தாக்குதலை கண்டித்துள்ளது. தாக்குதல் மூலம் சாதாரண மக்களை கூட்டுப் படுகொலை செய்துள்ளதாகவும், ஜனநாயகரீதியில் இதனை எதிர்க்கவேண்டும் எனவும் அக்கட்சி கூறியுள்ளது. இத்தாக்குதல் தவறுதலாக நடந்தது என துருக்கி விளக்கமளித்துள்ளது. ஆனால், குர்து புரட்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஈராக் எல்லையை தாண்டி அத்துமீறி நுழைந்த புகையிலை கடத்தல் காரர்கள்தாம் கொல்லப்பட்டார்கள் என ஆளுங்கட்சியின் தலைவர் ஹுஸைன் ஸெலிக் கூறுகிறார்.
தென்கிழக்கு எல்லையில் குர்து புரட்சியாளர்கள் நடத்தி வந்த ரகசிய நடவடிக்கைக் குறித்து தகவல் கிடைத்ததால் விமானத் தாக்குதல் நடத்தியதாக துருக்கி ராணுவம் கூறுகிறது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment