டெஹ்ரான்:ஹோர்முஸ் ஜலசந்தி மூடுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான் அறிக்கைப்போர் வலுவடைந்துள்ளது. ஜலசந்தியை மூடினால் வேடிக்கை பார்க்கமாட்டோம் என அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் என்ன செய்யவேண்டும்? என கூறுவதற்கு அமெரிக்காவிற்கு அதிகாரமில்லை என்றும், நாட்டின் விருப்பத்தை பாதுகாக்க எந்த மூலை வரையும் செல்வோம் என்றும் ஈரான் புரட்சிப்படை துணைத் தலைவர் ஹுஸைன் ஸலாமி கூறியுள்ளார்.
ஈரானின் பாதுகாப்பு தந்திரங்களை பிற நாடுகளிடம் விவாதித்து அல்ல தீர்மானிப்பது என காட்டமாக அவர் பதிலளித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தின் பெயரால் மேற்கத்திய சக்திகள் ஈரானின் மீது தடைகளை திணித்தால் முக்கிய எண்ணெய் வர்த்தக பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என கடந்த புதன்கிழமை ஈரான் துணை அதிபர் முஹம்மது ரஸா ரஹீமி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு எதிராக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
எண்ணெய் கப்பல்கள் சுமூகமாக செல்வதை தடுப்பதை வேடிக்கை பார்க்கமாட்டோம் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நியூலண்ட் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதேவேளையில் பிராந்தியத்தில் அமெரிக்க போர்க் கப்பல்களின் வருகை தீவிரமடைந்துள்ளது. விமானம் தாங்கி கப்பல்களான யு.எஸ்.எஸ் ஜோன் பி ஸ்டென்னிஸ், யு.எஸ்.எஸ் மொபைல் பே ஆகியன ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக சென்றதாக அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க கப்பல்களின் புகைப்படங்களை ப்ரஸ் டி.வி வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் போர் ஒத்திகை நடத்தும் ஈரானின் கப்பல் படை அமெரிக்க கப்பல்களை கண்காணித்து வருகிறது என கமாண்டர் அட்மிரல் ஹபீபுல்லாஹ் ஸயரி கூறியுள்ளார். சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அமெரிக்க போர்க் கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையை மீறினால் ராணுவம் எதிர்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், போர்க்கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்வது ஆப்கானில் அமெரிக்க படையினருக்கு தேவையான உதவியை வழங்குவதற்காக என பெண்டகனின் ஊடக செயலாளர் ஜார்ஜ் லிட்டில் அறிவித்துள்ளார். ஈரானின் எச்சரிக்கையை தொடர்ந்து சர்வதேச சந்தையில் சுத்திக்கரிக்கப்படாத கச்சா எண்ணெயின் விலை கடந்த இரண்டு தினங்களில் அதிகரித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment