22 Feb 2012
புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் டெட்டனேட்டர் ஜார்கண்ட் மாநிலம் மிஹிஜாமில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தான் கண்டதாக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தும்காவைச் சார்ந்த ரோஹித் ஜா என்பவர் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) யிடம் அளித்த வாக்குமூலத்தில், தேவேந்திர குப்தாவும், ராம்ஜி கல்சங்க்ராவும் இணைந்து ராஞ்சியில் இருந்து டெட்டனேட்டரை வாங்கியதாக கூறியுள்ளார். ஜாவின் வாக்குமூலத்தை என்.ஐ.ஏ பதிவுச்செய்துள்ளது.
தேவேந்தர் குப்தா அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். ராம்ஜி கல்சங்க்ராவை என்.ஐ.ஏ தேடி வருகிறது.
ரோஹித் ஜா அளித்த வாக்குமூலம்:
2003 டிசம்பர் மாதம் தும்காவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் முகாமில் வைத்து தேவேந்தர் குப்தாவை முதன்முறையாக கண்டேன். மிஹிஜாம் அலுவலகத்தில் ராம்ஜி கல்சங்க்ராவும், குப்தாவும் படுத்திருந்த கட்டிலுக்கு அடியில் பழைய நாளிதழ் பேப்பரில் பொதிந்த நிலையில் டெட்டனேட்டர் காணப்பட்டது. அதில் எலக்ட்ரிக் வயர் மூலம் கனெக்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது.
“நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்” என்று குப்தாவிடம் வினவியபொழுது, அவர் புன்னகைக்க மட்டுமே செய்தார். ராஞ்சியில் மனோஜ் என்பவரை சந்தித்துவிட்டு இருவரும் வந்தது எனக்கு பின்னர் புரிந்தது. மனோஜ் ராஞ்சியில் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆவார்.
நான் கட்டிலுக்கு அடியில் டெட்டனேட்டரை பார்த்ததும், குப்தா அதனை ஒரு பையில் திணித்து அலுவலகத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் கொண்டு வைத்தார். அமித் சவுகானும், ராஜேந்திர பஹல்வானும் என்னுடன் வசித்து வந்தனர். (இருவரையும் என்.ஐ.ஏ தேடிவருகிறது)அங்கு வைத்து அமித் சவுகான் வெடிக்குண்டில் நிரப்புவதற்கு சைக்கிளில் உபயோகிக்கும் பெல்லட்ஸ்(குறுணைகள்)வாங்கினார். இவற்றை வாங்க செல்லும்போது என்னை உடன் அழைத்துச் செல்லவில்லை. அமீத் சவுகானின் வசம் இருபது அல்லது இருபத்தி ஐயாயிரம் ரூபாய் இருந்தது. செலவுகளை அவர் கவனித்துக்கொண்டார். அத்துடன் தான்பாதில் ஒரு மஸ்ஜிதுக்கும் அமீத் சவுகான் சென்றார். அங்கிருந்து சில உருது மொழியிலான புத்தகங்களையும், காலண்டர்களையும் வாங்கிக்கொண்டார்.
2008 அக்டோபர் மாதம் பிரக்யாசிங் தாக்கூரும் இதர நபர்களும் கைதானதை தொடர்ந்து நான் குப்தாவிடமிருந்து பிரிந்துவிட்டேன். இவ்வாறு ரோஹித் ஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமீத் சவுகானை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு என்.ஐ.ஏ 2 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸில் இருந்து கண்டெடுத்த டெட்டனேட்டரின் ஃபோட்டோவை காண்பித்த பொழுது, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இதே போன்றதொரு டெட்டனேட்டரை கண்டதாக ஜா கூறினார்.
நன்றி தூது ஆன்லைன்