28 Nov 2011
இஸ்லாமாபாத்:நேட்டோ தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொலைச் செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானில் எதிர்ப்பு பரவி வரும் சூழலில், அமெரிக்கா உடனான உறவை பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்ய உள்ளது.
பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானிற்கு சரக்குகளை கொண்டு செல்வதை தடை செய்வது, தூதரக, அரசியல், ராணுவ, ரகசிய புலனாய்வு ஆகிய துறைகள் உள்பட அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் தொடர்பு கொண்டிருக்கும் உறவை மறு பரிசீலனை செய்ய பாக்.பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஷம்ஸி விமானநிலையத்திலிருந்து 15 தினங்களுக்குள் வெளியேற அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விபரங்கள் கூறப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த உடனேயே ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் வழியாக சரக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, பாக்.ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நேட்டோ தலைவர் ஆண்டேர்ஸ் ஃபோக் ரஸ்மூஸன் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் பாக்.பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தாக்குதலை குறித்து அதிகமாக துக்கப்படுவதாகவும், இச்சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் கடிதத்தில் ரஸ்மூஸன் குறிப்பிட்டுள்ளார். ஆனால்,நேட்டோ நடத்திய தாக்குதலை அங்கீகரிக்க இயலாது என பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனிடம் தெரிவித்துள்ளார். நேட்டோவின் நடவடிக்கை மனித உயிர்களை அவமானப்படுத்துவதாகும் என அவர் ஹிலாரியை தொலைபேசியில் அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பனேட்டா, வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் நேட்டோ தாக்குதலில் கொல்லப்பட்ட பாக்.வீரர்களுக்கு அனுதாப அஞ்சலி செலுத்தியுள்ளனர். இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா-பாக்.உறவின் முக்கியத்துவத்தை தெரிவித்து இரு நாடுகளும் உறவை தொடர்ந்து பேணவேண்டும் என்றும், இத்தாக்குதலை குறித்த நேட்டோவின் விசாரணைக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸலாலா செக்போஸ்ட் மீது நேட்டோ ராணுவம் அக்கிரமமான முறையில் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதல் நடக்கும் வேளையில் தூக்கத்திலிருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். 13பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த செக்போஸ்ட் குறித்து நேட்டோ படையினருக்கு தெளிவாக தெரிந்த பிறகும் வேண்டுமென்றே தாக்குதலை நடத்தியுள்ளனர் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
கொல்லப்பட்ட பாக்.ராணுவ வீரர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சட்டங்கில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர். பாக்.ராணுவ தலைமை தளபதி அஷ்பாக் ஃபர்வேஸ் கயானி உள்பட உயர் ராணுவ அதிகாரிகள் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். ராணுவத்தினரின் மரணத்தை தொடர்ந்து கராச்சியில் அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.