Tuesday, December 20, 2011

எனக்கெதிரான கைது உத்தரவு ஒரு ‘அரசியல் தாக்குதல்‘ – ஈராக் உப ஜனாதிபதி



Tareq Hasimi







ஈராக் உப ஜனாதிபதி தாரிக் ஹாஷிமி, தனக்கெதிராக வழங்கப்பட்டுள்ள கைது உத்தரவு ஒரு அரசியல் தாக்குதல் நடவடிக்கை எனக் கூறியுள்ளார். ஏனைய அரசியல்வாதிகளுக்கு எதிராக சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் முழுமையாக நிராகரித்துள்ளார்.
‘‘அவர்களது இலக்கு எனக்குத் தெரியும் – இது ஒரு அரசியல் தாக்குதல்‘‘ என அவர் கூறியுள்ளார். ஈராக்கிய ஷீஆ பெரும்பான்மை அரசாங்கம், ‘பயங்கரவாதம்‘ என்ற பெயரில் சுன்னி அரசியல்வாதியான தாரிக் ஹாஷிமி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

ஹாஷிமி, ஈராக்கில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் சுன்னி முஸ்லிமாவார். ஈராக்கில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய ஒரு சில நாட்களுள் இந்த முரண்பாடு வெடித்துள்ளது. இது ஷீஆ-சுன்னி முரண்பாடுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் என அஞ்சப்படுகிறது.
ஈராக்கிய பிரதமரும் ஷீஆ அரசியல்வாதியுமான நூரி மாலிக்கியுடன் பல அரசியல் தலைவர்கள், அங்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, இந்த முரண்பாடு மிகவும் ஆழம் அடைந்துள்ளது என குர்திஷ் பிராந்திய தலைவர் மஸூத் பர்ஸானி தெரிவித்துள்ளார்.
ஈராக்குக்கு வெளியே செல்வதற்கு, ஹாஷிமிக்கு அந்நாட்டு நீதிபதிகள் தடைவிதித்துள்ளனர்.
ஈராக்கில் பிரதமர் ஷீஆவாகவும் ஜனாதிபதி குர்திஷ் இனத்தவராகவும் உள்ளனர். உப ஜனாதிபதியான தாரிக் ஹாஷிமி சுன்னி முஸ்லிமாவார். தாம் தீர்மானம் எடுக்கும்போது கலந்தாலோசிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக சுன்னிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment