19 Feb 2012
பெங்களூர்:கர்நாடகா மாநிலம் பீதர்
மாவட்டத்தில் உள்ள ஈரானி காலனியில் போலீஸார் அத்துமீறி நுழைந்து
அட்டூழியத்தில் ஈடுபட்டதாக மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் வீடுகளில் நுழைந்து பெண்கள் உள்ளிட்டவர்களை தாக்கியதாகவும்,
காலனியில் இருந்து ஆண்களை பிடித்துச் சென்றதாகவும் புகாரில்
கூறப்பட்டுள்ளது.
பீதர் முனிசிபாலிட்டி கவுன்சிலரும், ஈரான்
காலனியை சார்ந்தவருமான ஃபாத்திமாவின் தலைமையில் 16 பெண்கள் மாநில மனித
உரிமை கமிஷனிடன் புகார் அளித்துள்ளனர். அதேவேளையில் திருடர்களை தேடி
காலனிக்கு சென்றதாக போலீஸ் கூறுகிறது.
கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி இச்சம்பவம்
நிகழ்ந்துள்ளது. ஈரான் வம்சாவழியைச் சார்ந்த 120 ஷியா முஸ்லிம்களின்
குடும்பங்கள் வசிக்கும் காலனியில் நள்ளிரவு 1.30 மணி அளவில் பெங்களூர்,
பீதர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த போலீசார் அத்துமீறி நுழைந்ததாக புகாரில்
கூறப்பட்டுள்ளது. தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து உதைத்து, புனித
திருக்குர்ஆனையும்,பொருட்களையும் வெளியே வீசியுள்ளனர். பெண்கள் மீதும்
அத்துமீறல்கள் நடந்துள்ளது. சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் பேணாமல் இந்த
அடக்குமுறையை கையாண்டுள்ளது போலீஸ். 40 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை பெங்களூர் மாநகர போலீஸ்
கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘ஈரானி
காலனியிலிருந்து 26 திருடர்களை பிடித்துள்ளோம். 65 லட்சம் ரூபாய்
மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டது’ என்று தெரிவித்தார். கைது
செய்யப்பட்ட நபர்களில் ஒன்பது பேரை நிரபராதிகள் என்று கருதி
விடுவித்ததாகவும் கூறுகிறார்.
பிப்ரவரி 4-ஆம் தேதி திருடர்கள் மற்றும்
வழிப்பறிக் கொள்ளையர்களை பிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட 200 போலீஸார் கொண்ட
குழு இந்த ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சிட்டி க்ரைம் ப்ராஞ்ச்,
சி.ஐ.டி அதிகாரிகள் வேடத்தில் பெண்களிடமிருந்து நகைகள் மற்றும் பைகளை
பறிப்பதுதான் இவர்களின் வேலை என்று ஜோதிபிரகாஷ் கூறுகிறார். காலனிக்கு
சென்ற வேளையில் கல்வீச்சு நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், பிப்ரவரி 4-ஆம் தேதி நடந்த
ரெய்டின் தகவல் இரண்டு வாரம் கழித்து வெளியிட்ட போலீசாரின் நடவடிக்கையில்
மர்மம் உள்ளது. காலனி வாசிகள் மனித உரிமை கமிஷனில் புகார் அளித்த பிறகே
ரெய்டு குறித்த செய்தியையும், திருடர்களை கைது செய்த தகவலையும் போலீஸ்
வெளியிட்டது. கைது செய்த நபர்கள் மீது பொய் வழக்குகளை சுமத்த போலீஸ்
திட்டமிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment