Tuesday, January 24, 2012

காலித் மிஷ்அல் பதவி விலகலாம்?



  • PDF
Khaled-Meshaal
ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவரான காலித் மிஷ்அல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகலாம் என்ற செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வருடம் ஹமாஸ் அமைப்பின் உள்ளே புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்நிலையில் இந்த செய்தியை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை. இது ஊகமாகக் கூட இருக்கலாம்.

புதிய தலைமை ஒன்று வரவேண்டும் என்பதற்காகவே அவர் விலக நாடியுள்ளார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இறுதி முடிவை ஹமாஸின் மத்திய ஷூறா சபையே மேற்கொள்ளும் என ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிஷ்அல் 1996 இல் ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜோர்தானில் இருந்த அவர், பின்னர் சிரிய தலைநகரான டமஸ்கஸிற்கு இடம்பெயர்ந்தார்.
சில வாரங்களுக்கு முன்னர், ஹமாஸ் புதிய மூல உபாயமொன்றை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார். அறபுப் புரட்சியின் பின்னர் இஸ்லாமியவாதிகள் தேர்தலில் பெற்றுவரும் வெற்றிகள் காரணமாக, ஆயுதப் போராட்டத்தைவிட அரசியல் போராட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதே காலப் பொருத்தமானது என்பது அவரது கருத்து.
சிரிய அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு ஹமாஸ் ஆதரவளிக்க மறுத்துவருகின்றது. காலித் மிஷ்அலின் குடும்பம் சிரியாவிலிருந்து தற்போது ஜோர்டானின் தலைநகரான அம்மானுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஹமாஸின் பிரதித் தலைவரான மூஸா அபூ மர்ஸூக் கெய்ரோவுக்கு இடம் மாறியுள்ளார். மிஷ்அலுக்கு முன்னர் அபூ மர்ஸூக்கே அரசியல் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கெய்ரோவில் அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு ஹமாஸ் முயன்று வருகிறது.
காலித் மிஷ்அலை இஸ்ரேலியப் படையினர் அம்மானில் வைத்து கொலை செய்ய முயன்றனர். அதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். அப்போதைய ஜோர்தான் மன்னர் ஹுஸைன் அவர் மீது ஏற்றப்பட்ட நச்சு திரவத்திற்கு மாற்று மருந்தை வழங்கவேண்டும் என இஸ்ரேலை நிர்ப்பந்தித்திருந்தார். இஸ்ரேல் பின்னர் இதற்காக மன்னிப்புக் கோரியது.
இதேவேளை காலித் மிஷ்அல் கட்டார் நாட்டு முடிக்குரிய இளவரசர் ஷெய்க் ஹமத் பின் தமீம் அல்தானியுடன் ஜோர்தானுக்கு செல்லவுள்ளார். 1999 இல் அந்நாட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதன் பின்னர், அங்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment