டெல்அவிவ் இஸ்ரேலியர்களின் கடன் அட்டை விபரங்கள் கணினி ஹேக்கர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தங்கள் மீது நடத்தப்படும் சைபர் தாக்குதல் தீவிரவாத தாக்குதலாக எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
முன்பு அமெரிக்கா இதுபோன்ற சைபர் தாக்குதல் நடத்தப்பட்டால் தாங்கள் ராணுவ நடவடிக்கை மூலம் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்திருந்ததை மேற்கோள்காட்டி டெல் அவிவ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இணையதளத்தில் சுமார் 20,000 இஸ்ரேலியர்களின் கடன் அட்டை மற்றும் அவர்களின் இன்னும் பிற விவரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சைபர் தாக்குதலை தீவிரவாத தாக்குதலாக கருதவேண்டும் என்று இஸ்ரேலின் வெளியுறவு துணை அமைச்சர் டேனி அவலான் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களின் மீது எதிர்தாக்குதல் நடத்தும் அளவுக்கு தங்களிடமும் சக்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா தங்கள் இணையதளத்தின் மீது தாக்குதல் நடத்தினால் அது போர் பிரகடனமாக பார்க்கப்படும் என்றும் ஏவுகணைகள் மூலம் இதற்கு எதிர்த் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியது தங்களுக்கு நல்ல முன்னுதாரணம் என்றும் டேனி அவலான் தெரிவித்துள்ளார்.
ஒய்நெட் இணையதளத்தில் இந்த விபரங்கள் வெளியாகியிருந்தது. விரைவில் இஸ்ரேலின் ராணுவம் மற்றும் இன்னும் பிற துறைகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஒய்நெட் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஃபலஸ்தீன ஆக்கிரமிப்பிற்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒமர் என்னும் பெயரில் வந்த குறுந்தகவல் மூலம் தெரிந்தது என்றும் இதனைத் தொடர்ந்து ஹேக்கர்களால் வெளியிடப்பட்ட தகவல்களை பரிசோதித்ததில் 20,000 கடன் அட்டை விபரங்கள் உண்மை என்பது தெரியவந்தது. மேலும் ஹேக்கர் குழு தாங்கள் பிடிபடாமல் இருக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றும் அவர்களை பிடிக்க இண்டர்போலை அழைக்க உள்ளதாகவும் டெல் அவிவ் தெரிவித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment