சென்னையில் மேலும் ஒரு மணிநேரம் – தொழிற்சாலைகளுக்கு 40 சதவீத ‘பவர் கட்’!
சென்னை: சென்னை மாநகரில் மேலும் ஒரு மணிநேரம் அதிகாரப்பூர்வ மின்வெட்டு அமலுக்கு வருகிறது. இனி தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும்.
அதேபோல தொழிற்சாலைகளுக்கான உயர் மின்னழுத்த சப்ளைக்கு விதிக்கப்பட்ட 20 சதவீத மின்வெட்டு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாளுக்கு சுமார் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு நாளுக்கு 7 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தினமும் 4500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர நிலவரம்…
சென்னையில் அதிகாரப்பூர்வமாக தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு உள்ளது. ஆனால் தினசரி முன்னறிவிப்பு ஏதுமின்றி சில மணி நேரங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுவிடுகிறது. பராமரிப்பு என்ற பெயரில் தினமும் நான்கைந்து பகுதிகளில் மின்சாரத்தை பகல் முழுவதும் நிறுத்துவதும் நடக்கிறது.
மற்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. தொழிற்சாலைகளில் 20 சதவீதம் மின் வெட்டு கடைபிடிக்கப்படுகிறது. புதிய மின் திட்டங்களை உரிய காலத்தில் தொடங்காததும், ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்களை சீராக முறைப்படி பராமரிக்காததும், நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் மின் வாரியம், பணம் செலவழித்து மற்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவு மின்சாரத்தை வாங்க இயலாமல் இருப்பதும் தான் மின் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என்று காரணங்களை அடுக்கி வருகிறது அரசு.
திறமையான மின் நிர்வாகமின்மை, காற்றாலை மின்சாரத்தை முறையாக பயன்படுத்தாமை, மத்திய அரசுடன் பேசி மின் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் பெறாமல் இருக்கும் ஆட்சித் தலைமை போன்றவைதான் உண்மையான காரணங்கள். மறைமுக காரணமாக, கூடங்குளம் திட்டப் போராட்டத்தை முடக்கும் சதி இது என்கிறார்கள்.
இத்தனை காரணங்களை இப்போது அடுக்கும் ஜெயலலிதா, எந்த அடிப்படையில் மூன்றே மாதங்களில் மின்வெட்டை சீர்ப்படுத்துவதாக வாக்களித்தார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது அரசு. மக்களின் அபார வெறுப்பை எட்டே மாதங்களில் சம்பாதித்துள்ளது ஜெயலலிதா அரசு.
மூன்று மாதங்களில் நிலைமை சரியாகும் என்று கூறிவந்த முதல்வர் இப்போது 2013-ல் சரியாகிவிடும் என கூற ஆரம்பித்துள்ளார். அதுவரை 8 மணி நேர மின்வெட்டுதான் தலையெழுத்து என்ற நிலைதான் இப்போது நிஜம்.
சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் உள்ள 8 – 12 மணி நேர மின்வெட்டு மக்களிடம் கடும் அவதியை ஏற்படுத்தி உள்ளது.
தொழிற்சாலைகளிலும் திட்டமிட்டப்படி உற்பத்தியை நடத்த முடியாத நிலை. இதனால் தமிழகம் முழுக்க போராட்டம் வெடித்துள்ளது.
இப்போது உயர்அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய ஜெயலலிதா, மின்தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்த வழி முறைகளை அறிக்கையாக தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மின்வாரிய அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.
சென்னைக்கு கூடுதல் மின்வெட்டு
இந்த அறிக்கையை தமிழக அரசிடம் இன்று மின் வாரிய அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், சென்னை மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அளவை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மிச்சமாகும் கணிசமான மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாவட்டங்களுக்கு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் அமலில் உள்ள மின்வெட்டில் மாற்றங்கள் வர உள்ளது. சென்னையில் தற்போது ஒவ்வொரு பகுதி வாரியாக தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இனி இந்த மின்வெட்டு 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.
சென்னை நகருக்கு தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கூடுதலாக ஒரு மணி நேரம் மின் வெட்டை சென்னையில் அமல்படுத்தும் பட்சத்தில் தினமும் 300 மெகாவாட் மின்சாரம் மிச்சமாக வாரியத்துக்கு கிடைக்கும்.
சென்னையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது போன்று தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவித்து, மின்சாரத்தை மிச்சப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிற்சாலைகளுக்கு 20 சதவீத மின்வெட்டு உள்ளது.
இந்த மின்வெட்டு 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் பெரிய தொழிற்சாலைகளுக்கு 2 நாட்கள் மின்சார விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 700 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.
சென்னையில் மிச்சமாக கிடைக்கும் 300 மெகாவாட், தொழிற்சாலை விடுமுறையால் மிச்சமாக கிடைக்கும் 700 மெகா வாட்மூலம் மின்சார வாரியத்துக்கு தினமும் சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரத்தை சென்னை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக மாவட்டங்களில் உள்ள மின்வெட்டு நேரம் கணிசமாக குறையும். தற்போது சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 8 முதல் 12 மணி நேர மின்வெட்டு உள்ளது. இந்த மின்வெட்டு 6 முதல் 8 மணி நேரமாக குறையும்.
அதிகவிலையில் மின்சாரம்…
இதற்கிடையே வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது பற்றியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வெளிச்சதையில் ஒரு யூனிட் மின்சாரம் நேரத்துக்கு தகுந்தபடி ரூ.6 முதல் ரூ.16 வரை பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் மின்சாரம் மக்கள் நலன் கருதி, யூனிட் ஒன்றுக்கு 80 பைசாவுக்குதான் கொடுக்கப்படுகிறது.
இந்த உயர்ந்த விலை மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு மட்டும் வழங்கி, அதிக கட்டணம் வசூலிக்கலாமே என்ற யோசனையை ஜெயலலிதா ஏற்கவில்லையாம். ‘இதை பொதுமக்களுக்கு வழங்குவோம், கூடுதல் விலையை அவர்களிடமே பெறுவோம். அதற்கேற்ப விலையை உயர்த்தலாம்’ என்பது அவரது நிலை (‘போராட்டமா நடத்துறீங்க.. என்ன பண்றேன் பார்!’). அதாவது தொழிற்சாலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் நோக்கம்!
ஒருவேளை இப்படி மின்சாரம் வாங்கினால் 400 மெகாவாட் மின்சாரம் தினமும் கூடுதலாக கிடைக்கும். அதுபோல மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக தினமும் 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவற்றை வைத்து சமாளித்து விட முடியும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.
மக்கள் ஆத்திரம்
இதற்கிடையே மின் வெட்டை அமல்படுத்துவதில் பயங்கர குளறுபடிகள் நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். ‘எந்தெந்த நேரங்களில் மின்சாரம் வராது என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லித் தொலையுங்கள், அதற்கு ஏற்ப, வேலைகளை வைத்துக் கொள்கிறோம்,” என்று கூறும் அளவுக்கு மக்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கின்றனர்.
எனவே மாவட்டங்களுக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு அறிவிப்பு வெளியிடப்படும் போது, எந்தெந்த நேரத்தில் மின்சாரம் இருக்காது என்ற விவரம் தெளிவாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் புதிய மின் வெட்டு குறைப்பு நாளை மறுநாள் (20-ந் தேதி திங்கட்கிழமை) முதல் நடை முறைக்கு வருகிறது.
-என்வழி செய்திகள்
No comments:
Post a Comment