14 Feb 2012
அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையின் நகலை சமூக் ஆர்வலர்களுக்கு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
குல்பர்க் சொஸைட்டி கூட்டுப்படுகொலை தொடர்பாக எஸ்.ஐ.டி அறிக்கையின் மீதான விசாரணையின் போது மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் எம்.எஸ்.பட்டிடம் இதனை விசாரணை குழு தெரிவித்தது.
குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையின் அறிக்கையை கோரி சமூக ஆர்வலர்களான டீஸ்டா ஸெடல்வாட், முகுல் சின்ஹா ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். குல்பர்கா சொஸைட்டி வழக்கின் விசாரணை நடைபெறும் வேளையில் நீதிமன்றம் டீஸ்டா மற்றும் முகுல் சின்ஹா ஆகியோரின் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்தது.
குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரிக்கும் விசாரணை அறிக்கையின் நகலை அளிக்கமுடியாது என்று எஸ்.ஐ.டி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதேவேளையில், குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கில் எஸ்.ஐ.டியின் அறிக்கை மீதான விசாரணை முடிவடைந்தது. நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கும்.
உண்மையான மனுதாரர்களுக்கு மட்டுமே நகலை அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எஸ்.ஐ.டிக்காக ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சி.ஜமுகர் கூறினார்.
டீஸ்டா உண்மையான மனுதாரர் அல்ல என்றும், அவர் பின்னர் கட்சிதாரராக இணைந்தார் என்றும் ஜமுகர் சுட்டிக்காட்டினார். ஸாகியா ஜாஃப்ரியும் தற்போது மனுதாரர் அல்ல என்றும், ஆகவே அவருக்கும் எஸ்.ஐ.டி அறிக்கையின் நகலை அளிக்க இயலாது என்று அவர் கூறினார்.
ஆனால்,அறிக்கையில் இறுதி தீர்ப்பு வரும் முன்பு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கட்சிதாரர்கள் அனைவருக்கும் அறிக்கையின் நகலை அளிக்கவேண்டும் என்று டீஸ்டாவின் வழக்கறிஞர் எஸ்.எம்.வோரா வாதிட்டார். எஸ்.ஐ.டி எல்லா ஆதாரங்களையும், ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தால் அவை மனுதாரர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
எஸ்.ஐ.டி அனைத்து ஆவணங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றால் அது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும் என்று சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் வழக்கறிஞர் ஐ.எம்.முன்ஷி கூறினார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 1000 பக்கங்களை கொண்ட அறிக்கையை எஸ்.ஐ.டி தயார் செய்துள்ளது. 2011 செப்டம்பர் மாதம் முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment