Saturday, March 10, 2012

இஸ்ரேல் உறவை இந்தியா மறுபரிசீலனை செய்யவேண்டும் – மணிசங்கர் அய்யர்!

Mani Sankar Aiyar
புதுடெல்லி:இஸ்ரேலுடன் ஏற்படுத்தியுள்ள தூதரக உறவை இந்தியா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் அய்யர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜ்காட் காந்தி சமாதியில் ‘ஜெருசலத்தை நோக்கிய சர்வதேச பேரணி’யில் கலந்துகொள்வதற்காக லெபனான் தலைநகர் பெய்ரூத்திற்கு செல்லும் இந்திய குழுவினர் மத்தியில் உரை நிகழ்த்தினார் மணி சங்கர் அய்யர்.

அவர் தனது உரையில் கூறியது: ‘ஃபலஸ்தீன் மக்களை வெளியேற்றிவிட்டு இஸ்ரேல் நாட்டை உருவாக்கிய நடவடிக்கையை துவக்கம் முதலே எதிர்த்து வந்த இந்தியா, தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து இருக்கவேண்டும். ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியா அந்த கொள்கையில் கலப்படம் செய்யக்கூடாது என்பது என் போன்றவர்களின் கருத்தாகும்.
காஸ்ஸாவிலும், மேற்கு கரையிலும் ஃபலஸ்தீன் மக்கள் கடுமையான துயரத்தை அனுபவிக்கும் சூழலில் இஸ்ரேலின் கொடூரங்களுக்கு எதிராக உலகம் குரல் எழுப்ப தாமதிக்க கூடாது என்று மணிசங்கர் அய்யர் கூறினார்.
இந்தியாவின் அரசியல் கட்சிகள் ஃபலஸ்தீன் விவகாரத்தை கூடுதல் வலுவாக முன்வைத்து மத்திய அரசை திருத்த முயலவேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய ராம்விலாஸ் பஸ்வான் எம்.பி கோரிக்கை விடுத்தார்.
பயங்கரவாதத்திற்கு வசதியை ஏற்பாடு செய்யும் இஸ்ரேலுடனான தூதரக உறவில் மாற்றம் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
ஸதனா, வஸீம் அஹ்மத், ராகிப் அஹ்மத், ஃப்ரோஸ் போர்வாலா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினர்.
ஃபலஸ்தீன் மக்களுக்கு ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தி ஜெருசலம் நோக்கி செல்லும் இந்திய குழுவினர் பெரும்பாலோருக்கு விசா மறுத்த பாகிஸ்தானின் நடவடிக்கையை இக்கூட்டம் கண்டனம் தெரிவித்தது. வெளி நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு இந்தியாவும், பாகிஸ்தானும் செயல்படுவதாக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
பாகிஸ்தான், ஈரான், துருக்கி, லெபனான் ஆகிய நாடுகளில் வழியாக செல்லும் இக்குழுவினர் இம்மாதம் 30-ஆம் தேதி பெய்ரூத்தில் லட்சக்கணக்கான மக்கள் அணி திரளும் ஃபலஸ்தீன் ஒற்றுமை பேரணியில் பங்கேற்பார்கள்.

No comments:

Post a Comment